‘திராவிட மாடல்’ அரசின் முதலமைச்சரின் அறிவிப்பு –‘பரந்த, விரிந்த மனப்பான்மையாளர்’ அவர் என்பதை உலகறியச் செய்யும் எடுத்துக்காட்டு!

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

துணைவேந்தர் நியமனம்முதல் கலை, மொழி, இலக்கியம், வரலாறு
அனைத்தையும் காவி மயமாக்கும் ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி. அரசு!
குறிப்பிட்ட இந்திய மொழிகளில் வெளிவரும் தலைசிறந்த படைப்புகளுக்கு ஆண்டுதோறும் ‘‘செம்மொழி இலக்கிய விருதுடன்’’ தலா ரூ.5 லட்சம் பரிசுத் தொகை!

துணைவேந்தர் நியமனம் முதல், கலை, மொழி, இலக்கியம், வரலாறு உள்ளிட்ட பண்பாட்டுத் தளத்தை எல்லாம் ஒன்றிய பி.ஜே.பி. அரசு காவி மயமாக்கிவரும் நிலையில், இந்திய அளவில் குறிப்பிட்ட மொழிகளில் வெளிவரும் தலைசிறந்த படைப்புகளுக்கு ஆண்டுதோறும் ‘செம்மொழி இலக்கிய விருதும்’, தலா 5 லட்சம் ரூபாய் பரிசும் வழங்கப்படும் என்ற ‘திராவிட மாடல்’ அரசின் நாயகரின் அறிவிப்பு – ‘பரந்த, விரிந்த மனப்பான்மையாளர்’ நமது முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் என்பதற்கான எடுத்துக்காட்டு என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பாராட்டி, வரவேற்று விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டில் நடைபெறும் ‘திராவிட மாடல்’ அரசின் முதலமைச்சர், சமூகநீதிக்கான சரித்திர நாயகர் அவர்களது அண்மை அறிவிப்பு  – இலக்கியவாதிகளும், எழுத்தாளர்களும் பாராட்டி வரவேற்கும் மிக அருமையானதொரு திட்டமாகும்!

‘‘குறிப்பிட்ட இந்திய மொழிகளில் வெளியாகின்ற, தலைசிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில், ஆண்டுதோறும் தேசிய அளவிலான விருதுகள் வழங்கப்படும். முதல்கட்டமாக, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, வங்காளம் மற்றும் மராட்டிய மொழிகளில் வெளியாகின்ற தலைசிறந்த படைப்புகளுக்கு ஆண்டுதோறும் “செம்மொழி இலக்கிய விருது” என்ற பெயரில் அந்த விருது வழங்கப்படும். விருதுடன், தலா 5 இலட்சம் ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்படும்.

படைப்புகளின் இலக்கியத் தரத்தையும், வெளிப்படையான தேர்வு முறையையும் உறுதி செய்யும் விதமாக புகழ்பெற்ற எழுத்தாளர்கள், விருதாளர்கள் அடங்கிய குழு ஒவ்வொரு மொழிக்கும் தனியே அமைக்கப்படும். புரவலர் பணியை தமிழ்நாடு அரசு மனநிறைவோடு மேற்கொள்ளும்.

காதுகளில் தேன் பாய்ந்த மகிழ்ச்சியை
உருவாக்கும் என்பது நிச்சயம்!

அடுத்து அமையப்போவதும் ‘திராவிட மாடல் 2.0’ ஆட்சிதான்! அப்போது, இதைவிடப் பெரிய அளவில், உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில், இந்தப் பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவை நடத்துவோம்!’’ என்று கூறியுள்ளது இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் காதுகளில் மட்டுமல்ல, இலக்கிய ரசனை உள்ள அந்தந்த மொழிப் பற்றாளர்களின் காதுகளில் தேன் பாய்ந்த மகிழ்ச்சியை உருவாக்கும் என்பது நிச்சயம்!

அனைத்தும் ஆர்.எஸ்.எஸ். – காவிமயம்!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் பிரிவான பா.ஜ.க., ஒன்றிய ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்தே – அரசின் பொது வள சுதந்திரத்துடன் இயங்கி வந்த வரலாற்று ஆய்வு அமைப்பு, கலாச்சாரப் பாதுகாப்பு அமைப்புக் குழு அனைத்தும் ஆர்.எஸ்.எஸ். – காவிமயம் ஆக்கப்பட்டு வருகின்றன!

இதை, நாடாளுமன்றத்தில்கூட எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் சுட்டிக்காட்டி, கண்டனம் தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.

துணைவேந்தர்கள் நியமனம் தொடங்கி, அரசின் கலை, இலக்கிய, மொழி அமைப்புகள், வரலாறு, அறிவியல் அமைப்புகள் எல்லாவற்றையும் காவி மயமாக்கி வரும் நிலையில், சுதந்திரமாக இதுவரை தலையீடு இன்றி நடந்து வந்த இலக்கிய பீடமான ‘‘சாகித்ய அகாடமி’யின்  விருதையே – அது தகுதி மிக்க ஒருவருக்குச் செல்லக்கூடாது – காரணம், அவர் இடதுசாரி கருத்தாளர் என்பதால், அப்பரிசை நிறுத்தி வைத்துவிட்டது ஒன்றிய பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். அரசு. இது ஏற்கத்தக்கதா? நியாயமா?

இதற்கு சரியான ஆக்கப்பூர்வமான பதிலடிதான் ‘திராவிட மாடல்’ முதலமைச்சரின் வரவேற்கத்தக்க மேற்கண்ட அறிவிப்பு!

‘பரந்த, விரிந்த மனப்பான்மையாளர்!’

‘திராவிட மாடல்’ அரசு, வெறுப்பு அரசியல் நடத்தாத ஒன்று; எந்த மொழி மீதும் வெறுப்பு இல்லை. பண்பாட்டுப் படையெடுப்பு, மொழித் திணிப்பை ஒரு வழிமுறையாகக் கொள்ள திட்டமி்ட்டு செயல்படுவதை எதிர்ப்பதுதான் ‘திராவிட மாடல்’ ஆட்சி என்று நமது முதலமைச்சர் இந்தப் புதிய ஏற்பாட்டினை அறிவித்துள்ளார், தக்க நேரத்தி்ல்!

‘‘பரந்த, விரிந்த மனப்பான்மையாளர்’’ அவர் என்பதை உலகறிய இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு!

கி.வீரமணி

தலைவர்,
திராவிடர் கழகம்

 

சென்னை
19.1.2026

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *