சமூகநீதிக் களத்தில் நமது போர்க்களம்!
திராவிடர் கழகம் என்றால் சமூகநீதி – சமூகநீதி என்றால் திராவிடர் கழகம்! தந்தை பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறியதற்கும்கூட சமூகநீதிக்கான அங்கீகாரம் இல்லாமற் போனதுதான் காரணம்.
ஒன்றும் அதிகம் கேட்கவில்லை. மக்கள் தொகையில் 97 விழுக்காடுள்ள பார்ப்பனரல்லாதாருக்கு வெறும் 50 விழுக்காடு தான் கேட்டார்.
அன்றைக்குக் காங்கிரஸ் என்றாலே பார்ப்பன ஆதிக்கம் தானே – அதிலும் குறிப்பாக வக்கீல் பார்ப்பனர்கள் தாேன! ஒவ்வொரு மாநாட்டிலும் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி தந்தை பெரியாரால் வற்புறுத்தப்பட்ட – கொண்டு வரப்பட்ட அந்த சமூகநீதித் தீர்மானத்தை நிறைவேறாமல் பார்த்துக் கொண்டனர்.
1925 நவம்பர் 21,22இல் காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டிலும் அந்தத் தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்படாத தால், காங்கிரஸை விட்டு குறிப்பிட்ட எண்ணிக்கையில் தோழர்களுடன் வெளியேறினார்.
சமூகநீதிக் கொள்கையை ஏற்றுக் கொண்ட நீதிக்கட்சியைத் தந்தை பெரியார் ஆதரிக்கும் நிலை ஏற்பட்டது, 1921ஆம் ஆண்டே இடஒதுக்கீட்டுக்கான ஆணையை நீதிக்கட்சி பிறப்பித்திருந்தாலும் 1928ஆம் ஆண்டில் நீதிக்கட்சி ஆதரவு பெற்ற டாக்டர் பி. சுப்பராயன் தலைமையிலான ஆட்சியில் அமைச்சர் முத்தையா முதலியார் அவர்களின் முழு முயற்சியால் பிறப்பிக்கப்பட்ட அந்த ஆணைதான் செயல்பாட்டுக்கு வந்தது. (GO.MS.No.1021 Dated 16.7.1928) (Public Services).
1950ஆம் ஆண்டுவரை அந்த ஆணை இடை இடையே சில மாறுதல்களுடன் செயல்பாட்டுக்கு வந்தது.
சுதந்திரம் அடைந்ததாக சொல்லப்படும் சுதந்திர நாட்டின் அரசியல் சட்டம் தான் (குடியரசு 1950 ஜனவரி 26) சென்னை மாநிலத்தில் செயல்பாட்டில் இருந்து வந்த இடஒதுக்கீட்டுக்குச் சாவு மணி அடித்தது!
தந்தை பெரியார் பொங்கி எழுந்தார்! தமிழ்நாடே அவர் தலைமையின்கீழ் திரண்டு எழுகிறது. அதன் விளைவுதான் முதல் சட்டத் திருத்தமாகும்.
நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பின்தான், இன்றைய தினம் மாநில அளவில், தமிழ்நாட்டில் 69 விழுக்காடு அரசமைப்புச் சட்டம் ஒன்பதாவது அட்டவணைப் பாதுகாப்போடு செயல் பாட்டில் இருக்கிறது! இந்த நிலை எட்டப்படுவதற்கு – திராவிடர் கழகத்தின் பங்கு மகத்தானதாகும்.
வருமான வரம்பு ஆணை என்றும், நுழைவுத் தேர்வு என்றும், கிரீமிலேயர் என்றும், நீதிமன்ற தீர்ப்பு என்றும் பல தடைகள் இருந்து வந்தாலும், அவற்றிற்கு எதிரான மக்கள் போராட்டத்தை – ஒத்த கருத்துள்ள கட்சிகளின், தலைவர்களின் ஒத்துழைப்போடு திராவிடர் கழகம் 69 விழுக்காட்டைப் பாதுகாத்திருக்கிறது என்பது வரலாறாகும்.
ஆனால் ஒன்றிய அரசைப் பொறுத்த வரையில், அதன் துறைகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு கிடையாது.
4.8.1940 அன்று திருவாரூரில் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற நீதிக்கட்சியின் 15ஆவது மாகாண மாநாட்டில்தான் இது குறித்த தீர்மானம் (19) நிறைவேற்றப்பட்டது.
சென்னை மாநிலத்தில் உள்ளது போல் அகில இந்திய சர்க்கார் உத்தியோகங்களிலும் கையாளப்பட வேண்டுமென்று இந்திய சர்க்காருக்குத் தெரிவித்துக் கொள்வதுடன், வரப் போகும் சீர்திருத்த சட்டத்திலேயே இது குறிக்கப்பட வேண்டுமென்றும் தீர்மானிக்கப்படுகிறது – என்பது தான் அந்த 19ஆவது தீர்மானமாகும்.
ஆனாலும் அதற்கு 52 ஆண்டுகளுக்குப்பிறகு 1992ஆம் ஆண்டில் தான் மண்டல் குழுப் பரிந்துரையின் வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 27 விழுக்காடு செயல்பாட்டுக்கு வந்தது. கல்வியிலோ அந்த இடஒதுக்கீடு 2006ஆம் ஆண்டில்தான் செயல்பாட்டுக்கு வந்தது.
மண்டல் குழுப் பரிந்துரைகளை செயல்படுத்தக்கோரி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் சீரிய தலைமையின்கீழ் திராவிடர் கழகம் 42 மாநாடுகளையும் 16 போராட்டங்களையும் நடத்தியது என்பது சாதாரணமானதல்ல!
சமூகநீதிக் காவலர் பிரதமர் வி.பி.சிங் தலைமையிலான ஆட்சியில்தான் (7.8.1990) வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு என்பது அறிவிக்கப் பட்டது. அந்த அறிவிப்பின்போது தந்தை பெரியார், பாபாசாகேப் அம்பேத்கர், ராம் மனோகர் லோகியா ஆகியோர்களை மிக்க நன்றி உணர்வுடன் நினைவு கூர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூகநீதிக்கு எதிரான கொள்கை உடைய பிஜேபி, பிரதமர் வி.பி.சிங்கின் அறிவிப்பைத் தொடர்ந்து, அதுவரை வெளியில் இருந்து வி.பி.சிங் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவு அளித்து வந்த நிலையிலிருந்து மாறுபட்டு தன் ஆதரவை விலக்கிக் கொண்டது. அதனால் வி.பி.சிங் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
‘‘சமூகநீதிக்காக ஒரு பிரதமர் நாற்காலி மட்டுமல்ல; நூறு பிரதமர் நாற்காலிகளையும் இழக்கத் தயாராக இருக்கிறேன்!’ என்று உணர்ச்சிப் பூர்வமாக அறிவித்துப் பதவி விலகினாரே – அந்தப் பெருமானை என்றென்றும் மிக்க மரியாதையான முறையில் நினைவு கூர்வோம்!
இவ்வளவுக்குப் பிறகும்கூட கிளாஸ்1 கிளாஸ் 2 மற்றும் அரசு செயலாளர்கள் போன்ற பதவிகளில் சட்டப்படி பிற்படுத்தப்பட்டவர்களுக்குரிய இடங்கள் அளிக்கப்படவில்லை என்பது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை!
அய்.ஏ.எஸ்.சில் 8 விழுக்காடு, அய்.பி.எஸ்.சில் 10 விழுக்காடு. அய்.எஃப்.எஸ்.சில் 17.28 விழுக்காடுதான் அளிக்கப்பட்டுள்ளது. மீதி உள்ள அத்தனை இடங்களும் பார்ப்பனர் மற்றும் உயர் ஜாதியினரின் ஆதிக்கம்தான் கொடி கட்டிப் பறக்கிறது.
இதனைஎதிர்த்து தான் தமிழ்நாடு எங்கும் மாவட்டத் தலைநகரங்களில் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பாக நேற்று (3.3.2026) திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சென்னையில் ஒன்றிய அரசு அலுவலகமான சாஸ்திரிபவன் முன்பாக திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணிஅவர்களின் தலைமையில் எழுச்சிமிகு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. திராவிடர் கழகத் தலைவர் 57ஆவது முறையாகக் கைது செய்யப்பட்டார் – கழகத்தின் இருபால் தோழர்களுடன்.
ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் மிகச் சரியாகக் குறிப்பிட்டதுபோல், இது தொடக்கம்தான், முழு வெற்றி கிட்டும் வரை திராவிடர் கழகம் களத்தில் நிற்கும் – போராடும் – வெற்றி பெறும்!
காலதாமதமானாலும் திராவிடர் கழகம் முன்னெடுத்த எந்தப் போராட்டமும் தோற்றதில்லை – இதிலும் அதே நிலைதான் – வெற்றி நமதே!
ஒன்றுபடுவோம்! வென்று காட்டுவோம்!!
மிகச்சிறப்பாகக் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்திய கழகத் தோழர்களுக்குப் பாராட்டுகள்! வாழ்த்துகள்!!
