திப்புசுல்தான் ஆட்சியில் 3000 பார்ப்பனர்கள் தற்கொலை செய்து கொண்டது உண்மையா?
ஹரி பிரசாத் சாஸ்திரியின் புரட்டை அம்பலப்படுத்திய ஒடிசா ஆளுநர் பி.என்.பாண்டே!
மதுரை.ஜன.22, சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவில், பல்கலைக் கழக வேந்தர் ஆசிரியர் கி.வீரமணி, வரலாற்றுத் திரிபுகள் ஏன் ஏற்படுகின்றன? அதற்கான தரவுகள் என்னென்ன? தீர்வுகள் என்ன? அதில் மாணவர்களின் பங்கு என்ன? என்ற கண்ணோட்டத்தில் ஆய்வுரை வழங்கினார்.
மதுரை வடக்கு தல்லாகுளம் பகுதியில், பி.டி.ராஜன் சாலை எதிரில் உள்ள, ”டோக் பெருமாட்டி மகளிர் கல்லூரி”யின் முதுகலை வரலாற்று ஆய்வு மய்யம் மற்றும் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் இரண்டும் இணைந்து, “சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா”வை ஒருநாள் கருத்தரங்கம் ”வரலாற்று திரிபுவாதங்களை மீட்பது எப்படி?” எனும் தலைப்பில், கல்லூரியின் ஜே.எக்ஸ்.மில்லர் அரங்கத்தில் 21.01.2026 அன்று காலை முதல் மாலை வரை இரண்டு அமர்வுகளாக மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தன.
முதல் அமர்வு காலை 10:30க்குத் தொடங்கியது. முன்னதாக பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) வேந்தர் கி.வீரமணி அவர்களை கல்லூரி மாணவர்கள் எழுந்து நின்று உற்சாகமாக வரவேற்றனர். தொடர்ந்து கல்லூரியின் வழமைப்படி இறை வணக்கம் பாடப்பட்டது. தொடர்ந்து தமிழ்மொழி, வாழ்த்துப் பாடப்பட்டது. இரண்டும் முடியும் வரை, பல்கலைக்கழகத்தின் வேந்தர் கி.வீரமணி அவர்கள் உள்பட, அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்து அமர்ந்தனர்.
காணொலி திரையிடல்
கல்லூரியின் ஆங்கிலப் பேராசிரியர் டாக்டர் ஜெசி ரஞ்சிதா ஜெபசெல்வி அமர்வை ஒருங்கிணைத்தார். கல்லூரியின் வரலாற்றுத் துறை தலைவரும், பேராசிரியருமான டாக்டர் மெர்சி பாக்கியம் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். கல்லூரியின் முதல்வர் டாக்டர் பியூலா ஜெயசிறீ தலைமை ஏற்று உரையாற்றினார். தொடக்க நிகழ்வில் கலந்துகொண்ட, பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலை பல்கலைக் கழகம்) வேந்தர் கி.வீரமணி, மேனாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம், வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் துணைத் தலைவர் பேராசிரியர் கருணானந்தம் ஆகியோரை அறிமுகம் செய்து உரையாற்றினார்.
முதல் அமர்வுக்கு பேராசிரியர் முத்துலட்சுமி பொறுப்பேற்று சிறப்பித்தார். வேந்தர் கி.வீரமணி மற்றும் மேடையில் வீற்றிருந்த சிறப்பு அழைப்பாளர்களுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. முதல் அமர்வின் இறுதியில் வேந்தர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். முன்னதாக வேந்தர் கி.வீரமணி அவர்களைப் பற்றிய, வரலாற்றுத் துறை மாணவர்கள் தயார் செய்திருந்த 6 நிமிடக் காணொலி, திரையிடப்பட்டது. இதற்காக மேடையில் ஒரு பெரிய திரையும், பார்வையாளர்களுக்கும் மேடையின் இடம், வலமாக பெரிய திரைகளும் அமைக்கப்பட்டிருந்தன.
பாராட்டுகளை எதிர்ப்பார்ப்பவர்கள் அல்ல!
இறுதியாக வேந்தர் கி.வீரமணி ஆங்கிலம், தமிழ் என இருமொழிகளில் கலந்து உரையாற்றினார். தொடக்கத்தில், “தன்னைப் பற்றி திரையிடப்பட்ட காணொலி பற்றிய கருத்தாக, “நாங்கள் எதிர்ப்புகளை எதிர்பார்ப்பவர்களே தவிர, பாராட்டுகளை அல்ல” என்று குறிப்பிட்டுவிட்டு, “வரலாற்று திரிபுகளை மீட்பது எப்படி?” என்ற தலைப்பை தேர்ந்தெடுத்த துணிச்சலுக்காக நான் திறந்த மனதுடன் பாராட்டுகிறேன்” என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களைப் பாராட்டினார். தனது தொண்டை புண்ணாகி சரியாக பேசமுடியாத நிலையைச் சுட்டிக்காட்ட, “இரண்டு நாட்களாக எனது தொண்டை புண்ணாகி பேசமுடியவில்லை. தொண்டைதான் சரியில்லை; எனது தொண்டு சரியாக இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காக ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன்” என்று பலத்த சிரிப்பும் கைதட்டல்களும் ஒன்று சேர எழும் படியாக, தன்னை சுய அறிமுகம் செய்து கொண்டார்.
புராணங்களை வரலாறாகத் திரிப்பதா?
தொடர்ந்து, சுயமரியாதை இயக்கத்தின் முதல் கொள்கை என்று, ‘பிறவி பேதம் கூடாது’ என்பதைச் சொன்னார். சுயமரியாதை இயக்கத்துக்கு ‘அறிவு விடுதலை இயக்கம்’ என்று சொல்லலாம் என்று சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய பெரியார் குறிப்பிட்ட அரிய கருத்தை பதிவு செய்தார். அரங்கத்தில் அமர்ந்திருந்த மாணவர்கள் அனைவரும் மகளிர் என்பதைக் கண்டு கொண்டு, ”பிறவி பேதம் என்றால், ஜாதியில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்பது மட்டுமல்ல, ஆண் உயர்ந்தவர் பெண் தாழ்ந்தவர் என்பதும் பிறவி பேதம்தான் என்று சொன்னவர் பெரியார்” என்றும், “அந்த வகையில் இந்தக் கல்லூரி ஆயிரம் பெண்களுக்கு அறிவு விடுதலை தரும் பணியைச் செய்கிறது” என்றும் அரங்கம் அதிர, அதிர கைதட்டல்கள் எழும்படியாக அந்தக்கருத்தைப் பதிவு செய்தார். தொடர்ந்து தலைப்பை நினைவுபடுத்தி, “History is different from mythology” என்று சொல்லிவிட்டு, “எல்லா புராணங்களும் வரலாறாக திரிக்கப்படுகின்றன” என்று குற்றம் சாட்டினார். தொடர்ந்து, வரலாற்று ஆசிரியர் ரொமிலா தாப்பர் எழுதிய, ‘The future in the Past’ புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு, ஆரியர்கள் எப்படியெல்லாம் வரலாற்றைத் திரித்து பொய்களை வரலாறுகளாக கட்டமைக்கின்றனர் என்று அம்பலப் படுத்தியுள்ளதை, சம்பவங்களை வாசித்துக் காட்டி நிறுவினார்.
இதைவிடப் புரட்டு இருக்க முடியுமா?
மேலும் அவர், இருக்கிற திரிபுகளிலேயே மோசமான திரிபாக ஒன்றைச் சுட்டிக்காட்டினார். அதாவது 1886 களில் நடந்த, ’ஹரிபிரசாத் சாஸ்திரி என்பவர், திப்பு சுல்தான் ஆட்சிக்காலத்தில் மதம் மாறுவதற்கு கட்டாயப்படுத்தியதால் 3000 பார்ப்பனர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள்’ என்று எழுதிவிட்டார். இதைப் படித்த ஒடிசாவின் ஆளுநராக இருந்த, பி.என்.பாண்டே என்பவர், இதற்கு ஆதாரம் இருக்கிறதா என்று, ‘ஹரிபிரசாத் பாண்டே’ வுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். பதில் வராமல் போகவே, திரும்பத் திரும்ப கடிதங்களை எழுதியிருக்கிறார். இறுதியில், ‘இதற்கு ஆதாரம் மைசூர் கெசட்டில் இருக்கிறது’ என்று நூலாசிரியர் ஹரிபிரசாத் பதில் கடிதம் அனுப்பியிருக்கிறார். பி.என்.பாண்டே அந்தப் பதிலில் மனநிறைவடையாமல், மைசூர் அரசின் சர்.பிரிட்ஜ் ராஜேந்திரா என்பவருக்கு கடிதம் எழுதினார். அவர், இக்கடிதத்தை, மைசூர் கெசட்டில் மறுபதிப்பு செய்யும் பணிகளில் ஈடுபட்டிருந்த, பேராசிரியர் கரந்தையா என்பவருக்கு அனுப்பினார். அவர், ‘மைசூர் வரலாற்றில் இப்படி ஒரு சம்பவம் நடைபெறவே இல்லை’ என்று பதில் கடிதம் அனுப்பியிருக்கிறார்’ என்பதை விவரித்துவிட்டு, “இதைவிடப் புரட்டு என்று ஒன்று இருக்க முடியுமா?” என்றார்.
கீழடி நாகரிகத்தை மறுக்கின்ற ஒன்றிய அரசு
தொடர்ந்து, சர்.ஜான் மார்சல் அவர்களை நினைவு கூர்ந்து, “மொகஞ்சாதாரோ, ஹரப்பா ஆகிய திராவிட நாகரிகங்களை சரஸ்வதி நாகரிகமாக மாற்ற முயற்சிகள் நடைபெறுகின்றன. சிந்துவெளி நாகரிகத்தை விட முந்துவெளி நாகரிகமாக புதையலாக கிடைத்துள்ள கீழடி நாகரிகத்தை ஏற்க ஒன்றிய அரசு மறுக்கிறது” என்றும், ‘‘திரிபுகளைவிட மோசமானது, அதை ஆய்வாளர்களை வைத்தே வெளியிடுவது” என்றெல்லாம் வரலாறு நெடுக நடைபெற்று வரும் திரிபுகளை; புரட்டுகளை சுட்டிக்காட்டி, ”திராவிடர் நாகரிகத்திற்கு எதிர்காலத்தில் கீழடிதான் அடையாளமாக மாறப்போகிறது” என்பதையும் பதிவு செய்து, ‘‘திரிபுகளிலிருந்து விடுபட, மாணவச் செல்வங்கள் விழிப்புணர்வோடு இருந்து தடுக்க முன்வரவேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்து, பலத்த கைதட்டல்களுடன் தனது உரையை நிறைவு செய்தார். தொடர்ந்து, மேனாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தின் சாதனைகளை பட்டியலிட்டுப் பேசினார்.
நிகழ்வில் தோழர்கள் எடிசன் ராஜா, மதுரை செல்வம், முனைவர் வா.நேரு, ஒரத்தநாடு இரா.குணசேகரன், தஞ்சை இரா. பெரியார் செல்வன், பேராசிரியர் நம்.சீனிவாசன், இரா.திருப்பதி, ஆ.முருனானந்தம், இராலீ.சுரேஷ், ஒளிப்படக் கலைஞர் இராதா, வா.சடகோபன், மதுரை பெரியார் செல்வன், சீ.தேவராஜ பாண்டியன் உள்ளிட்டோர் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் முன்னிலை வகித்தும், அரங்கம் நிறையும் அளவுக்கு மாணவர்கள் கலந்துகொண்டும் சிறப்பித்தனர். நிகழ்ச்சி முடிந்த பிறகு காத்திருந்த பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து விட்டு ஆசிரியர் கி. வீரமணி அடுத்த நிகழ்ச்சிக்காக விருதுநகர் புறப்பட்டார்.
