லக்னோ, மார்ச் 30 உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் புதிய பன்னாட்டு விமான நிலையம் திறக்கப்பட்டுள்ள நிலையில், ஒன்றிய பாஜக அரசின் செயல்பாடுகளைச் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் கடுமையாகச் சாடியுள் ளார். இந்த விமர்சனம் தற்போது அம்மாநில அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நொய்டா பன்னாட்டு விமான நிலையத் திறப்பு விழாவைத் தொடர்ந்து, இது குறித்து தனது அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ (X) தளத்தில் கருத்துப் பதிவிட்டுள்ள அகிலேஷ் பாஜக அரசின் நிர்வாகத்தை “ஊழல் நிறைந்த நிர்வாகம்” என்று வர்ணித் துள்ளார்.
அகிலேஷ் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள்
தமது சமூக வலைதளப் பதிவில், தற்போது மூடப்பட்டுள்ள பல்வேறு விமான நிலையங்களின் காணொலியைப் பகிர்ந்துள்ள அவர், பாஜக அரசின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்: செயல்பாடற்ற விமான நிலையங்கள்: கடந்த ஆண்டுகளில் திறக்கப்பட்ட 7 விமான நிலையங்களில், தற்போது 6 நிலையங்கள் செயல்பாட்டில் இல்லை என்றும், அவை மூடப் பட்டு விட்டன என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
சேவை அல்ல; பணம் சம்பாதிப்பது மட்டுமே
ஒன்றிய அரசின் ‘உடான்’ திட் டத்தின் கீழ், எந்தவொரு விமான நிலையத்தையும் முறையாக இயக்கவோ, அல்லது விமானச் சேவைகளைத் தடையின்றி வழங்கவோ பாஜக அரசுக்கு விருப்பமில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த விமான நிலையத் திட்டங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக உருவாக்கப்படவில்லை. மாறாக, பாஜக தனது நெருங்கிய கூட்டாளிகளுக்கு ஒப்பந்தங்களை வழங்கி, அதன் மூலம் லாபம் ஈட்டுவதற்காகவே பொதுப்பணத்தில் கோடிக்கணக்கான ரூபாயைச் செலவிடுவதாக அவர் சாடியுள்ளார்.
செயல்பாட்டில் உள்ள விமான நிலையங்களும் போதிய தரத்துடன் இல்லை என்று விமர்சித்துள்ள அகிலேஷ், “பாஜக அரசின் நோக்கம் பொதுமக்களுக்குச் சேவை செய்வது அல்ல; பொதுப்பணத்தைச் செலவிட்டுப் பணம் சம்பாதிப்பது மட்டுமே” என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார். அகிலேஷின் இந்த அதிரடி விமர்சனம், வரவி ருக்கும் காலங்களில் பாஜக மற்றும் சமாஜ்வாடி கட்சிக்கு இடையே அரசியல் மோதலை மேலும் தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப் படுகிறது.
