புதுடில்லி, பிப்.13 நாடாளுமன்றத்தில் நடந்ததாக ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுவது பொய் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி மறுப்பு தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி மக்களவையில் பிரதமரை சூழ்ந்து கொண்டு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்க திட்டமிட்டனர் என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்திருந்தார். இந்நிலையில் மக்களவையில் காங்கிரஸ் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் மற்றும் அவைத் தலைவர் ஓம் பிர்லா அறைக்குள் சென்று வாக்குவாதம் செய்தது ஆகிய காட்சிப் பதிவு ஒன்றிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்டுள்ளார்.
மேலும், 20-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவின் அறைக்குள் நுழைந்து அவரை அவதூறாகப் பேசி மிரட்டியதாக கிரண் ரிஜிஜு குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து பிரியங்கா காந்தி நேற்று (12.2.2026) கூறியதாவது: மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அறைக்குள் சென்ற நாங்கள் யாரையும் திட்டவில்லை. 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் கிளர்ந்தெழுந்தனர். அவர்கள் அதை வெளிப்படுத்தினர். நான் அவர்களை ஊக்குவித்ததாக ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுகிறார். இது முழுக்க முழுக்க பொய். நான் அமைதியாக அமர்ந்திருந்தேன்.
இறுதியில், நான் சில விசயங்களை அமைதியாகச் சொன்னேன்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக வழக்குகள் தொடருதல் உள்ளிட்ட அனைத்தையும் அவர்கள் செய்வார்கள். ஆனால் எதுவும் ராகுல் காந்தியை பாதிக்க போவதில்லை. இவ்வாறு பிரியங்கா காந்தி கூறினார்.
தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு கேட்கும் காங்கிரஸ் கோரிக்கை எடுபடாது
வைகோ பேட்டி
கோவில்பட்டி, பிப்.13 மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திராவிட இயக்கத்தை பாதுகாக்க, தமிழ்நாட்டில் இந்துத்துவ சக்திகள் ஊடுருவ அனுமதிக்கக் கூடாது என்பதற்காகத்தான் திமுகவுடன், மதிமுக கூட்டணி அமைத்தது. கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம். திராவிட மாடல் ஆட்சியை நடத்துகின்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மீண்டும் முதலமைச்சராகி ஆட்சி அமைப்பார் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது.
தி.மு.க. ஆட்சி அமைக்கும்
கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சிகளும் ஒவ்வொரு கருத்தை சொல்லிக் கொண்டு இருக்கின்றனர். ஆட்சியில் பங்கு வேண்டும், அதிக இடங்கள் வேண்டும் என்று கேட்பது அவரவர் உரிமை. ஆனால் மதிமுக கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் அவ்விதமான எவ்வித நிபந்தனையும் விதிக்கவோ, அதுபோன்று ஒரு சொல் கூட சொல்லியது கிடையாது.
வரும் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சியை தொடரும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் அவரிடம், காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு கேட்பது குறித்து கேட்டபோது, “தனிப்பெரும்பான்மை பெற்று திமுக ஆட்சி அமைக்கும்போது இந்த கோரிக்கைகள் எல்லாம் எடுபடாது, ஏற்கப்படாது” என வைகோ பதிலளித்தார்.
எஸ்சி, எஸ்டி இளைஞர்களுக்கு
சூரிய ஒளி மின்சார தொழில் நுட்ப வல்லுநர் பயிற்சி
தாட்கோ அதிகாரி தகவல்
சென்னை, பிப்.13 தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதிமேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ)மேலாண் இயக்குநர் கே.எஸ்.கந்தசாமி நேற்று (12.2.2026) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் வகையில் தாட்கோ நிறுவனம் பல்வேறு திறன்பயிற்சிகளை அளித்து வருகிறது.அந்த வகையில், தற்போது டாக்டர் ரெட்டி நிறுவனத்துடன் இணைந்து சூரிய ஒளி பலகை பொருத்தும் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இந்த பயிற்சியில் 12-ஆம் வகுப்பு முதல் ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு முடித்தவர்கள்வரைசேரலாம். வயது 18 முதல் 32-க்குள் இருக்க வேண்டும். குடும்பஆண்டு வருமானவரம்பு ரூ.3 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயிற்சிக்காலம் 45 நாட்கள். சென்னையில் விடுதி வசதி, உணவுச்செலவினம் ஆகியவற்றை தாட்கோ ஏற்றுக்கொள்ளும். பயிற்சியை முழுமையாக முடிப்போருக்கு தேசிய திறன் மேம்பாட்டுக் கழக அங்கீகாரச் சான்றிதழ் வழங்கப்படும். மாதம் ரூ.18 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையிலான வேலைவாய்ப்பும் பெற்றுத்தரப்படும். சுயமாக தொழில் தொடங்க விரும்புவோ ருக்கு தாட்கோமூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படும். பயிற்சிபெற விரும்பு வோர் தாட்கோ இணையதளத்தில் (www.tahdco.com) பதிவுசெய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
