முனைவர் அ. சிதம்பரநாதன் செட்டியார்
ஒரு பன்முக ஆளுமை பிறந்த நாள் இன்று (3.4.1907)
முனைவர் அ.சிதம்பரநாதன் செட்டியார் ஒரு சிறந்த தமிழறிஞர், கல்வியாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார். திராவிட இயக்கத் தலைவர்களுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தவர்.
அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகவும், பின்னாளில் அந்நிறுவனத்தின் துணைவேந்தராகவும் (பொறுப்பு) பணியாற்றினார்.
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் பயின்றபோது, அவருக்குத் தமிழ் கற்பித்த பேராசிரியர் களில் இவரும் ஒருவர். ஆசிரியர் அவர்களின் பேச்சாற்றலையும், எழுத்தாற்றலையும் கண்டு அவரைப் பாராட்டியவர்.
ஆசிரியர் திருமணத்தில் பங்கேற்பு
1958-இல் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சுயமரியாதைத் திருமணத்திற்கு அ.சிதம்பரநாதன் செட்டியார் வருகை தந்தார். அந்நாளில் ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர், ஒரு பகுத்தறிவு இயக்கத் திருமணத்தில் கலந்து கொண்டது அக்காலத்தில் பெரிய வரவேற்பைப் பெற்றது. மணமக்களை வாழ்த்திப் பேசிய அவர், ஆசிரியரின் அறிவுத்திறனைப் புகழ்ந்துரைத்தார்.
ஆங்கிலம்-தமிழ் அகராதி
சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட புகழ்பெற்ற ‘ஆங்கிலம் – தமிழ்’ அகராதியின் தலைமைப் பதிப்பாசிரியராகப் பணியாற்றியவர். இது இன்றும் ஒரு மிகச்சிறந்த வழிகாட்டி நூலாக உள்ளது. சங்க இலக்கியம் மற்றும் சிலப்பதிகாரம் குறித்து ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டவர். இவருடைய “Advanced Tamil Grammar” என்ற நூல் மிகவும் பிரபலமானது.இவர் தமிழ்நாடு சட்ட மேலவை உறுப்பினராகவும் (MLC) பணியாற்றியுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் திராவிடர் கழகக் கொள்கைகள் மீது மதிப்பு வைத்திருந்தவர். அண்ணா மற்றும் தந்தை பெரியார் ஆகியோருடன் கல்வி மற்றும் மொழி சார்ந்தவற்றில் கலந்துரையாடுபவர்.
இன்று (3.4.2026) கல்வியாளர் முனைவர் அ.சிதம்பரநாதன் செட்டியார் அவர்களின் 119ஆவது பிறந்த நாளாகும்.
– – – – –
புதுச்சேரி மாநிலத்தில் சுயமரியாதை திருமணச் சட்டம் சட்டமாக்கப்பட்ட நாள் (3.4.1971)

1967ஆம் ஆண்டு சென்னை மாநிலத்தின் சட்டபேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று, அறிஞர் அண்ணா தலைமையில் அமைந்திட்ட தி.மு.க. அமைச்சரவையின் முதல் சட்டமாக, தந்தை பெரியாரின் “சுயமரியாதை திருமணச் சட்டம்” சட்டமாக்கப்பட்டு, அதை தந்தை பெரியாருக்கு காணிக்கை ஆக்கினார் அண்ணா.
அதன்பின்பு 1971ஆம் ஆண்டு புதுச்சேரி மாநிலத்தில் எம்.ஓ.எச். பாரூக் தலைமையிலான தி.மு.க. அமைச்சரவை தமிழ்நாட்டைத் தொடர்ந்து சுயமரியாதை திருமணச் சட்டத்தை புதுச்சேரி மாநிலத்தில் சட்டமாக்கப்பட்ட நாள் தான் இன்று (3.4.1971)
