*ஒவ்வொரு துறையிலும் இட ஒதுக்கீடு இருந்தால் மட்டும் போதாது; அந்த இட ஒதுக்கீடு, முறைப்படி அவர்களுக்குக் கொடுக்கப்பட்டு இருக்கிறதா? செயல்படுத்தப்பட்டு இருக்கிறதா? என ஆய்வு செயவதே முக்கியம்!
* இப்போது நடைபெறுகின்ற போராட்டம் ஒரு தொடக்கம்தான், ஒரு சிறு பொறி தான்!
பொறியாக இருக்கும்போதே நீங்கள் அணைக்க விரும்புகிறீர்களா? அல்லது
நாடு முழுவதும் கொதித்தெழக்கூடிய அளவிற்கு வருவதை விரும்புகிறீர்களா?
சென்னை, மார்ச் 4– ஒவ்வொரு துறையிலும் இட ஒதுக்கீடு இருந்தால் மட்டும் போதாது; அந்த இட ஒதுக்கீடு, முறைப்படி அவர்களுக்குக் கொடுக்கப்பட்டு இருக்கிறதா? செயல்படுத்தப்பட்டு இருக்கிறதா? என்று தெளிவாக அறிவிக்கவேண்டும். இப்போது நடைபெறுகின்ற போராட்டம் ஒரு தொடக்கம்தான். ஒரு சிறு பொறி தான். பொறியாக இருக்கும்போதே நீங்கள் அணைக்க விரும்புகிறீர்களா? அல்லது ‘தீ பரவட்டும்’ என்று சொல்லக்கூடிய அளவில், நாடு முழுவதும் கொதித்தெழக்கூடிய அளவிற்கு வருவதை விரும்புகிறீர்களா? என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
சாஸ்திரிபவன் அலுவலகத்திற்கு முன் திராவிடர் கழகம் ஆர்ப்பாடடம்!
அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எஃப்.எஸ். போன்ற பதவிகளில் பார்ப்பன உயர்ஜாதி ஆதிக்கத்தைக் கண்டித்து, சென்னை சாஸ்திரிபவன் அலுவலகத்திற்கு முன் நேற்று (3.3.2026) காலை திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அவ்வார்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கிய திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கண்டன உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
பேரன்புமிக்க கழகத் துணைத் தலைவர், பொறுப்பாளர்கள் உள்பட அனைத்து நண்பர்களே, ஊடகவியல் தோழர்களே,
உங்கள் அனைவருக்கும் என்பான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தினுடைய முக்கிய நோக்கம் என்னவென்பதை, இங்கே எழுப்பப்பட்ட முழக்கங்கள் மிகத் தெளிவாக அனைவருக்கும், அகிலத்திற்கும் அறிவித்துக் கொண்டிருக்கின்றன.
இட ஒதுக்கீடு, சமூகநீதி, வகுப்புரிமை –
இவை தமிழ்நாட்டினுடைய மூச்சுக்காற்று!
இட ஒதுக்கீடு, சமூகநீதி, வகுப்புரிமை – இவை தமிழ்நாட்டினுடைய மூச்சுக்காற்று. தந்தை பெரியார் மண், அகிலத்திற்கே தந்த மிகப்பெரிய உரிமை வெற்றி.
இன்னுங்கேட்டால், 1928 ஆம் ஆண்டிலேயே முதன்முதலில் அது முகிழ்த்தது. இந்திய அரசிய லமைப்புச் சட்டத்தில் இட ஒதுக்கீடு தரப்பட்டது 1950 ஆம் ஆண்டு முதற்கொண்டுதான்.
ஆனால், அதேநேரத்தில், உடனடியாக அதனுடைய வேரை வெட்டவேண்டும் என்று முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, இந்தியாவிற்கே வழிகாட்டக் கூடிய ஒரு வகையில் அமைந்த ஒன்றுதான், தந்தை பெரியார் அவர்கள், நீதிக்கட்சிக்கு அளித்த ஆதரவினால் பிறந்த வகுப்புரிமை.
1951 ஆம் ஆண்டு தந்தை பெரியாருடைய போராட்டத்தினால்தான்…
அதற்கடுத்து 1951 ஆம் ஆண்டு தந்தை பெரி யாருடைய போராட்டத்தினால்தான், இந்திய அரசி யலமைப்புச் சட்டத்தில், அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தம் செய்யப்பட்டு நமக்கு உரிமை வழங்கப்பட்டது.
அதற்குப் பிறகு, எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில், பொருளாதார அளவுகோலைத் திணிக்க வந்த நேரத்தில்கூட, அதை எதிர்த்து நாம் வெற்றி பெற்றோம்.
அதற்குப் பிறகு, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான உரிமைகளுக்காகப் போராடினோம். பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களுடைய முயற்சியினால், எஸ்.டி., எஸ்.சி. என்று சொல்லக்கூடிய ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்குத் தனியாக, எஸ்.டி. என்ற பழங்குடியினருக்கு 7.5 சதவிகிதம். அதுபோலவே, எஸ்.சி., என்று சொல்லக்கூடிய ஆதிதிராவிட மக்களான பட்டியலின மக்களுக்கு 15 சதவிகிதம் என்று 23 சதவிகிதம் போக, எஞ்சிய 27 சதவிகிதம் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குச் சட்டப்பூர்வமாக மண்டல் கமிஷன் மூலமாகப் பரிந்துரைக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் மூலமாக ஒழுங்குப்படுத்திய பிறகு, உறுதி செய்யப்பட்டது.
நாம் கேட்பது, அரசியலமைப்புச் சட்டப்படி நமக்குள்ள உரிமை!
சட்டப்படி நாம் கேட்பது சலுகை அல்ல. தயவு செய்து ஊடக நண்பர்கள்கூட இதனைப் பதிவு செய்துகொள்ளவேண்டும். நாம் கேட்பது, சலுகை அல்ல, பிச்சை அல்ல, நம்முடைய கோரிக்கை அல்ல. அரசியலமைப்புச் சட்டப்படி நமக்குள்ள உரிமை.
அந்த உரிமை, ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்கு, குறைந்தபட்சமாக 15 சதவிகிதம்; 7.5 சதவிகிதம். பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவிகிதமென அளிக்கவேண்டும். ஆனால், அதையும் தாண்டி, தமிழ்நாட்டில், திராவிடர் கழகம், பெரியார் மண் என்று இருக்கின்ற காரணத்தினால், 69 சதவிகித இட ஒதுக்கீடு இந்தியாவிலேயே இருக்கின்ற ஒரே ஒரு மாநிலம் தமிழ்நாடுதான். அதுவும் அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்போடு, 9 ஆவது அட்டவணை பாதுகாப்போடு இருக்கிறது.
இவ்வளவுப் பாதுகாப்பாக இருக்கின்ற அரசினுடைய கொள்கைகளைத் தூக்கி விழுங்கக்கூடிய அளவிற்கு, ஒன்றியத்தில் ஆளக்கூடிய ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. மோடி அரசு அதனைக் கடைப்பிடிப்பதே கிடையாது.
ஒரு சின்ன உதாரணத்தை உங்களுக்குச் சொல்ல வேண்டும். புள்ளி விவரங்கள் ஏராளமாக இருக்கின்றன.
2022 ஜனவரி ஒன்றாம் தேதி நிலவரப்படி, 75 அமைச்சகம் மற்றும் துறைகளில் பணியாற்றும் செயலாளர்கள்,
இணைச் செயலாளர்கள் 322 பேர் இருக்கிறார்கள்.
இதில் பட்டியலினத்தவர்கள் வெறும் 14 பேர்தான்.
பழங்குடியினத்தவர் வெறும் 19 பேர்தான்.
பிற்படுத்தப்பட்டவர் வெறும் 39 பேர்தான்.
அதில், அமைச்சகம் மற்றும் துறைகளில் பணி யாற்றும் 89 செயலாளர்கள் அதிகாரிகளாக இருக்கி றார்கள். 2019 இல் என்ன சூழ்நிலை என்பதை எண்ணிப் பார்க்கும்போது,
இவர்கள்தான் அமைச்சர்களுக்கு வழிகாட்டக் கூடியவர்கள்.
அதில், எஸ்.டி. என்று சொல்லக்கூடிய பழங்குடி யினர் மூன்று பேர்; எஸ்.சி ஒரே ஒருவர்தான். பிற்ப டுத்தப்பட்டோரிலிருந்து ஒருவருமே இல்லை!
நெஞ்சம் பதைக்கவில்லையா? ரத்தம் கொதிக்க வில்லையா?
ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்களுக்குச் சட்டப்படி 15 இடங்கள் உண்டு. ஆனால், ஒன்றிய பா.ஜ.க. அரசு கொடுத்திருப்பதோ, ஒரே ஒரு இடம்தான். அதில் மீதமுள்ள 14 இடங்களை யார் சாப்பிடுகிறார்கள்? உயர்ஜாதிக்காரர்கள்!
வெறும் பூஜ்ஜியம்தான்
நம் ராஜ்ஜியம் என்ற நிலை!
யார் பறித்திருக்கிறார்கள்? உயர்ஜாதிக்காரர்கள். அதை நன்றாக நீங்கள் எண்ணிப்பார்க்கவேண்டும்.
இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஓரிடம்.
ஆனால், மிகப்பெரும்பான்மையராக இருக்கக்கூடிய பிற்படுத்தப்பட்டவர்களுக்கு – வெறும் பூஜ்ஜியம்தான் நம் ராஜ்ஜியம் என்ற நிலை!
இதைப்பற்றியெல்லாம் மற்றவர்கள் கவலைப்படாத நேரத்தில், திராவிடர் கழகம் வழக்கம்போல, தன்னு டைய பணிகளைச் செய்து கொண்டிருக்கிறது. தேர்த லில் அரசியல் கட்சிகள் அக்கறையோடு இருப்பது நியாயம்தான். ஏனென்றால், தேர்தல் நடைபெற விருக்கிறது.
ஆனால், இந்த நேரத்தில்கூட செய்யவேண்டியதைச் செய்கிறவர்கள்தான் நாங்கள்! கூட்டணிக் கட்சிக்கா ரர்களும் எங்களோடுதான் இருக்கிறார்கள். இப்போதும் கொள்கையளவில் ஒப்புதலோடு அவர்கள் இருக்கி றார்கள்.
தகவல் அறியும்
உரிமைச் சட்டத்தின்மூலம்…
எனவே தோழர்களே, ஒவ்வொரு துறையிலும் 27 சதவிகிதம்! சில நாள்களுக்கு முன்பு ஒரு தகவலைக் கேட்டார்கள், அது என்னவென்றால், 27 சதவிகிதத்தில் எத்தனை சதவிகிதம் கொடுக்கப்பட்டது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்மூலம் கேட்டபோது, வெறும் 11 சதவிகிதம்தான் கொடுக்கப்பட்டு இருக்கி றது என்று சொன்னார்கள்.
27 சதவிகிதத்தில் 11 சதவிகிதத்தைக் கழித்தால், மீதமிருப்பது 16 சதவிகிதம். அந்த 16 சதவிகிதம் யாருக்குப் போகிறது? உயர்ஜாதிக்காரர்களுக்கு.
சட்டப்படி, நமக்குள்ள உரிமையை மறுத்து அவர்கள், இவ்வளவு பெரிய அக்கிரமத்தையும், அநீதியையும் செய்துகொண்டிருக்கிறார்கள்.
சமூகநீதி, சரிவர நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்று ஒவ்வொரு துறையிலும் கண்காணிக்கக்கூடிய ஒரே ஒரு அரசு – தமிழ்நாடு அரசுதான், ‘திராவிட மாடல்’ அரசுதான், ஸ்டாலின் அரசுதான் என்பது பெரு மைக்குரிய ஒன்றாகும்.
இந்தியாவில் ஒன்றியத்திலும் அல்லது வேறு எந்த மாநிலத்திலும், இந்த நடைமுறை இருக்கி றதா? செயல்படுத்தப்படுகிறதா? எத்தனை பேர் அமர்ந்தி ருக்கிறார்கள்? எத்தனை பேர் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்? என்ற தகவல்கள் இல்லை.
‘திராவிட மாடல்’ ஆட்சியில்தான் ‘சமூகநீதி கண்காணிப்புக் குழு!’
நம்முடைய ‘திராவிட மாடல்’ அரசுதான், நியமனம் செய்யப்படுவதைக் கண்காணிப்பதற்காக ஒரு குழுவை – ‘சமூகநீதி கண்காணிப்புக் குழு’ என்று அமைத்தி ருக்கிறார்கள்.
எனவே, இப்படிப்பட்ட ஒன்று, ஒன்றிய அரசுத் துறைகள் முழுவதும் நடைபெறவேண்டும். அதைத்தான் நாங்கள் வலியுறுத்துகிறோம். ஒவ்வொரு துறையிலும் இட ஒதுக்கீடு இருந்தால் மட்டும் போதாது; அந்த இட ஒதுக்கீடு, முறைப்படி அவர்களுக்குக் கொடுக்கப்பட்டு இருக்கிறதா? செயல்படுத்தப்பட்டு இருக்கிறதா? என்று தெளிவாக அறிவிக்கவேண்டும்.
இல்லையானால், இப்போது நடைபெறுகின்ற போராட்டம் ஒரு தொடக்கம்தான். ஒரு சிறு பொறி தான். பொறியாக இருக்கும்போதே நீங்கள் அணைக்க விரும்புகிறீர்களா? அல்லது ‘தீ பரவட்டும்’ என்று சொல்லக்கூடிய அளவில், நாடு முழுவதும் கொதித்தெ ழக்கூடிய அளவிற்கு வருவதை விரும்புகிறீர்களா?
அதேபோலத்தான், மண்டல் கமிஷன் அறிக்கை கொடுத்த நேரத்தில், பத்தாண்டுகளுக்கு அதைப் புதைகுழியில் போட்டுவிட்டோம் என்று மகிழ்ச்சியோடு, முன்னேறிய ஜாதியினர், பார்ப்பனர்கள், ஆரியர்கள் நினைத்தார்கள்.
42 மாநாடுகள் – 16 போராட்டங்கள்!
ஆனால், இந்தியா முழுவதும் 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் திராவிடர் கழகத்தின் சார்பில் அனைவரையும் அழைத்து நடத்தினோம். அது இன்றைக்கு அனுபவிப்பவர்களுக்குக் கூட தெரியாது – யார் அதற்குக் காரணம் என்று! 69 சதவிகித இட ஒதுக்கீட்டிற்குப் பாதுகாப்பு அளித்தது யார்? என்று அவர்களுக்குத் தெரியாது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆண்ட மண், ஆளப் போகின்ற மண்!
இது பெரியார் மண்!
இந்த மண் சமூகநீதி மண்!
இந்த மண் கலைஞர் ஆண்ட மண், அண்ணா ஆண்ட மண், காமராசர் ஆண்ட மண், ஓமந்தூரார் ஆண்ட மண் – அதேபோல, இன்றைக்கு எல்லாவற்றையும் இணைத்திருக்கக் கூடிய அளவிற்கு, ஒப்பற்ற ‘திராவிட மாடல்’ ஆட்சியினுடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆண்ட மண், ஆளப் போகின்ற மண் – அதிலொன்றும் சந்தேகமேயில்லை.
தமிழ்நாட்டோடு நின்றுவிடாது!
அப்படிப்பட்ட ஓர் அருமையான சூழ்நிலையில், இந்தக் கடமையை வலியுறுத்தவேண்டியது எங்கள் கடமை. ஆகவேதான், இன்று தமிழ்நாடு முழுவதும் இந்தப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது தமிழ்நாட்டோடு நின்றுவிடாது; அகில இந்திய அளவில், இந்தப் போராட்டத்தை பெரும் நகரங்க ளில்கூட, ஒத்தக்கருத்துள்ளவர்களை இணைத்து நடத்துவோம்.
முழக்கமிடுவோம், முழக்கமிடுவோம்!
போராட்டம், போராட்டம், உரிமைக்காகப் போராட்டம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாறறி
னார்.
