ஒரு நாட்டின் எதிர்காலம் வகுப்பறைகளில்தான் தீர்மானிக்கப்படுகிறது. அறிவியல் மனப்பான்மையையும், பகுத்தறிவையும் வளர்க்க வேண்டிய பள்ளிகள், இன்று தியானம் மற்றும் ‘சத்சங்’ என்ற பெயரில் மூடநம்பிக்கைகளின் மய்யமாக மாறி வருவது சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் மத்தியப் பிரதேசத்தில் நடந்த ஒரு நிகழ்வு இதற்குச் சான்றாக அமைந்துள்ளது.
பள்ளியில் அரங்கேறிய அவலம்
மத்தியப் பிரதேசத்தில் உள்ள பாகேஸ்வர் மடத்தின் தலைவர் ஒரு பள்ளிக்கு வருகை தந்துள்ளார். அங்கு மாணவர்களிடையே அவர் ‘சத்சங்’ நடத்தியபோது, மாணவர்கள் திடீரென எழுந்து சாமியாடத் தொடங்கியுள்ளனர். அறிவியலும், கணிதமும் புகட்டப்பட வேண்டிய இடத்தில், மாணவர்கள் சுயநினைவின்றி விழுந்து புரண்டு ஆடுவதைக் கண்டு ஆசிரியர்களும், பெற்றோர்களும் தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்ப்பது வேதனையளிக்கிறது.
பள்ளிகளில் மாணவர்களின் படைப்பாற்றலை வளர்ப்பதை விட, பாஜக ஆளும் மாநிலங்களில் இத்தகைய மத ரீதியான நிகழ்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
வெறும் 11 வயதே நிரம்பிய சிறுவன் ஒருவனை ‘சாமியார்’ என்று அழைத்து, மாணவர்களிடையே பேசச் சொல்கிறார்கள்.
அவன் ‘ராதே ராதே’ என்று உரக்கக் கத்த, மாணவர்களும் அதைத் திரும்பச் சொல்லுமாறு கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.
சிறுவயதிலேயே மாணவர்களின் பிஞ்சு மனங்களில் பகுத்தறிவுக்குப் பதிலாக, கண்மூடித்தனமான நம்பிக்கைகள் விதைக்கப்படுகின்றன.
அரசின் மெத்தனப் போக்கு
மூடநம்பிக்கைகளைத் தடுத்து, மாணவர்களுக்குச் சரியான வழிகாட்ட வேண்டிய அரசாங்கம், இதுபோன்ற சாமியார்களுக்குக் காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிப்பது நிலைமையை இன்னும் மோசமாக்குகிறது.
சட்டமும் ஒழுங்கும் காக்கப்பட வேண்டிய காவல் துறையினர், சாமியார்களின் பின்னால் அணிவகுப்பதும், கல்வி நிலையங்களுக்குள் இத்தகைய நிகழ்வுகளுக்கு அனுமதி அளிப்பதும் அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்தும் “அறிவியல் மனப்பான்மையை” (Scientific Temper) சீர்குலைப்பதாக உள்ளது.
கல்வி என்பது மனிதனை இருளிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும். ஆனால், இத்தகைய நிகழ்வுகள் மாணவர்களை மீண்டும் இருண்ட காலத்தை நோக்கித் தள்ளுகின்றன. மேதைகளாகவும், விஞ்ஞானிகளாகவும் வரவேண்டிய மாணவச் செல்வங்கள், மேடையில் ஆடுபவர்களின் சொல்லுக்கு மயங்கிச் சாமியாடுவது ஒரு நாகரிக சமூகத்திற்கு அழகல்ல. பள்ளிகள் மதப் பிரச்சாரக் களங்களாக மாறுவதை அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.
