அரசமைப்புச் சட்டத்தைக் கரையான் அரிக்கவிடக் கூடாது; நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இதனை முறியடிப்பது அவசியம்!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

 தனியார்த் துறைகளை நோக்கி மோடி அரசு!  விமானம், துறைமுகம் என்று எல்லாம் தனியார்த் துறைக்கே!  அடுத்த அபாயகரமான 2025–2026 பட்ஜெட்?
ரூ.17 லட்சம் கோடி மதிப்பிலான உள்கட்டமைப்புகளை தனியார் வசம் மூன்று ஆண்டுகளுக்கு ஒப்படைக்கும் திட்டம் – ஏற்பாடு!
அரசமைப்புச் சட்டத்தைக் கரையான் அரிக்கவிடக் கூடாது; நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இதனை முறியடிப்பது அவசியம்!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

மோடி தலைமையிலான ஒன்றிய பி.ஜே.பி. அரசு, ரூ.17 லட்சம் கோடி மதிப்பிலான உள்கட்டமைப்புகளை மூன்று ஆண்டுகளுக்குத் தனியாருக்குத் தாரை வார்க்கும் திட்டத்தை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முறியடிக்க முனைய வேண்டும்  என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

Contents

2014 இல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் பிரிவான பா.ஜ.க.– தேசிய ஜனநாயக முன்னணி என்ற கூட்டணியை அமைத்து, மிகத் தந்திரமாக – இளைஞர்களின் வேலை கிட்டா ஏக்கம், மக்களின் வறுமை – விவசாயிகளின் வாழ்க்கைத் தர மாற்ற உறுதி போன்றவற்றையே தமது ஆட்சித் திட்டமாக ஒரு மாய்மால அஜெண்டா, அள்ளிவிட்ட ‘‘ஜூம்லா’’வென பின்னாளில் அவர்களே கூறி செயல்படாத, செயல்படுத்த முடியாத வாக்குறுதிகளைக் கூறி, பா.ஜ.க. – தாமோதரதாஸ் நரேந்திர மோடியை – அதுவும்கூட அவர் ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகப் பிரிவினர் என்ற ஏற்பாட்டை திட்டமிட்டுத் திணித்துச் செய்த பிறகு, தேர்தலில் பிரதமர் வேட்பாளராக அவரைக் களம் இறக்கி வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தனர் என்பது நாடறிந்த ஒன்று.

மோடி அரசு அள்ளிவிட்ட வாக்குறுதிகள்
கொஞ்சமா, நஞ்சமா?

அவர் அள்ளிவிட்ட வாக்குறுதிகளான ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை தரும் வாக்குறுதி!

ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் ‘பொத்’தென்று வந்து விழும் வாக்குறுதி!

விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை இரு மடங்கு மேம்பாடு அடையச் செய்யும் வாக்குறுதி!

என்று இப்படி பல வாக்குறுதிகளைத் தந்த நிலையில், இரண்டாம், மூன்றாம் முறை ஆட்சிச் சிம்மாசனத்தைக் கைப்பற்றிய பிறகு, முக்கியமான பலவற்றை மறைத்து,  தங்களது கொள்கைகளை,  ஆர்.எஸ்.எஸ். திட்டங்களை வெளிப்படையாக – அடுத்தடுத்து செயல்படுத்தி, எதிர்க்கட்சி – எதிர்க் கருத்துகளை அலட்சியப்படுத்தினர்.

தங்களது ஆட்சியைப் பயன்படுத்தி –சமூக, பொருளாதார, அரசியல் அமைப்புகளை – அரசியலமைப்புச் சட்ட அடிக்கட்டுமானத்தையே – நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் இடித்துத் தகர்க்கும் தங்களது அஜெண்டாவான ‘ஹிந்துராஷ்டிரத்தை’யே நிலைநாட்டும் முயுற்சியில் தீவிரமாக உள்ளனர்!

இந்தியா, பல மாநிலங்கள் இணைந்த ஒரு கூட்டாட்சி என்ற அதன் முதல் கூறை (First Article) யே உடைத்து வந்து,

ஹிந்து நாடாக்கத் திட்டம்!

Instead of Federal only Unitary Socialist, Secular – மதச்சார்பற்ற என்பதை அகற்றிவிட்டு, ஒற்றை ஆட்சி முறையை, எழுதப்படாத ‘ஹிந்து நாடாகவே’ ஆக்கி வருவதோடு, பதவியேற்றபோது எடுத்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கும் உறுதி மொழியையே அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்தெறிந்து வருகி றார்கள்!

சில நாள்களுக்கு முன், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்,

‘‘இது ஹிந்து நாடுதான்,

இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்ன கூறினாலும் சரி’’ என்று பகிரங்கமாய்ப் பேசியுள்ளார்!

ஒரே மதம்– ஹிந்து மதம்

ஒரே மொழி – சமஸ்கிருதம்

ஒரே கலாச்சாரம் – சமஸ்கிருத கலாச்சாரம்

என்று பிரகடனப்படுத்தி, மாநிலங்களின் உரிமைகளான (இருந்தவை மிகக் குறைவு என்றாலும்கூட)

சமூகநீதி,

கல்வி,

மருத்துவம்,

நிதி பகிர்வு போன்ற பலவற்றிலும் வஞ்சனை செய்து, வல்லாண்மை புரிந்து வருகின்றனர்!

சமூகநீதியை உயர்ஜாதியினருக்கு
மடை மாற்றம் செய்த சூழ்ச்சி!

‘ஏழைகளுக்கு உதவுகிறோம்’ கல்வியில் என்று போக்குக் காட்டி, உயர்ஜாதி பார்ப்பனர், அவர்களுக்கு ஒப்ப வேறு சில விரலிட்டுக் காட்டத் தக்கோர்  நலனுக்கென, பொருளாதாரத் துறையில் நலிந்தோர் (EWS) என தனி ஒதுக்கீடு! பொதுத் துறைகளில் இருந்த நாட்டின் தேசிய உடைமைகள், வருவாய் பெருமை – ஊற்றுக்களான தொழில் துறை, உற்பத்தித் துறை முதலியவற்றை தனிப்பெரும் கார்ப்பரேட் முதலாளிகளிடம் நீண்ட கால குத்தகை அல்லது அவர்களுக்கே விற்று விடுவது போன்ற சமூகநீதி, பொருளாதார நீதிகளுக்கு எதிர் நடவடிக்கைகளைத் தொடர்ந்து நடத்தி, அரசுத் துறைகளை அடியோடு காலி செய்து, உள்நாட்டுப் பெரு முதலாளிகள் அதிலும் குஜராத்தவர்களான அதானி, அம்பானி மற்றும் டாடா, பிர்லா போன்றவர்களுக்கு விற்கவும் தயங்கவில்லை.

சிறு உதாரணம், உலகின் சிறு சிறு குட்டி நாடுகள்கூட தமது அரசு சார்பில் தனி விமான சேவைகளை நடத்தும் நிலையில், பெரிய நாடு, ‘விஸ்வகுரு’ விலாசமிட்டுக் கொண்டுள்ள இந்தியாவில், பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். ஆட்சியில் இந்தியன் ஏர்லைன்ஸ், இந்திய ‘வெளிநாட்டு விமான சர்வீஸ்’ எல்லாவற்றையும் காவு கொடுத்து, மிகக் குறைந்த ‘அடிமாட்டு விலைக்கு’ பல சலுகைகளுடன் தனியாருக்குத் தந்து விட்டனர்.

அரசுத் துறைகள் தனியார்த் துறைக்கு ஒட்டுமொத்தமாகத் தாரை வார்ப்பு!

துறைமுகங்கள், விமான நிலையங்களையே கூட தனியார் அதானி போன்றவர்களுக்கு நீண்ட கால குத்தகைக்குத், தனித்த பெரு முதலாளிகளிடம் ஒப்படைத்து, அரசு உடைமை, நாட்டுடைமைத் துறைகளை வீட்டுடைமையாக்கி மகிழ்கின்றனர்.

அதுமட்டுமா?

இட ஒதுக்கீடு தனியார் துறையில் இல்லாததால், அதையும் வீழ்த்திவிட்ட பெரு மகிழ்ச்சியும் கொள்கின்றனர்.

இப்போது ஒரு திடுக்கிடும் செய்தி!

இந்திய நாட்டின் 17 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்ட மைப்புகளை தனியார் வசம் மூன்று ஆண்டுகளுக்கு ஒப்படைக்கும் திட்டத்தைச் செயல்படுத்திட நிதிய மைச்சகம் ஆயத்தமாகிவிட்டது.

மோடி அரசின் அடுத்த அபாயகரமான திட்டங்கள்!

ஏற்கெனவே இதை  2025–2026 பட்ஜெட்டில் நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் சூசகமாக அறிவித்தார்.

அதை இப்போது 852 திட்டங்களாகப் பிரித்து, ஒரு பெரும் பட்டியலாக PPP – Project Pipeline என்று ஒன்றிய பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். மோடி அரசு வெளியிட்டுள்ளது!

இது, விவசாயிகள் நிலங்களையும், தொழிலாளர்களின் உழைப்பையும், பொதுமக்கள் தரும் வரிப் பணத்தையும் பெருமுதலாளிகளான திமிங்கலங்களின் கருவூலத்திற்கு மடை மாற்றம் செய்யும் மக்கள் நல விரோதத் திட்டமாகும்!

இதில், 51 சதவிகிதத்திற்கும் அதிக மான பங்கு சாலைப் போக்கு வரத்துத் துறைக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாம்!

8.77 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 108 சாலைத் திட்டங்கள், (இதன்மூலம்) தனியார் வசமாகின்றன.

அரசுக்குப் பெரும் சாலைகள்மூலம் வந்த இதன் வருவாய்க் கட்டணம் என்ற – ஊற்றே தனிப்பட்ட பெருமுதலாளிகளின்  (அவர்கள் பெரிதும் அதானி, அம்பானி, டாடா, பிர்லா வகையறாக்கள்தானே!) வசமான கொடுமை!

சாலை லாபம் பெரும் முதலாளிகளுக்கு – நட்டம் அரசு தலையில்!

‘‘நான் ஒருபடி தவிடு கொண்டு வருகிறேன். நீ ஒரு படி அரிசி கொண்டு வா! நாம் இருவரும் ஊதி ஊதி தின்று பயனடைவோம்’’ என்று சொன்ன கதை நினைவுக்கு வருகிறதல்லவா?

முதலீடு – லாபம் தாண்டி, பல லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பலி பீடத்தில் நிறுத்தும் கொடுவாளான திட்டமும்கூட!

அரசியலமைப்புச் சட்டத்தைக்
கரையான் அரித்து வருகிறது!

இதுபற்றி வரும் நாடாளுமன்ற ‘பட்ஜெட்’ தொடரில் நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரிவான – விளக்கமான கண்டனத்தைத் தெரிவித்து, விளக்கிப் பேசி, தடுத்து நிறுத்த முன்வரவேண்டும்.

நாளுக்கு நாள் அரசியலமைப்புச் சட்டத்தைக் கரையான் அரித்து வரு வதற்கு இவையே தக்க சாட்சியங்கள் ஆகும்!

 

 

சென்னை   தலைவர்,

17.1.2026  திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *