சிறீநகர், மார்ச் 13 ஜம்முவின் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் அண்மையில் இரவு நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பரூக் அப்துல் லாவும், துணை முதலமைச்சர் சுரீந்தர் சவுத்தரியும் கலந்து கொண்டனர்; பிறகு அவர்கள் அங்கிருந்து புறப்படத் தயாரானார்கள்.
சுட்டுக் கொல்ல முயற்சி
அப்போது, ஃபரூக் அப்துல்லாவின் பின்னால் இருந்து வந்த ஒரு நபர் கைத்துப்பாக்கியால் அவரை நோக்கி சுட்டார். உடனே, பாதுகாப்பு அதிகாரிகள் அந்த நபரை மடக்கிப் பிடித்தனர். இதனால், குண்டு குறிதவறிச் சென்றது. இதையடுத்து நூலிழையில் ஃபரூக் அப்துல்லா உயிர் தப்பினார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஃபரூக் அப்துல்லா கூறியதாவது: திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் வீட்டுக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தேன். அப்போது எனது பின்பக்கமிருந்து ஒரு பெரிய சத்தம் கேட்டது. திருமண விழா என்பதால் பட்டாசு வெடிக்கிறார்கள் என்று நினைத்தேன். அப்போது ஒருவர் என் அருகே தடுமாறி விழுந்தார். அப்போது கூட எனக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. அதன் பின்னர்தான் துப்பாக்கியால் அந்த நபர் சுட முயன்ற விஷயம் தெரியவந்தது. அவர் யார் என்பது தெரியவில்லை.
ஜம்மு-காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நடந்து வரும் நிலையிலும், மாநிலத் தகுதியை (அந்தஸ்து)ஒன்றிய அரசு இதுவரை திருப்பித்தரவில்லை. எனவே, மாநிலத் தகுதியை திருப்பியளிப்பதோடு, மாநிலத்துக்கான அதிகாரங்களையும் திரும்ப வழங்க வேண்டும். ஜம்மு-காஷ்மீரில் தேர்தலுக்குப் பின்னர் மாநிலத் தகுதியை திருப்பி அளிக்கப்படும் என்ற உறுதியை ஒன்றிய அரசு அளித்தது. ஆனால் அரசு தேர்வு செய்யப்பட்டு சில ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்னும் ஒன்றிய அரசு தனது வாக்குறுதியைக் காப்பற்றவில்லை. இது சரியல்ல. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
துப்பாக்கியால் சுட்ட விவகாரத்தில் கைதானவர் ஜம்முவைச் சேர்ந்த 63 வயதான கமால் சிங் ஜம்வால் என்றும், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கிக்கு உரிமம் இருப்பதாகவும் ஜம்மு ––- காஷ்மீர் காவல்துறையினர் தெரிவித்தனர். இதில் தீவிரவாத அமைப்புக்கு சம்பந்தம் இல்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
