சென்னை, ஜன.13- வட சென்னை பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கட்டண மில்லா பேருந்துப் பயண அட்டை பெற வரும் 31ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறுவதாக ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று முன்தின்ம் (11.1.2026) வெளியிட்ட அறிவிப்பு:
மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டணமில்லா பேருந்து பயணச் சலுகை திட்டத்தின் மூலம் நடப்பாண்டில் தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி கட்டணமில்லா பேருந்துப் பயண அட்டை விண்ணப்பித்து பெற ஏதுவாக, சிறப்பு முகாம் மூலம் இணைய வழியில் கட்டணமில்லா பேருந்துப் பயண அட்டை விண்ணப்பித்து பெற்றிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வடசென்னை மாவட்டத்தில் வசிக்கும், பார்வை திறன் குறை பாடுடைய மாற்றுத் திறனாளிகள், அனைத்து வகை கல்வி பயிலும் மாற்றுத் திறனாளிகள், பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள், சிகிச்சை மற்றும் பயிற்சி எடுக்கும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் பயன்பெறும் வகையில் கட்டணமில்லா பேருந்து பயண அட்டை விண்ணப்பித்து சுலபமாகப் பெற்றிட, வரும் 31ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் (அரசு விடுமுறை தினங்கள் தவிர்த்து) சிறப்பு முகாம், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள (பின்புறம் இ-சேவை மய்யம் அருகில்) வடசென்னை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
கட்டணமில்லா பேருந்துப் பயண அட்டை தேவைப்படும் மாற்றுத் திறனாளிகள், மாற்றுத் திறனாளி தேசிய அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை, மருத்துவ சான்று. ஆதார் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஒளிப்படம் ஆகிய ஆவணங்களுடன், பணிப்புரியும் மாற்றுத்திறனாளிகள் எனில் பணிச்சான்றுடனும், கல்வி பயிலும் மாற்றுத்திறனாளிகள் எனில் கல்வி சான்றுடனும், சிகிச்சை மற்றும் பயிற்சி எடுக்கும் மாற்றுத்திறனாளிகள் எனில் தசைப் பயிற்சி மற்றும் மருத்துவ சிகிச்சை பெறும் மருத்துவமனையின் மருத்துவ சான்றுடனும் சிறப்பு முகாமில் கலந்துக்கொண்டு இணைய வழியில் கட்டணமில்லா பேருந்துப் பயண அட்டை விண்ணப்பித்து பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
