புதுடில்லி, ஜன.30 தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியில் (எஸ்.அய்.ஆர்.)முரண்பாடுகள் கண்டறியப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல்
இதுதொடர்பாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி சார்பில் வழக்குரைஞர் விவேக் சிங் தாக்கல் செய்த இடையீட்டு மனுவில், ‘‘தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு பிறகு கடந்த மாதம் 19-ஆம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் வரைவு பட்டியலில் 97,37,832 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் வாக்காளர் எண்ணிக்கை 6,41,14,587-இல் இருந்து 5,43,76,755 ஆகக் குறைந்தது.
இதனிடையே, 1,70,12,026 வாக் காளர்கள் பெயர்கள் முரண்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளது கவலை அளிக் கிறது. இவற்றில் 19 சதவீதம் பேருக்கு வழங்க வேண்டிய அறிவிக்கை அச்சிடப்படவில்லை. 18,25,739 பேருக்கு மட்டுமே முறையாக அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. 1,21,85,443 பேருக்கு அறிவிப்பு வழங்கப்படவில்லை, எனவே, ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டிய வாக்காளர்கள், முரண்பாடுகள் கண்டறியப்பட்ட வாக்காளர்கள் பெயர்களை வாக்குச் சாவடி வாரியாக வெளியிட வேண்டும். அவற்றை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்க தேர்தல் ஆணையத் துக்கு உத்தரவிட வேண்டும்’’ என கோரப்பட்டிருந்தது.
இதுதொடர்பான இடையீட்டு மனு குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமை யிலான அமர்வு முன் மூத்த வழக்குரை ஞர்கள் கபில் சிபல், என்.ஆர். இளங்கோ, அமித் ஆனந்தி இவாரி உள்ளிட்டோர் முறையிட்டனர். அப்போது தேர்தல் ஆணையத்தின் சார்பில் மூத்த வழக்குரைஞர் டி.எஸ்.நாயுடு ஆஜராகி, முரண்பாடுகள் கண்டறியப்பட்டதற்கான காரணங் களை வெளியிட்டால் வாக்காளர்களின் அந்தரங்க உரிமை பாதிக்கப்படும் என வாதிட்டார்.
உச்சநீதிமன்றம் உத்தரவு
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உச்ச நீதிமன்றம், ‘‘முரண்பாடுகள் கண்டறியப்பட்ட வாக்காளர்களின் பெயர் பட்டியலை சிறிய காரணத்துடன் ஊராட்சி, வட்டாட்சியர், வார்டு அலுவலகங்களில் தேர்தல் ஆணையம் ஒட்ட வேண்டும். முரண்பாடுகள் கண்டறியப்பட்ட வாக்காளர்கள் 10 நாள்களுக்குள் உரிய ஆவணங்களுடன் நேரிலோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட நபர் மூலமோ தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை சுமுகமாக நடத்த தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பின்பற்ற வேண்டும். மேலும் எஸ்.அய்.ஆர். பணியின் போது சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் சுமுகமாக நடத்துவதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும் உறுதி செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர்.
