புவனேஸ்வர், மார்ச் 16 ஒடிசா மாநிலத்தில் காலியாக உள்ள 4 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் இன்று (16.3.2026) நடைபெறுகிறது. நான்காவது இடத்தைக் கைப்பற்றுவதில் ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சியான பிஜு ஜனதாதளம் இடையே கடும் போட்டி நிலவுவதால், ஒடிசா அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
தற்போதைய சட்டமன்ற உறுப் பினர்களின் எண்ணிக்கையின்படி, ஆளும் பாஜக 2 இடங்களிலும், எதிர்க்கட்சியான பிஜு ஜனதாதளம் (BJD) 1 இடத்திலும் எளிதாக வெற்றி பெற முடியும். ஆனால், 4-ஆவது இடத்திற்குத் தேவையான போதிய பெரும்பான்மை இரு கட்சிகளிடமும் இல்லை.
பாஜக பிரமுகர் திலீப் ரே சுயேச்சை வேட்பாளராகக் களம் இறக்கப்பட்டுள்ளார். அவருக்கு பாஜக முழு ஆதரவு அளிக்கிறது.
காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் தட்டேஸ் வர் ஹோடா என்பவரைப் பொது வேட்பாளராக பிஜு ஜனதாதளம் நிறுத்தியுள்ளது.
கட்சி மாறி வாக்களிப்பதைத் தவிர்க்கவும், குதிரை பேரத்தைத் தடுக்கவும் அரசியல் கட்சிகள் தங்க ளது சட்டமன்ற உறுப் பினர்களை ரகசிய இடங்களுக்கு மாற்றியுள்ளன.
பாஜக: தனது சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் இரண்டு சொகுசுப் பேருந்துகள் மூலம் பாரதீப்பில் உள்ள திலீப் ரேக்கு சொந்தமான ஓட்டலுக்கு அனுப்பி வைத்துள்ளது. அவர்கள் இன்று காலை வாக்கெடுப்பிற்காக புவனேஸ்வர் திரும்புகின்றனர். “3 இடங்களிலும் நாங்கள் நிச்ச யம் வெற்றி பெறுவோம்” என பாஜக தலைமை நம்பிக்கை தெரிவித்துள்ளது.
காங்கிரஸ்: தனது 8 சட்டமன்ற உறுப்பினர்களை கருநாடக மாநிலம் பெங்களூருவை அடுத்த பிடதியில் உள்ள ரெசார்ட்டில் தற்காலிகமாகத் தங்க வைத்துள்ளது. இவர்கள் பாஜகவிற்கு ஆதரவாக வாக்களிப்பதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
நான்காவது இடத்திற்கான இழுபறி நீடிப்பதால், சட்டமன்ற உறுப்பினர்கள் ‘கிராஸ் வோட்டிங்’ எனப்படும் கட்சி மாறி வாக்களிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. இதன் காரணமாக மாநிலத் தலைநகர் புவனேஸ்வரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தத் தேர்தலின் முடிவு ஒடிசா அரசியலில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
