மு.வி. சோமசுந்தரம்
| ந |
மது நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடந்த 11 ஆம் தேதி குஜராத்தில் உள்ள சோம்நாத் கோயிலுக்குச் சென்றார். அக்கோயில் முதல் முதலாக 1000 ஆண்டுகளுக்கு முன் தாக்கப்பட்டதின் நிறைவாக சிறப்பு விழா எடுக்கப்படுமாம். இந்த கோயில் நாட்டின் வீரத்தின் அடையாளச் சின்னம் அதனைப் போற்றும் வகையில், ஓராண்டு காலம், பல கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்படுமாம்.
இந்த கோயில் இந்தியாவின் பெருமைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது என்று விளக்கும் கட்டுரை ஒன்றைகூட பிரதமர் எழுதியுள்ளார். அத்துடன் இக்கோயில், 1026இல் கஜினிமுகமது என்பவரால் தாக்கப்பட்டு சூறையாடப்பட்டது என்று ஒரு வரலாற்று குறிப்பையும், அத்துடன் கோயில் இடிபாடுகளை சரிசெய்து 1951இல் புதுப்பிக்கப்பட்டு விழா நடத்தப்பட்டுள்ளது. (நன்றி: ‘தி இந்து’ 6.1.2026 ஆங்கில இதழ்).
நரேந்திர மோடி அவர்கள், தனி மனிதர் என்று செல்லவில்லை. நாட்டின் பிரதமராகச் செல்கிறார். அரசு முறையில் அறிவிப்பு செய்கிறார். நாட்டின் அரசியல் சட்டத்துக்குக் கட்டுப்பட்டவர். மதச் சார்பின்மையை மதிக்க வேண்டியவர். குறிப்பிட்ட ஒரு மதத்திற்காக பிரதமரே அரசை இணைத்துப் பேசும் ஊதுகுழலாக இருக்கலாமா என்ற கேள்வி எழுகிறது.
ஜவகர்லால் நேரு பிரதமராக இருந்தபோது, சோம்நாத் கோயில் புதுப்பிக்கப்பட்டு, 1951இல் விழா ஏற்பாடு நடந்தது. அதில் அன்றையக் குடியரசுத் தலைவர் டாக்டர் இராஜேந்திர பிரசாத் பங்கு கொள்வதாக இருந்தது. நேரு அவர்கள், குடியரசுத் தலைவர், நாட்டின் மதச்சார்பின்மை கோட்பாட்டை மதிக்கும் வகையில் கோயில் விழாவில் கலந்துகொள்வது முறையல்ல என்று எடுத்துக் கூறினார்.நேரு அவர்களின், விருப்பு, வெறுப்புகள் மாறுபட்டிருந்தது. அணைக் கட்டுகள், அணுமின் உற்பத்தி நிலையம், கல்விக் கூடங்கள், தொழிற்சாலைகள் தான் நேரு விரும்பிய கோயில்கள்.
கஜினி முகமது தாக்குதல் நடத்திய வரலாற்றுக் குறிப்பைப் பிரதமர் மோடி சுட்டிக்காட்டியுள்ளார். அந்த பின்னணியில், கூடுதல் வரலாற்றுச் செய்திகள் கூறப்படுகிறது.
வரலாற்றாசிரிய அறிஞர், ரிச்சர்ட் ஏட்டன், 1025–1026இல், கஜினி முகமது, மேற்காசியாவிலிருந்தும், மன்னர் முதலாம் இராஜேந்திர சோழன் தென்னிந்தியாவிலிருந்தும் படையெடுப்பிலும், ஒற்றுமையும் இருந்தது, வேற்றுமையும் இருந்தது என்கிறார்.
இருவரும் 1600 கி.மீ. கடந்து வந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். அரசு வலிமைக்கும், பெயர், புகழுக்கும் இருவரும் ஆசைப்பட்டனர். ஆனால், மதத்தையும், அத்துடன் தொடர்புடைய உருவ வழிபாடு, புனித நூல்களை எதிர் கொள்வதில் வேறுபட்டிருந்தனர்.
இராஜேந்திர சோழன், தந்தையை மிஞ்சி புகழ் சேர்க்க வடக்கை நோக்கிப் படையெடுத்து கங்கையை ஒரு பெண் உருவகப்படுத்தி கைப்பற்றி வந்தான். ஆனால் கஜினிமுகமது மதக் காழ்ப்பு உணர்வில், மத வேறுபாடின்றி, ஜெயின், இந்து, வழிபாட்டுத்தலங்களையும், முஸ்லிம்கள் அதிகம் வாழும், இன்று இரான் என்று அழைக்கப்படும் ‘ரே’ (Ray) போன்ற நகரங்களையும் சூறையாடினான். மத அடையாளங்களை அழித்தான். ரே நகரில் இருந்த இஸ்லாமியப் புனித நூல்களை எரித்தான் – சோம்நாத் கோயிலின் சிவன் சிலையைத் தகர்த்தான். செல்வத்தைக் கொள்ளையடிப்பதையே நோக்கமாகக் கொண்டு வட இந்தியப் பகுதிகளை தாக்கியது. அரசுக் கருவூலங்களின் பணம், கோயில்களில் உள்ள பணம், தங்க நகைகள் அவனுக்குத் தேவைப்பட்டது. (சபரிமலை அய்யப்பன் கோயில் தங்கம், காணாமல் போன செய்தியும் உண்டு)
‘ரே’, நகரத்தை 1029இல் சூறையாடியதில் கஜினிக்குக் கிடைத்தது ஒரு மிலியன் ‘டினாரு’க்கும் குறைவே. ஆனால் சோம்நாத் கோயிலில் கிடைத்தது 20 மில்லியன் ‘டினார்’.சேர்த்த செல்வத்தை ஒப்பந்த படை வீரர்களுக்கு ஊதியமாக வழங்கினான். அரசை வலுபடுத்தவும் பயன்படுத்தினான்.
இத்தகையத் தாக்குதல்பற்றிய, ஆதாரக் குறிப்புகள், இந்து பார்ப்பன நூல்களில் இல்லை. ெஜயினமதக் கவிஞர், தனபாலாவின் குறிப்பொன்றில் ராஜஸ்தான், கஜினியால் சேதமடையவில்லை என்பது காணப்படுகிறது. ஆனால், கஜினியுடன் வந்த கவிஞர்கள், நிகழ்ச்சிக் குறிப்பெழுதுபவர் (Chronicler)களுடைய அராபிய மொழியில் உள்ள குறிப்புகள் ஆதாரமாக உள்ளன. கஜினி முகமதுவின் அரசவையில், பெர்ஷியன், அராபிக் மொழி அறிஞர்கள்இடம் பெற்றிருந்தனர். அதில் ஒருவர் பெர்டவாசி (Ferdowsi) அவரின் ஷானாமா (மன்னர்களின் புத்தகம்) நூல் முக்கியத்துவம் பெற்றது. அந்த நூலில் சோம்நாத் கோயில் சூறைபற்றி விவரிக்கப்பட்டுள்ளது. பெர்ஷியன், அராபிக் மொழி அறிஞர்களின் ஆவணங்கள் தவிர்த்து வேறு ஆவணங்கள் இல்லை. இவையே 1025–1026 சோம்நாத்கோயில் தாக்குதல் பற்றியத் தரவுகள் ஃபருக்கி (Farrukhi) என்ற கஜினிமுகமதுவின் அரசவை பாரசீக மொழிக் கவிஞர், கஜினியைப் புகழ்ந்து எழுதிய கவிதையில், கஜினி, சோம்நாத் கோயிலை தீயிட்டு, சாம்பலாக்கி, வட இந்தியாவிலிருந்த யானைகளை ஒழித்து, வட இந்தியா என்ற பகுதியே இல்லாமல் செய்தான் என்று உயர்வு நவிர்ச்சியில் எழுதியுள்ளார். (புலவர்களுக்கு உள்ள உரிமையின் உச்சம்)
பின்குறிப்பு: நேரு ஒரு அரசியல் தலைவர் மட்டுமல்ல. தனக்கென ஒரு கருத்தியலைப் பின்புலமாகக் கொண்டவர். சோம்நாத் கோயில் திறப்பு விழாவையொட்டி, 1951இல் நேரு, பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலிகானுக்கு அவரை சாந்தப் படுத்தும் வகையில், ‘தற்போது சோம்நாத்தில் நடப்பது தவறு. அதுபற்றி பரப்பப்படும் செய்திகள் தீய நோக்கம் கொண்டவை’ என்று கடிதம் எழுதியதாக பிஜேபி கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதற்கு காங்கிரஸ் கட்சி விளக்கமளிக்கும் வகையில் பிஜேபி யினர் முழு உண்மையைக் கூறவில்லை. பொய்யை முன் வைத்துள்ளனர். நேரு, அரசுப் பணத்தை மதக்காரியங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது என்று கூறியவர். அதுவே காந்தியாரின் கருத்தாகவும், சர்தார்பட்டேல் அளித்த உறுதிமொழியாகவும் உள்ளது. அத்துடன், நாட்டின் அரசியல் சட்டத்தின் தத்துவமும் அதுதான் என்று விளக்கமளித்துள்ளது.
