முத்தமிழறிஞர் கலைஞர் சொன்னதை எடுத்துக்காட்டி – திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஈரோடு மருத்துவமனைக்குப் பெரியார் பெயர் வைப்பதற்கு ‘முன்மாதிரி’ இல்லை என்று அரசு அதிகாரிகள் சொன்னார்கள்!
முன்மாதிரி இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி,
நான் சொல்வதையே ‘‘முன்மாதிரியாக’’ எடுத்துக்கொள்ளுங்கள்; முன்மாதிரி எப்போது வரும்? யாராவது ஒருவர் உண்டாக்கினால்தானே!

தாம்பரம், மார்ச் 19  ஈரோட்டில் மருத்துவமனைக்குப் பெரியார் பெயர் வைப்பதற்கு முன்மாதிரி வேண்டும் என்று அரசு அதிகாரிகள் சொன்னதற்கு, முதலமைச்சர் கலைஞர் அவர்கள், ‘‘முன் மாதிரி இருந்தால் சரி; முன் மாதிரி இல்லை என்றாலும் சரி, கவலைப்பட வேண்டாம். நான் சொல்வதையே ‘‘முன்மாதிரியாக’’ எடுத்துக் கொள்ளுங்கள். முன் மாதிரி என்பது எப்போது வரும்? யாராவது ஒருவர் உண்டாக்கினால்தானே, முன்மாதிரி வரும். ஆகவே, அந்த முன் மாதிரியாக இதுவே இருக்கட்டும்’’ என்று முதலமைச்சர் கலைஞர் சொன்னதை எடுத்துக்காட்டி உரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

Contents

‘‘சட்டப்பேரவை தேர்தலும் –
வாக்காளர் கடமையும்!’’

தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், ‘‘அன்னை மணியம்மையார் நினைவு நாள் – 2026 சட்டமன்றத் தேர்தலும், வாக்காளர் கடமையும்’’ எனும் தலைப்பில், கடந்த 16.03.2026 அன்று மாலை 6 மணிக்கு, மேற்கு தாம்பரத்தில் உள்ள பெரியார் நகர் – பாரதி திடல் சண்முகம் சாலையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

அன்னை மணியம்மையாரின்
48 ஆம் ஆண்டு நினைவு நாள்!

அன்னை மணியம்மையார் அவர்களுடைய நினைவு நாளான இன்று (16.3.2026) நடைபெறும் இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில், நேற்று அறி விக்கப்பட்டு, வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி, தமிழ்நாட்டில் நடக்கவிருக்கக்கூடிய சட்டப்பேரவை தேர்தலும் – வாக்காளர் கடமையும் என்பதையெல்லாம் விளக்கிச் சொல்லக்கூடிய ஒரு வாய்ப்பாக இந்தக் கூட்டம் அமைந்திருக்கிறது.

ஏராளமாக இங்கே குழுமியிருக்கக்கூடிய மகளி ரணி தோழர்களே, பொறுப்பாளர்களே, அனைத்து இயக்கங்களைச் சார்ந்த பெருமக்களே, ஊடகவிய லாளர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தந்தை பெரியார் அவர்களை
95 ஆண்டுகாலம் வாழ வைத்ததற்கு
முழு முதற்காரணம்!

இன்றைக்கு, அன்னை மணியம்மையார் அவர்களுடைய 48 ஆம் ஆண்டு நினைவு நாள். தொண்டறத்தாய் என்று மக்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஓர் அற்புதமான அம்மையார் ஆவார். தந்தை பெரியார் அவர்களை 95 ஆண்டுகாலம் வாழ வைத்ததற்கு – முழு முதற்காரணம் அவர்தான். தந்தை பெரியாருடைய தத்துவங்கள் வாழுகின்றன என்றால், அவற்றிற்குக் காரணமும் அன்னை மணியம்மையார் அவர்கள்தான்.

இதைப் பேரறிஞர் அண்ணா அவர்களே, கையைப் பிடித்துக்கொண்டு எங்களிடத்தில் உணர்ச்சிப்பூர்வமாகச் சொன்னார், அவர் முதலமைச்சராக இருக்கும்போது.

அப்படிப்பட்ட தொண்டறத் தாயான தன்னல மறுப்புக்காரர்தான் அன்னை மணியம்மையார் அவர்கள்.

அவர் மறைந்த நினைவு நாள் என்பதையொட்டி, அவருடைய பணியைத் தொடரக்கூடிய ஒரு பிரச்சாரத்தை நடத்துவதற்காக – இயல்பாக நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம்.

அந்த வகையில், இன்றைக்கு இந்தப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. நேற்று (15.3.2026) தேர்தல் நடைபெறும் நாள் அறிவிக்கப்பட்டது. இங்கே உரையாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர் சொன்னதைப்போல, நீண்ட காலமாக திருக்கோவி லூருக்கு வரச் சொல்லி, என்னிடம் தேதி கேட்டார்கள். ஏறத்தாழ 35 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த ஊருக்கு நான் போகிறேன்.

கடலூரிலிருந்து, உடனடியாக
அழைத்துக் கொண்டு போவார்கள்!

மாணவப் பருவத்தில் நான், அடிக்கடி அங்கே நடைபெறும் கூட்டத்திற்குச் செல்வேன். அன்றைக்குக் காங்கிரஸ் நண்பர்கள் எல்லாம் எங்களைத் தாக்கிப் பேசுவார்கள். ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள், வேகமாகப் பேசுவார்கள். அதற்கெல்லாம் பதில் சொல்வ தற்கு, நான்தான் ஆஸ்தான பேச்சாளர். கடலூரிலிருந்து, உடனடியாக அழைத்துக் கொண்டு போவார்கள்.

ஆகவே, அந்தப் பகுதியில் நீண்ட காலமாக கூட்டம் போடவில்லை. அந்தப் பகுதியில் உள்ள சுற்றுவட்டாரங்களுக்குச் சென்றாலும், திருக்கோவிலூர் தவிர்க்கப்பட்டிருந்தது. அதற்காக தோழர்கள், தேதி வாங்கினார்கள்.

தேதி வாங்கும்போதே தோழர்களிடம் சொன்னேன், ‘‘தேர்தல் தேதி அறிவித்தாலும் அறிவித்துவிடுவார்கள். அதனால், சிக்கல் ஏற்படுமா?’’ என்று.

தாம்பரத்தில் நடைபெறுவது
இரண்டாவது கூட்டம்!

ஆனால், நான், என்னுடைய பிரச்சாரப் பணியைத் தொடர்ந்தேன். இங்கே கூட மார்க்சிஸ்ட் கட்சித் தோழர்கள் சொன்னதைப்போல, தேர்தல் அறிவிப்பிற்குப் பின் நடைபெறும் முதல் கூட்டம் இந்தக் கூட்டம் அல்ல. திருக்கோவிலூர் கூட்டம்தான் முதல் கூட்டம். தாம்பரத்தில் நடைபெறுவது இரண்டாவது கூட்டமாகும்.

தேர்தல் நடைமுறைப்படி, தேர்தல் ஆணை யத்தினுடைய அனுமதியோடு கூட்டம் நடை பெறவேண்டும். ஏற்கெனவே காவல்துறையினரிடம் முறைப்படி நம்முடைய மாவட்டத் தலைவர்கள் எழுதிக் கொடுத்து, அனுமதி பெற்றுத்தான், இந்தக் கூட்டத்தை நடத்துகிறார்கள்.

ஆனால், தேர்தல் தேதி அறிவித்ததிலிருந்து, காவல்துறையின் கண்காணிப்பிலிருந்து, தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் அனுமதி பெற்றுத்தான் கூட்டங்களை நடத்தவேண்டும். அதன்படியே, சட்டப்படி அனுமதி பெற்றுத்தான் இந்தக் கூட்டத்தை நடத்துகிறார்கள்.

திராவிடர் கழகம் என்பது தேர்தலில்
நேரிடையாக நிற்கக்கூடிய இயக்கமல்ல!

மாவட்டத் தலைவர் ப.முத்தையன் அவர்கள் ஓர் உறுதிமொழியும் கொடுத்திருக்கிறார். ‘‘அன்னை மணி யம்மையார் அவர்களுடைய நினைவு நாளன்று, தேர்தல் கடமைப்பற்றியும் நாங்கள் பேசுவோம். மக்களுக்கு அறிவுரை கூறுவோம். திராவிடர் கழகம் என்பது தேர்தலில் நேரிடையாக நிற்கக்கூடிய இயக்கமல்ல. என்றாலும், இந்தக் கூட்டத்தைப் பொறுத்தவரையில், எந்தப் பிரச்சினையும் இருக்காது’’ என்று சொன்னார்.

அதேபோல, இக்கூட்டத்தை நடத்துவதற்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள். அதற்காக எங்களுடைய மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் – பொதுமக்களுக்கு எந்தவிதமான தொந்தரவும் இல்லாமல்!

மிகக் கட்டுப்பாடான ஓர் இயக்கம் திராவிடர் கழகம். ஆகவேதான், இந்தப் பகுதி மிக முக்கியமான பகுதியாகும். வணிகர்களுக்கோ, போக்குவரத்திற்கோ இடையூறு இல்லாமல், நம்மால் அவர்களுக்கு எந்தவிதமான தொந்தரவும் இல்லாமல், தோழர்கள் ஒத்துழைத்து, நாற்காலியில் அனைவரும் அமரவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

அன்னை மணியம்மையார் அவர்களைப்பற்றி, அவர்  ஒரு தொண்டறத்தாய் என்பதைப்பற்றி, இங்கே நம்முடைய தோழர்கள் ஏராளம் சொன்னார்கள். இங்கே இருக்கக்கூடிய புத்தகங்களில், மணியம்மையார் அவர்க ளுடைய உரைகள் அடங்கி இருக்கிறது. அவரைப்பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்வதற்கு உங்களுக்கு உதவும்.

அன்னை மணியம்மையார் அவர்களுடைய பிறந்த நாளையும், நினைவு நாளையும் நாம் கொண்டாடுவது என்பது, ஏதோ அது ஒரு விழா என்பதற்காக அல்ல.

தெரிந்துகொள்ளவேண்டிய, புரிந்துகொள்ளவேண்டிய, கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!

பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள், அன்னை மணியம்மையாரைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவேண்டிய, புரிந்து கொள்ள வேண்டிய கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்னவென்று சொன்னால், பொதுவாழ்க்கையில் இருக்கிறவர்களை, விமர்சனம் செய்வார்கள். நியாயமாக அல்ல, விமர்சனமாகக் கூட அல்ல. அவதூறு பேசுவார்கள்.

இந்த உலகத்திலேயே ஒரு பெண் மணி, 32 வயதில், தாம்பத்திய உறவுக்காக அல்ல, ஒரு கொள்கையை நிலைநாட்டுவதற்காக, ஓர் அமைப்பைப் பாதுகாப்பதற்காக என்று தந்தை பெரியார் முடிவெடுத்து, அந்த முடிவிற்கேற்ப, சட்டப்படி அதற்கு வாய்ப்பில்லாத நேரத்தில், வழக்குரைஞர்கள் சொன்னார்கள், ‘‘உங்களு டைய பூர்வீக சொத்துகள் எல்லாம் பிற்காலத்தில் பயன்படவேண்டும் என்று சொன்னால், நீங்கள் யார் மீது நம்பிக்கை வைத்திருக்கிறீர்களோ அவர்கள்மேல் எழுதி வைக்கலாம்’’ என்றனர்.

ஓர் ஆணைத் தத்தெடுத்துக் கொள்ளலாமே தவிர, ஒரு பெண்ணை தத்தெடுக்க முடியாது!

நம்முடைய நாட்டின் சட்டத்தை அம்பேத்கர் அவர்கள்  மாற்றவேண்டும் என்று நினைத்தார். இந்து கோடு பில் படி அன்றைக்கு என்ன சட்டம் என்றால், ஓர் ஆணைத் தத்தெடுத்துக் கொள்ளலாமே தவிர, ஒரு பெண்ணைத் தத்தெடுக்க முடியாது.

ஆகவே, இதற்கு என்ன வழி?

‘‘மணியம்மையார் அவர்கள் என்னுடைய செயலாளராக இருந்து, இவ்வளவு காலம் தொண்டு செய்திருக்கிறார். ஆகவே, எனக்கு அவர்மீது நம்பிக்கை உண்டு. என்னுடைய சொத்துகள், அவர் வழியில் இயக்கத்திற்கு வரவேண்டும்’’ என்று சொன்னார் தந்தை பெரியார் அவர்கள்.

இதுதான் எல்லோருக்கும் தெளிவாகத் தெரிய வேண்டிய விஷயமாகும். உண்மையை, பல இடங்க ளில் மாற்றிச் சொல்வார்கள்.

அதற்காக வழக்குரைஞர்கள் சட்டப்படி என்ன செய்யவேண்டும் என்ற போது, ‘‘மனைவியாக இருந்தால்தான், உங்கள் சொத்தை அவர் பெயரில் எழுதி வைப்பதற்கு உரிமை உண்டு. சட்டப்படி உங்களுடைய சொத்துக்கள், உங்களுக்குப் பின்னால், அவரைச் சேரும்’’ என்றார்கள்.

தந்தை பெரியார் அவர்கள், நூற்றுக்கு நூறு – சென்ட் பர்சென்ட் என்று சொல்லக்கூடிய ஒரு மெட்டி ரியலிஸ்ட். அவ்வளவுதானே, மனைவி என்று அவர்  கையெழுத்துப் போடவேண்டும்! இப்பொழுதே என்னுடைய செயலாளராக, செவிலியராக இருந்து தொண்டறம் செய்து கொண்டிருக்கிறார். ஆகவே, தாரளமாக இதைச் செய்யலாம் என்றார்.

அந்த அம்மையாரின் ஒப்புதலைக் கேட்டார்கள், அதற்கு அன்னை மணியம்மையார் மறுக்கவில்லை.

இதை அரசியலுக்காக மாற்றிப் பயன்படுத்தினார்கள் என்பது வேறு செய்தி.

ஆனால், அப்படிப்பட்ட உணர்வு படைத்த அந்த அம்மையார், எவ்வளவு வசவுக்கு ஆளாக முடியுமோ, எவ்வளவு கேலிக்கு, அவதூறுக்கு ஆளாக முடியுமோ அவ்வளவுக்கும் ஆளானார்கள்.

அவதூறுகளை எல்லாம் தம்முடைய வயலுக்கு வீசப்பட்ட உரங்களாகக் கருதவேண்டும்!

எனவே, அந்த அம்மையாரிடமிருந்து நாம் முதலில் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் – பொதுவாழ்விற்கு வரக்கூடியவர்களுக்கு எவ்வளவு அவதூறுகள் ஏற்பட்டாலும், அவற்றையெல்லாம் தம்முடைய வயலுக்கு வீசப்பட்ட உரங்களாகக் கருதவேண்டும் என்ற பாடத்தை அன்னை மணியம்மையாரிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும்.

பொதுவாழ்விற்குப் பெண்கள் வருவது, வரவேற்கக்கூடிய ஒன்றாக இல்லை. தனிப்பட்ட முறை யில் தாக்குதல்கள், அவதூறுகளை அள்ளி வீசுவார்கள்.

இங்கே எங்களுடைய மதிவதனி இருக்கிறார். மதிவதனி போன்றவர்கள் கேட்கக்கூடிய கேள்வி களுக்குப் பதில் சொல்ல முடியாத அளவிற்குப் பல பேருக்குச் சிக்கலாக இருக்கிறது. அந்தக் கேள்விக்கு நேரிடையாக பதில் சொல்ல முடியாதவர்கள், மதிவதனியின்மீது அவதூறை அள்ளி வீசினார்கள்.

மதிவதனி மிகவும் சிறிய பிள்ளை – இன்னும் பக்குவமாகவில்லை; மணியம்மையாரைப் போல, எங்களைப் போல. இப்பொழுதுதான் அவர் பயிற்சிக் களத்தில் கொஞ்சம் கொஞ்சமாகப் பயின்று வருகிறார். வழக்குரைஞர் படிப்புப் படித்திருக்கிறார் என்பது வேறு விஷயம்.

எதிரிகளால்தான் அந்தப் பக்குவத்தை பெறவேண்டும்!

ஆனால், இந்தப் பள்ளிக்கூடத்தில் பக்குவமாக வேண்டும் என்றால், நல்ல பக்குவம் யாரால் என்றால், எங்களால் அல்ல. நாங்கள் பயிற்சி கொடுத்து வந்தி ருக்கிறார் என்பது இரண்டாம் பட்சம்தான். எதிரி களால்தான் அந்தப் பக்குவத்தை அவர் பெறவேண்டும்.

எவ்வளவுக்கெவ்வளவு நீங்கள் கேவலமாகப் பேசுகிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு நாங்கள் துணிவோடும், வெற்றிகரமான வீராங்கனைகளாக இருப்போம்.

ஒரு பெண், பொதுவாழ்விற்கு வந்தால், சரக்கில்லாதவன்தான் ஏதாவது சொல்வார்கள். கொள்கையைக் குற்றம் சொல்ல முடியாது. கால் பந்தாட்டத்தின்போது, பந்தை அடிப்பதற்குப் பதிலாக, காலை அடிப்பதைப்போலத்தான்.

ஆகவேதான், அன்னை மணியம்மையாரின் பொது வாழ்க்கையைப்பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும்.

அவர் எவ்வளவு பக்குவப்பட்டவர் என்று சொன்னால், அய்யா மறைவிற்குப் பிறகு, ஒருமுறை ஈரோட்டில் அன்னை மணியம்மையார் அவர்கள், இயக்கத்திற்குத் தலைமை தாங்கிய நேரத்தில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தார் அப்போது.

‘திராவிட மாடல்’ ஆட்சி என்ன செய்தது? என்று கேட்பவர்களுக்கு…

இந்தக் கூட்டத்திற்கு வரும்போது பார்த்தேன், ‘திராவிட மாடல்’ ஆட்சி என்ன செய்தது? என்று கேட்பவர்களுக்கு, இங்கே மாவட்ட மருத்துவமனையை அரசு அமைத்திருக்கிறதே, அது ஒன்றே போதும். இவ்வளவு பெரிய மருத்துவமனையை பார்த்திருக்கி றீர்களா, தாம்பரத்தில் வசிக்கக் கூடிய மக்கள்.

விமான நிலையம் பக்கமாக இருக்கிறது; விமா னத்திலிருந்து அங்கே இறங்குகிற மோடி ஜி அவர்களிடம்,  ‘‘‘ரோட் ஷோ’ நடத்துகிறீர்களே, தாம்பரம் மருத்துவமனையை வந்து பாருங்கள்; உங்கள் எய்ம்ஸ் மருத்துவமனை என்னாயிற்று?’’ என்று கேளுங்கள். அந்தக் கேள்விக்குப் பதில் சொல்கிறாரா, பாருங்கள்!

ஒன்றிய பா.ஜ.க. அரசு, மாநில அரசுக்கு நியாயமாகக் கொடுக்கவேண்டிய நிதியைக் கொடுக்கவில்லை!

முதலமைச்சர் அவர்களும், துணை முதலமைச்சர் அவர்களும் எவ்வளவு கவனத்தோடு இருக்கிறார்கள் என்பதற்கு அடையாளம், எங்கெங்கே ஓட்டை இருக்கிறது? எங்கெங்கே சூழ்ச்சி நடக்கிறது? என்பதைச் சரியாகக் கண்டுபிடிக்கிறார்கள். ஒன்றிய பா.ஜ.க. அரசு, மாநில அரசுக்கு நியாயமாகக் கொடுக்க வேண்டிய நிதியைக் கொடுக்கவில்லை. அந்நிதியைக் கொடுத்தால், இன்னும் வேகமாக, அதிகமான அளவிற்குப் பணிகளைச் செய்வார்கள்.

நிதியை ஒன்றிய பா.ஜ.க. அரசு தர மறுத்தாலும்கூட, அதையும் தாண்டி, தமிழ்நாட்டில் சிறப்பான பணிகளைச் செய்து வருகிறார்கள். எங்கே பார்த்தாலும் மருத்துவக் கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள், உணவகங்கள், மகளிருக்கான நலத் திட்டப் பணிகள் இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் அடைய முடியாத அளவிற்குத் தமிழ்நாடு 12 சதவிகித வளர்ச்சியை அடைந்திருக்கிறது. இதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு.

ஈரோட்டில் மருத்துவமனை அமைவதற்காகத் தந்தை பெரியார் அவர்கள், பணம் கொடுத்தார். அதற்கான காசோலையை நான்தான் கொண்டு போய் கொடுத்தேன். அய்யா மறைவிற்குப் பிறகு, அன்னை மணியம்மையார் இயக்கத் தலைமையேற்றார்.

ஈரோட்டில் நடைபெற்ற அரசு நிகழ்வில், முதலமைச்சர் கலைஞர் அவர்கள் உரையாற்றும்போது, ‘‘நான் அதிகாரிகளை அழைத்து, ஈரோட்டில் கட்டப்பட்டி ருக்கும் அரசு மருத்துவமனைக்குப் பெரியார் பெயரை வைக்கலாம் என்று இருக்கிறேன்’’ என்றார்.

அதற்கு அரசு அதிகாரிகள், ‘‘இதற்கு முன் மாதிரி இல்லையே!’’ என்றனர்.

அதற்கு முதலமைச்சர் கலைஞர், ‘‘முன் மாதிரி இருந்தால் சரி; முன் மாதிரி இல்லை என்றாலும், கவலைப்பட வேண்டாம். நான் சொல்வதையே முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளுங்கள். முன் மாதிரி என்பது எப்போது வரும்? யாராவது ஒருவர் உண்டாக்கினால்தானே, முன்மாதிரி வரும். ஆகவே, அந்த முன் மாதிரியாக இதுவே இருக்கட்டும்’’ என்றார்.

அப்போதும் கலைஞர் ஆட்சியை எதிர்த்து, விஷ மத்தனமான பிரச்சாரத்தைப் பல பேர் செய்தார்கள்.

(தொடரும்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *