மலேசியா திராவிடர் கழகத்தின் மேனாள் துணைத் தலைவரும், பேராக் மாநிலம் பெரியார் பாசறையின் நிறுவனத் தலைவருமான முதுபெரும் பெரியார் தொண்டர் கொள்கைக்கனல் கெ. வாசு, (வயது 82) 14.03.2026 அன்று காலையில் தாப்பாவில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
தந்தை பெரியாரது சுயமரியாதைக் கொள்கையில் ஆழ்ந்த பற்றுக்கொண்ட வாசு, தனது இல்லத்தின் ஒரு பகுதியை இயக்க செயல்பாட்டிற்கான அலுவலகமாக வும், தொடர்ந்து கூட்டங்கள் நடத்தக் கூடிய வகையில் பயன்படுத்தி வந்தார். சிறு நூலகத்தினையும் நடத்தி வந்தார். திராவிடர் இயக்கக் கூட்டமைப்பினை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மலேசியாவிற்கு சென்றபொழுது தொடங்கி வைத்த நிலையில் அதில் தமது அமைப்பினை அங்கமாக்கி பெரியார் பணியினைத் தொடர்ந்து ஆற்றி வந்தார். சுயமரியாதைக் கொள்கையின்பால் பலரையும் ஈடுபாடு கொள்ளச் செய்வதில் குறிப்பாக பேராக் மாநிலத்தில் அரும்பணி ஆற்றிய பெருமகனார் ஆவார். பெரியார் பெருந்தொண்டர் வாசு அவர்களுக்கு வீரவணக்கம்.
மறைந்த வாசு அவர்களுக்கு மனைவியர் இருவரும், நான்கு மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர். அவரது உடல் 15.03.2026 அன்று தாப்பா நகரில் உள்ள மயானத்தில் எந்தவித சடங்குகளுமின்றி எரியூட்டி அடக்கம் செய்யப்பட்டது.
வெளியூர் பயணத்தில் இருந்த ஆசிரியர் அவர்கள் இன்று சென்னை திரும்பிய நிலையில், மறைந்த வாசு அவர்களின் மகன் வா.பன்னீர் செல்வத்திடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்து ஆறுதல் தெரிவித்தார். மற்றும் குடும்ப உறவுகள் அனைவருக்கும் ஆறுதலைத் தெரிவிக்க வேண்டினார்.
