கோஹிமா, மார்ச் 13 வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்தில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக நாகா மக்கள் முன்னணி கட்சியின் தலைவர் நெய்பியு ரியோ உள்ளார்.
பா.ஜ.க. கூட்டணி ஆட்சி
நாகலாந்து மாநிலத்தில் தற்போது பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் ஆளுநர் அஜய் குமார் பல்லா (நாகலாந்து பொறுப்பு) உரையாற்றிய போது ‘வந்தே மாதரம்’ பாடல் இசைக்கப்பட்டது. அதிகாரப்பூர்வ விழாக்களில் தேசிய கீதத்திற்கு முன்பாக 3 நிமிடம் 10 வினாடிகள் கொண்ட ‘வந்தே மாதரம்’ பாடலின் முழு பதிப்பையும் இசைக்க வேண்டும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அறிவிப்பை தொடர்ந்து இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
கடும் எதிர்ப்பு
இந்நிலையில், நாகாலாந்தில் சட்ட மன்றத்தில் ‘வந்தே மாதரம்’ பாடல் இசைக்கப்பட்டதற்கு ஆளும் நாகா மக்கள் முன்னணிக் கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. சட்டமன்றத்திலேயே நாகா மக்கள் முன்னணி கட்சியின் எம்எல்ஏ குசோலுசோ நீனு,”வந்தே மாதரம் பாடலின் நான்காவது அடியில் இந்து தெய்வங்களான துர்கா, சரஸ்வதி மற்றும் லட்சுமி ஆகியோருடன் தாய்நாடு (இந்தியா) ஒப்பிடப்படுகிறது. நாகாலாந்தில் 87% சதவீதத்திற்கும் அதிகமா னோர் கிறிஸ்தவர்கள் தான். நாங்கள் ஒரே கடவுளை மட்டுமே வணங்குபவர்கள். அதனால் எங்கள் மனசாட்சி இந்தப் பாடலை ஏற்கவில்லை. நாகாலாந்து மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்புச் சட்டம் 371(A) பிரிவின் கீழ், நாகா மக்க ளின் சமூக மற்றும் மத நடைமுறை களில் நாடாளுமன்றத்தின் எந்தச் சட்டமும் தன்னிச்சையாகச் செல்லாது; மாநில சட்டமன்றம் அனுமதித்தால் மட்டுமே அமலாகும். ஆனால் முறைப் படி ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு எந்த அனுமதியும் பெறவில்லை. அதனால் திடீரென வந்தே மாதரத்தை திணிப்பது நாகாலாந்து மாநிலத்தின் சிறப்பு உரிமையைப் பறிப்பதாக உள்ளது” என அவர் கண்டனம் தெரிவித்தார். இதே போல பல நாகா மக்கள் முன்னணி சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்றத்தில் பேசினர்.
பா.ஜ.க.வின் கனவு நொறுங்கியது
நாகாலாந்து சட்டமன்றத்தில் தற் போது எதிர்க்கட்சி இல்லை. பாஜக – நாகா மக்கள் முன்னணி கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், மற்ற எதிர்க்கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருப்பதால் அங்கு எதிர்க்கட்சி இல்லாத சூழல் உள்ளது.
இதனால் வந்தே மாதரம் பாடலை ஆளுநர் அஜய் பல்லா (அமித் ஷா வுக்கு நெருக்கமானவர் – மணிப்பூ ருக்கும் இவர் தான் ஆளுநர்) மூலம் இசைக்கவிட்டு நாகாலாந்து மாநிலத் தில் குழப்பத்தை ஏற்படுத்த பாஜக சதி வேலையில் இறங்கியது. நாகா மக்கள் முன்னணி தங்கள் கூட்டணியில் இருப்பதால் தங்கள் வந்தே மாதரம் பாடல் கணக்கு சரியாக அமையும் என பாஜக நினைத்தது. ஆனால் நாகா மக்கள் முன்னணி சட்டமன்றத்திலேயே எதிர்ப்பு தெரிவிக்க பாஜகவின் கனவை சுக்கு நூறாக நொறுக்கியுள்ளது. நாகா மக்கள் முன்னணி மட்டுமின்றி பாஜக கூட்டணி கட்சிகளில் ஒன்றான ஆர்பிஅய் (அத்வாலே) கட்சியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மாணவர்களும் எதிர்ப்பு
அரசு விழாக்களில் வந்தே மாதரம் கட்டாயம் என்ற உத்தரவுக்கு, கடந்த மாதமே நாகா மாணவர் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்தது. ஆனால் இந்த எதிர்ப்பை மீறி கடந்த வாரம் துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணன் பங்கேற்ற நாகாலாந்து பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் ‘வந்தே மாதரம்’ இசைக்கப்பட்டது. இதற்கு மாணவர்கள் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மாணவர்கள் சங் கங்களின் அழைப்பை ஏற்று மாணவர்கள் வந்தே மாதரம் பாடலுக்கு எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்தனர். மேலும் பாஜவுக்கு எதிராக போராட்ட அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர்.
உடைகிறது?
நாகாலாந்து சட்டமன்ற அவைத் தலைவராக லாங்கி யுமர் உள்ளார். இவர் நாகா மக்கள் முன்னணி கட்சியின் மூத்த சட்டமன்ற உறுப்பினர் இவரது அனுமதியின்றி சட்ட மன்றத்தில் வந்தே மாதரம் இசைக் கப்பட்டது. இதன்மூலம் பாஜகவின் சதித்திட்டம் நாகா மக்கள் முன்னணி கட்சிக்கு புரிந்துவிட்டது. மறுபக்கம் மாணவர்களும் போராட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். இதனால் மணிப்பூர் போல வகுப்புவாத வன் முறையால் நாகாலாந்து பாதிக்கக் கூடாது மற்றும் இனிமேல் பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் கட்சிக்கே சிக்கல் உருவாகும் என்பதை உணர்ந்து பாஜக கூட்டணியில் இருந்து நாகா மக்கள் முன்னணி விலகுகிறது என வட கிழக்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
தனித்து ஆட்சி அமைக்கலாம்
பாஜகவுடனான கூட்டணி உறவை நாகா மக்கள் முன்னணி முறித்துக் கொண்டால் நாகாலாந்தில், பாஜக கூட்டணி ஆட்சி மட்டும் கவிழும். அதன் பின்னர் நாகா மக்கள் முன்னணி தனித்து ஆட்சி அமைக்கலாம். 60 இடங்களை கொண்ட நாகாலாந்தில் நாகா மக்கள் முன்னணிக்கு 34 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். பாஜகவிற்கு 11 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருக்கின்றனர். பெரும்பான் மைக்கு 31 சட்டமன்ற உறுப்பினர்கள் போதும் என்ற நிலையில், நாகா மக்கள் முன்னணிக்கு 3 சட்டமன்ற உறுப்பினர்கள் கூடுதலாகவே உள்ளனர். இதனால் பாஜகவை விட்டு தனித்து ஆட்சி அமைக்க எந்த பாதிப்பும் இல்லை என்பதால், பாஜகவை நாகா மக்கள் முன்னணி எளிதாக உதறி தள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
