இதுதான் தமிழ்நாடு! 2026ஆம் நிதி ஆண்டில் இந்தியாவின் மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாடு 45 சதவீதமாக உயரும்! அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்

4 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, பிப். 11- தமிழ்நாடு இந்தியாவின் மின்னணு ஏற்றுமதியில் 45 சதவீதத்தை 2026 நிதியாண்டில் எட்டும் என தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மின்னணு ஏற்றுமதி

இந்திய மின்னணு தொழில்துறை சங்கம் (எல்சினா) சார்பில் ‘சோர்ஸ் இந்தியா’ மின்னணு விநியோகச் சங்கிலி மாநாடு, சென்னையில் நேற்று (10.2.2026) தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் வணிக நிறுவனங்களுக்கு இடையே மின்னணு உற்பத்தில் முக்கிய பங்குதாரர்களாக வகிப்போர் பங்கேற்கின்றனர். மாநாட்டை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தொடங்கி வைத்து, தமிழ்நாட்டின் மின்னணு தொழில் நிலை மற்றும் வளர்ச்சி அறிக்கை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:

மின்னணுத் துறையில் உதிரி பாகங்களைப் பொருத்துதல் (அசெம்பிள்) பணிகளுடன் நின்று விடாமல், உதிரிபாகங்கள் தயாரிப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, அறிவுசார் சொத்துரிமை உருவாக்கத்தில் கவனம் செலுத்துவதன் மூலம் ‘குளோபல் சவுத்’ நாடுகளுக்கான மின்னணு மய்யமாக தமிழ்நாட்டை மாற்ற தமிழ்நாடு அரசு நடப்பாண்டு இலக்கு நிர்ணயித்துள்ளது. கடந்த 2025ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த மின்னணு ஏற்றுமதியில் 15 பில்லியன் டாலராக 41 சதவீத பங்கை தமிழ்நாடு கொண்டிருந்தது.

தற்போது 2026ஆம் ஆண்டில் அது 45 சதவீதமாக உயர வாய்ப்புள்ளது. 2030-க்குள் இந்தியாவின் மின்னணு உற்பத்தி துறை 500 பில்லியன் டாலர் இலக்கை எட்டும்போது, அதில் தமிழ்நாடு மட்டும் 150 பில்லியன் டாலர் சந்தையாக உருவெடுக்கும். இவ்வாறு பேசினார்.

இந்த மாநாட்டில் பங்கேற்ற டிக்ஸன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அதுல் லால் பேசும்போது, “ஒன்றிய அரசின் பட்ஜெட் ஒதுக்கீடு மற்றும் அய்ரோப்பிய ஒன்றியத்துடனான தாராள வர்த்தக ஒப்பந் தங்களால் 2030-க்குள் 500 பில்லியன் டாலர் இலக்கை எட்டுவது சாத்தியம்” என்றார்.

இந்நிகழ்வில் தொழில்துறை செயலர் அருண் ராய், இந்திய மின்னணு தொழில்துறை சங்க தலைவர் சசிகுமார் கெந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

தூய்மைப் பணியாளர்கள் விவகாரம்

உழைப்போர் இயக்கம் – மாநகராட்சி இடையிலான வழக்கு

உயர்நீதிமன்றத்தில் முடித்து வைப்பு

சென்னை, பிப்.11- தூய்மை பணியாளர் பிரச்சினையில் உழைப்போர் உரிமை இயக்கத்துக்கும், சென்னை மாநகராட்சிக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டதை எடுத்து, தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் ராயபுரம் மற்றும் திரு.வி.க. நகர் மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து உழைப்போர் உரிமை இயக்கம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் சி.குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது உழைப்போர் உரிமை இயக்கம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் குமாரசாமி, மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், சென்னை மாநகராட்சியின் அய்ந்து மற்றும் ஆறாவது மண்டலங்களில் உள்ள சுய உதவிக்குழுவின் தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் 1,400 பேரை நான்கு மற்றும் எட்டாவது மண்டலங்களில் மீண்டும் பணியமர்த்த பெருநகர சென்னை மாநகராட்சி ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், தொழிலாளர் தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ள மூன்று விவகாரங்களை அங்கேயே தொடர்ந்து நடத்துவது என இரு தரப்பும் முடிவு செய்துள்ளதால், வழக்கை முடித்து வைக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், உழைப்போர் உரிமை இயக்கம் தாக்கல் செய்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

அனில் அம்பானி – டினா அம்பானிக்கு அமலாக்கத்துறை மீண்டும் அழைப்பாணை

ரூ.1,200 கோடி சொத்துக்கள் முடக்கம்!

மும்பை, பிப். 11- ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள் மீதான நிதி முறைகேடு மற்றும் வங்கிக்கடன் மோசடி புகார்கள் தொடர்பாக, அந்த குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி மற்றும் அவரது மனைவி டினா அம்பானி ஆகியோருக்கு அமலாக்கத்துறை (ED) புதிய அழைப்பாணைகளை அனுப்பியுள்ளது.

ரிலையன்ஸ் குழுமத்திற்கு சொந்தமான பல்வேறு நிறுவனங்களில் நடைபெற்றதாகக் கூறப்படும் சட்டவிரோத பணப்பரிமாற்றங்கள் குறித்து அமலாக்கத்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஏற்கெனவே அந்த குழுமத்திற்கு சொந்தமான ரூ.1,200 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

கடந்த ஆண்டு, இந்த புகார்கள் தொடர்பாக அனில் அம்பானியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நீண்ட விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.அனில் அம்பானியின் மனைவி டினா அம்பானி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பை வாங்கியதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளிக்க கடந்த சில நாள்களுக்கு முன்பு அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

விசாரணைக்கு ஆஜராகாததைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை தற்போது மீண்டும் அழைப்பாணை அனுப்பியுள்ளது: டினா அம்பானி: வரும் 17ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிடப் பட்டுள்ளது. அனில் அம்பானி: அடுத்த நாள், அதாவது 18ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. இந்த தொடர் விசாரணைகள் ரிலையன்ஸ் குழும வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *