எல்லோருக்கும் வாழ உரிமை இருக்கிறது என்பதே உயர்ந்த கலாச்சாரம்!!
தஞ்சை, மார்ச் 12 பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் மார்ச் 10 ஆம் நாள் உலக மகளிர் நாள் விழா மற்றும் அன்னை மணியம்மையார் 107 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு ஜெ. தீபலெட்சுமி பேசியதாவது:
தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. ஆனாலும் பாலின சமத்துவத்திற்காக போராடிக் கொண்டிருக்கின்றோம். ஜாதி ஒழிப்பை கூட சுலபமாக முடித்து விடலாம். பெண் உரிமை அடைவது சிரமம் என்றார் தந்தை பெரியார். பெண்ணுரிமை பற்றி ஆண்களிடம்தான் அதிகம் பேச வேண்டும். தந்தை பெரியார் கலந்து கொண்ட மேடையில், என்னுடைய தந்தையார் ஜெயகாந்தன் அவர்கள், ‘ஈ.வெ.ரா. அவர்களே ‘ என்று அழைத்து பெரியார் கருத்துகளுக்கு மாறுபட்டு பேசினார். அப்போது என்னுடைய தந்தையாருக்கு வயது 25. பெரியார் அய்யாவுக்கு வயது 80. அதனை உற்சாகமாக வரவேற்ற பண்பாளர் தந்தை பெரியார்.
‘‘எல்லாவற்றையும்
சிந்தித்துப் பார்’’ என்றவர் பெரியார்!
மேடையில் பெரியார் கருத்துகளை விமர்சித்து இருந்தாலும் ஜெயகாந்தன் கதைகளில் பெண்ணியம் இருக்கின்றது. பெரியார் எதையெல்லாம் சொன்னாரோ அதையெல்லாம் கதைகளில் வெளிப்படுத்தியிருக்கிறார். ‘‘எல்லாவற்றையும் சிந்தித்துப் பார்’’ என்றவர் பெரியார். ‘‘நானே சொல்லியிருந்தாலும் கூட ஏற்றுக் கொள்ளாமல் உன் அறிவு என்ன சொல்கிறது என்று பார்’’ என்று கூறியவர் தந்தை பெரியார்.
வாழ்க்கையிலோ, அரசியல் தளங்களிலோ மாறு பட்ட பார்வையில் பயணம் செய்கின்றோம். ஆனால், பெண்களுக்காகவும், மக்களுக்காகவும் மனித நேயத்தோடு சிந்தித்த பெரியாரை சிந்தனைகளிலும், கருத்துகளிலும் ஒரே மாதிரி பின்பற்றுகிறோம்.
ஸநாதனவாதிகள் எப்போதுமே பெண்களுக்கு எதிரானவர்கள்!
பெண்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சினை குழந்தைத் திருமணம். குழந்தைத் திருமணத்தைத் தூக்கிப் பிடிக்கும் சமூகம் சிதம்பரத்தில் இருக்கின்றது. ஸநாதனவாதிகள் எப்போதுமே பெண்களுக்கு எதிரானவர்கள். இளம் வயதிலேயே பெண்ணை அடக்கி வைத்தால்தான் ஜாதியையும், மதத்தையும் காப்பாற்ற முடியும். அதனால்தான் குழந்தைத் திருமணங்கள் நடைபெறுகின்றன.

பெண்களின் நலன் குறித்தே வாழ்நாள் முழு வதும் சிந்தித்தவர் தந்தை பெரியார். அவர் மீது அவ தூறுகள் வீசப்படுகின்றன. அவர் ஜாதி ஒழிப்பை வலியுறுத்துகின்றார். ஜாதியினால் லாபம் அடைபவர்கள் அவரை எதிர்க்கின்றார்கள்.
அரசியலமைப்புச் சட்டம் சொல்வதை நடை முறைப்படுத்துவதற்கு நாம் போராடிக் கொண்டே இருக்க வேண்டி இருக்கிறது. படித்திருந்தாலும், வேலைக்குச் சென்றாலும், சாதனை செய்தாலும் பெண்கள் சங்கிலியால் கட்டப்பட்டு இருக்கிறார்கள். பெண்களுக்கு உள்ள முக்கிய தடைக்கல் திருமணம் – குடும்பம் – குழந்தைகள் இவைதான் .
பெண் உரிமைக்கு – வளர்ச்சிக்குத்
தடை கற்கள்!
பெண்களுக்காக வெளி வருகின்ற பத்திரிகைகள் உண்டு. பொது பத்திரிகைகளில் பெண்கள் நலம் என்று ஒரு பகுதி இருக்கும். அந்தப் பகுதியில் இடம்பெறுவது சமையல் குறிப்பு ,அழகு குறிப்பு, குழந்தை வளர்ப்பு. குடும்ப அமைப்பை பாதுகாப்பது என்பதை நம்முடைய மூளையில் ஏற்றி விட்டார்கள். இதுதான் கலாச்சாரம் என்பதை நம் உள்ளத்தில் பதிவு செய்துவிட்டார்கள். இவையெல்லாம் பெண் உரிமைக்கு- நம்முடைய வளர்ச்சிக்கு தடைக் கற்கள்.

கருப்பையைத் தூக்கி வீசச் சொன்னவர் தந்தை பெரியார். பெண் உரிமை ஜாதி ஒழிப்பு இரண்டையும் இடைவிடாமல் வலியுறுத்தி வந்தார். வரதட்சணை கொடுத்து, சுயஜாதியில் திருமணம் செய்து கொண்டிருக்கும் நமக்கு, அவருடைய பெயரை உச்ச ரிக்கின்ற தகுதி இல்லை. சமூக வலைதளங்களில் பெண்கள் இழிவுபடுத்தப்படுகின்றார்கள். ஆண்களை அடைவதுதான் பெண்களின் இலக்காக வளர்க்கப்படுகின்றார்கள். எப்படி உடை உடுத்த வேண்டும்? என்ன படிக்க வேண்டும்? யாரைத் திருமணம் செய்ய வேண்டும்? குழந்தை பெற்றுக் கொள்வது உட்பட எல்லாவற்றையும் குடும்பம், சமூகமே முடிவு செய்கிறது.
எல்லோருக்கும் வாழ உரிமை இருக்கிறது என்பதுதான் உயர்ந்த கலாச்சாரம்!
கல்வி நிறுவனங்களிலும் பாலின சமத்துவம் வரவில்லை. பெண்கள் விடுதியின் கதவுகள் மாலை 6.30 மணிக்கு அடைக்கப்படுகின்றன. ஆனால், ஆண்கள் விடுதியின் கதவுகள் இரவு 10 மணிக்குத்தான் அடைக்கப்படுகின்றன. ஆணாதிக்கத்தைக் காப்பாற்றக் கூடியதாக குடும்பங்கள் இருக்கின்றன. எல்லா கலாச்சாரங்களும், பெண்களை இழிவுபடுத்துகின்றன. எல்லோருக்கும் வாழ உரிமை இருக்கிறது என்பதுதான் உயர்ந்த கலாச்சாரம். இதைத் தவிர மற்ற கலாச்சாரங்களை மதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பேசினார்.
சாதனைப் பெண்மணிகளுக்கு
விருதுகள்!
உலக மகளிர் நாள் விழாவை முன்னிட்டுச் சாதனைப் பெண்மணிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

தொழில் முனைவோருக்கான , ‘டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி’ விருது வசீகர வேதா வேளாண்மை மற்றும் மூலிகை தயாரிப்பு நிறுவனத்தின் மேலாளர் மற்றும் நிறுவனர் விஜயா மகாதேவன் அவர்களுக்கும்,
சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி மாற்றத்தை உருவாக்குபவருக்கான, ‘அன்னை மணியம்மையார்’ விருது தமிழ்நாடு அரசின் குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு மாநிலக் குழு உறுப்பினர் டாக்டர் உஷா நந்தினி அவர்களுக்கும்,
பெண்கள் தலைமைத்துவத்திற்கான , ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது தஞ்சாவூர் Blossom பள்ளியின் பொருளாளர் அழகம்மை அழகப்பன் அவர்களுக்கும்,
முன்மாதிரி சாதனையாளருக்கான , ‘மேரி கியூரி’ விருது மின்னணு நிர்வாக இயக்குநர் டாக்டர் அருணா அவர்களுக்கும்,
மிகச் சிறப்பான செயல்பாடுகளுக்காக மாணவிக்கு வழங்கப்படுகின்ற, ‘கல்பனா சாவ்லா’ விருது செயற்கை நுண்ணறிவுப் பிரிவில் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி வர்ஷினிக்கும்,
தொழிலாளர்களுக்கான, ‘சாவித்ரி பாஃபுலே’ விருது பெரியார் மணியம்மை பல்கலைக்கழக இள நிலை உதவியாளர் காந்தாரூபி அவர்களுக்கும் வழங்கப்பட்டது.
இணைத் துணைவேந்தர்
முனைவர் இரா. மல்லிகா உரை
தலைமையுரை நிகழ்த்திய இணைத் துணைவேந்தர் முனைவர் இரா. மல்லிகா தமது உரையில்,
தந்தை பெரியார் அவர்களின் கொள்கையில் உறுதியாக நின்றவர் அன்னை மணியம்மையார். தந்தை பெரியார் அவர்களின் மறைவுக்குப் பிறகு திராவிடர் கழகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று அய்ந்து ஆண்டுகள் இயக்கத்தைக் கட்டிக் காத்தார். தந்தை பெரியார் தந்த சொத்துகளையும், தன்னுடைய சொத்துகளையும் ‘மணியம்மை கல்வி அறப்பணிக் கழகம்’ என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை நிறுவி கல்விப் பணிகளைச் செய்தார். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகுதான் பெண்ணுரிமை கிடைத்திருக்கின்றது என்று தலைமையுரையில் குறிப்பிட்ட இணைத் துணைவேந்தர், உலக மகளிர் நாள் விழாவையொட்டி ‘விடுதலை’ இதழில், வேந்தர் அவர்கள் எழுதிய ஒலிம்பே டி கோஜஸ் வரலாற்றையும் விளக்கினார்.
விஜயா மகாதேவன்
விருது பெற்ற விஜயா மகாதேவன் தமது ஏற்புரை யில், ‘‘என்னுடைய 50 ஆவது வயதுக்கு பிறகுதான் பொது வெளியில் வந்தேன். நம்முடைய வயதை நினைத்து கனவுகள் சோர்ந்து விடக்கூடாது. பெண்கள் தொழில் முனைவோர் ஆக வேண்டும்; அவர்கள் அங்கீகாரத்தோடு வாழ வேண்டும். பெண்களால் சாதிக்க முடியும் என்பதற்கு, நானே ஓர் எடுத்துக்காட்டு. தொழில் முனைவோர் ஆகும் போது நமக்கு பொருளாதாரச் சுதந்திரமும் கிடைக்கிறது, பெண் சுதந்திரமும் கிடைக்கிறது’’ என்று கூறினார்கள்.
விருது பெற்ற உஷா நந்தினி தமது ஏற்புரையில்,
+2 படிப்பை முடித்தவுடன் எனக்கு திருமணம் செய்து வைத்தார்கள். அதன் பிறகு படித்து இன்றைக்கு உயர்ந்திருக்கிறேன். என்னுடைய தகுதியை உயர்த்தி உயர்த்தி இப்போது டாக்டர் பட்டமும் பெற்று இருக்கி றேன். பழைய சாதனை என்பதெல்லாம் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் புதிது புதிதாக சாதனை செய்ய வேண்டும். கல்விதான் முக்கியம்” என்று கூறினார்கள்.
விருது பெற்ற அழகம்மை அழகப்பன் தமது ஏற்புரையில்,
பெண் தலைமைத்துவம் என்பது வெளியில் தேடும் ஒன்றல்ல. அது மாணவர்களின் தன்னம்பிக்கையிலும் தளராத முயற்சியிலும் குடி கொண்டிருக்கிறது. தடை களைக் கண்டு ஒருபோதும் தயங்காதீர்கள். சவால்களை வளர்ச்சிக்கான ஏணிகளாக கருதுங்கள். அன்னை மணியம்மையார் அவர்களின் துணிச்சலையும், தந்தை பெரியாரின் பகுத்தறிவையும் துணையாக கொண்டு முயற்சி செய்யுங்கள்’’ என்று குறிப்பிட்டார்கள்.
நிகழ்ச்சியில் உயிரித் தொழில் நுட்பத் துறை இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவி வைரமலர் வரவேற்புரை நிகழ்த்தினார். உயிரித் தொழில்நுட்பத் துறை இரண்டாம் ஆண்டு மாணவர் சிவசாரதி நன்றியுரை வழங்கினார்.
மாணவியர்கள் கனிஷ்கா, சிறீபத்மாவதி நிகழ்ச்சி யினைத் தொகுத்து வழங்கினார்கள்.
குருதிக் கொடை
அன்னை மணியம்மையார் பிறந்த நாளை முன்னிட்டு இளையோர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் பெரியார் மணியம்மை மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. 60 மாணவர்கள் குருதிக் கொடை வழங்கினார்கள்.
புற்றுநோய்
மருத்துவ முகாம்
Dr.G. Vishwanathan Group of Hospitals and Dr.K. Shantha Breast Cancer Foundation ( SBCF)&PMIST இணைந்து மகளிருக்கான மார்பகப் புற்றுநோய் மருத்துவ முகாம் நடைபெற்றது.
