ஒன்றிய அமைச்சர் தர்மேந்திரபிரதானுக்கு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!

5 Min Read

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம்: ‘‘ஹிந்தித் திணிப்பு இல்லை’’ என்று கூறுவது அப்பட்டமான பொய்!
தமிழ்நாடு எந்தவொரு மொழித்திணிப்பையும் ஏற்காது!

சென்னை, ஏப். 6 – ‘‘சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் இந்தித் திணிப்பு இல்லை என்று கூறுவது அப்பட்டமான பொய்’’ என்றும் ‘‘தமிழ்நாடு எந்தவொரு மொழித் திணிப்பையும் ஏற்காது’’ என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திரபிரதானுக்குப் பதில் அளித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பதாவது:–

தங்களின் கருத்துகள் மிகவும் பொறுப்பற்றவை மற்றும் அலட்சியமானவை என்பதோடு இந்தியா வின் பன்முகத்தன்மை, கூட்டாட்சி விழுமியங்கள் மற்றும் மாநிலங்களுக்கான மரியாதை ஆகியவற்றின் மீது கொண்டுள்ள ஆழ்ந்த அலட்சியத்தையே இவை பிரதிபலிக்கின்றன. தமிழ்நாடு # மும்மொழிக் கொள்கையை (Three Language Policy) உறுதியாக நிராகரிக்கிறது. இது ஏதோ ஒரு மொழிக்கு எதிரானது அல்ல; மாறாக மொழித் திணிப்பை எதிர்ப்ப தும், அரசியலமைப்புச் சட்ட  உரிமைகளைப் பாதுகாப்பது மாகும். முன்னதாக நாடாளுமன்றத்தில் தமிழர்களைப் பற்றி நீங்கள் பேசிய அவதூறு கருத்துகளும், அதனைத் தொடர்ந்து நீங்கள் கோரிய காலதாமதமான மன்னிப்பும், உங்களின் ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தை முறையையே உறுதிப்படுத்துகின்றன.

உங்களின் அதிகாரத் ‘துஷ்பிரயோக’த்தையே காட்டுகிறது!

“ஹிந்தித் திணிப்பு இல்லை” என்று நீங்கள் கூறுவது அப்பட்டமான பொய் மற்றும் நேர்மையற்ற செயலாகும். தமிழ்நாடு போன்ற ஹிந்தி பேசாத மாநிலங்களை, மிகக் குறைந்த விருப்பத் தேர்வுகளுடன் மூன்றாவது மொழியை ஏற்றுக்கொள்ளுமாறு ஒரு கொள்கை ரீதியாக நெருக்கடி கொடுக்கும் போதும், கல்விக்கான நிதி விடுவிப்பு அதனுடன் இணைக்கப்படும்போதும், அங்கே ‘சுய விருப்பம்’ என்ற பேச்சுக்கே இடமில்லை.

சமக்ர சிக்ஷா’ (Samagra Shiksha) திட்டத்தின்கீழ் வழங்கப்பட வேண்டிய 2,200 கோடி ரூபாய் நிதியை, ஹிந்தித் திணிப்பை ஏற்க மறுத்ததற்காகத் தமிழ்நாட்டைத் தண்டிக்கும் நோக்கில் சட்ட விரோத மாக நிறுத்தி வைத்திருப்பது உங்களின் அதிகாரத் ‘துஷ்பிரயோக’த்தையே காட்டுகிறது.

எந்தவொரு மொழித் திணிப்பையும்
தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது!

இவை ஒன்றிய அரசு விருப்பப்பட்டு வழங்கும் கருணைத் தொகையல்ல; வரிப்பணம் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்குச் சேர வேண்டிய உரிமைத்தொகை. இதனை எக்காரணம் கொண்டும் ஒரு மிரட்டல் கருவியாகப் பயன்படுத்த முடியாது.

ஒன்றைத் தெளிவாகத் தெரிவித்துக் கொள்கிறேன். நெகிழ்வுத்தன்மை என்ற போர்வையிலோ, நிதி நெருக்கடியின் மூலமாகவோ அல்லது தேசிய நலன் என்ற பெயரிலோ முன்னெடுக்கப்படும் எந்தவொரு மொழித் திணிப்பையும் தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது. இக்கொள்கை மாணவர்கள் மீது தேவையற்ற சுமையை ஏற்றுவதோடு, மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைத்து “ஒரே இந்தியா” எனும் ஒற்றைத்தன்மை கொண்ட கட்டமைப்பிற்குள் கொண்டுவர முயல்கிறது.

உங்களின் வீண் ஆரவாரமான பேச்சுகளுக்கு நடுவே, இந்த அடிப்படைக் கேள்விகளை நீங்கள் தவிர்க்கக் கூடாது, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் உண்மையில் எந்த ‘மூன்றாவது இந்திய மொழி’ கற்பிக்கப்படுகிறது? வட இந்தியாவில் உள்ள எத்தனை PM SHRI பள்ளிகளில் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழிகளும், பெங்காலி, ஒடியா, மராட்டி போன்ற மொழிகளும் உண்மையாகவே பயிற்றுவிக்கப்படுகின்றன?

உங்களுக்குச் சவாலாகவே
விடுக்கிறேன்!

எத்தனை கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது? கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை தமிழ் மற்றும் பிற தென்னிந்திய மொழி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்? சமஸ்கிருத வளர்ச்சிக்காக செலவிடப்படும் நிதியுடன் ஒப்பிடுகையில், தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியா போன்ற செம்மொழிகளின் வளர்ச்சிக்காக என்.டி.ஏ (NDA) அரசு எவ்வளவு செலவு செய்துள்ளது என்பதைத் தரவுகளுடன் உங்களால் சமர்ப்பிக்க முடியுமா? இதை உங்களுக்குச் சவாலாகவே விடுக்கிறேன்.

தமிழ்நாட்டில் பள்ளி உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்ற உங்களது கருத்து முற்றிலும் ஆதார மற்றது. பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்த முதலீட்டின் மூலம் இந்தியாவின் மிகவும் வலுவான பொதுக் கல்வி அமைப்பை உருவாக்கியுள்ளோம். அதிக மாணவர் சேர்க்கை மற்றும் நலத்திட்டங்களே இதற்கு சாட்சி.

ஹிந்தித் திணிப்புக்கு எதிரான எமது எதிர்ப்பு அச்சத்தினால் உருவானதல்ல. எமது தாய்மொழி தமிழ் ஒருபோதும் வலுக்குன்றாது. தமிழும், தமிழர்க ளும் ஒவ்வொரு வகைத் திணிப்பையும், பண்பாட்டு ஊடுருவலையும் எதிர்கொண்டு, எதிர்த்து நின்று வென்றுள்ளனர். இது எங்களின் கொள்கை, கண்ணியம் மற்றும் இந்தியாவின் உண்மையான பன்முகத்தன்மையைப் பாதுகாப்பது சார்ந்த விசயமாகும்.

இருமொழிக் கொள்கையை
ஒரு போதும் விட்டுக் கொடுக்க மாட்டோம்!

பகுத்தறிவு மற்றும் சமூகத்தில் அனைவரின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் உருவான, சிறந்த கல்வி முடிவுகளைத் தந்து கொண்டிருக்கும் எங்களது இருமொழிக் கொள்கையை நாங்கள் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம். தமிழ்நாட்டின் கல்வித் தரம் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி ஆகியவற்றில் தமிழர்கள் உலகளவில் முத்திரை பதித்து வருவதே எமது மொழிக் கொள்கையின் வெற்றிக்குச் சான்று. மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியும் இதில் ஆழமாக வேரூன்றியுள்ளன.

எங்களது வாதங்களைத் தரவுகள் மூலம் எங்களால் நிரூபிக்க முடியும், ஆனால், உங்களது வாதங்கள் வெறும் வெற்றுப் பேச்சுகளே தவிர, அதில் தரவுகள் ஏதுமில்லை.

பொதுக் கல்வியை நாங்கள் வெறும் செலவாகப் பார்க்காமல், சமூக முதலீடாகவே கருதுகிறோம்

தமிழ்நாட்டின் பள்ளிகள் நவீன கல்வியில் பின்தங்கி யுள்ளன என்று கூறுவது அறியாமையாகும். மாணவர் சேர்க்கை மற்றும் கற்றல் தரத்தில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. கடந்த அய்ந்து ஆண்டுகளில், தமிழ்நாடு அரசு உட்கட்டமைப்பில் பெரும் முன்னேற்றத்தை எட்டியுள்ளதுடன், 20 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ போன்ற முன்னோடித் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. திமுக தேர்தல் அறிக்கைப்படி, இத்திட்டம் 8 ஆம் வகுப்பு வரை நீட்டிக்கப்பட்டு, கூடுதலாக 15 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள். பொதுக் கல்வியை நாங்கள் வெறும் செலவாகப் பார்க்காமல், சமூக முதலீடாகவே கருதுகிறோம்.

“ஒவ்வொருஇந்தியக் குழந்தையும் கட்டாயம் மூன்று மொழிகளைக் கற்க வேண்டும்” என்ற இந்த அறிவிப்பை, தமிழ்நாட்டு மண்ணில் நின்று மக்களிடம் வாக்கு கேட்கும்போது உங்களால் கூற முடியுமா என நான் சவால் விடுகிறேன்.

மும்மொழிக் கொள்கையை
எடப்பாடி பழனிசாமி ஆதரிக்கிறாரா?

அதேபோல், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அவர்களும், அவரது என்.டி.ஏ. கூட்டணிக் கட்சிகளும் தங்களது நிலையைத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். பா.ஜ.க. ஆக்ரோஷமாக முன்னெடுக்கும் இந்த மும்மொழிக் கொள்கையை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?

பழனிசாமி அவர்கள் தமிழ்நாட்டு மக்களுடன் நிற்கிறாரா? அல்லது ஹிந்தியைத் திணிக்கத் துடிக்கும் டில்லி எஜமானர்களின் பக்கம் நிற்கிறாரா என்பதைத் தெளிவாக விளக்க வேண்டிய நேரம் இது

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *