சென்னை, ஜன. 13- சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பூவிருந்தவல்லி – வடபழனி இடையேயான தடத்தில் மெட்ரோ ரயில் சேவை வரும் பிப்ரவரி மாதம் முதல் தொடங்க வாய்ப்புள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சோதனை ஓட்டம்
சென்னையில் இரண்டாம் கட்டமாக 116 கி.மீ. தொலைவிற்கு 3 வழித்தடங்களில் பணிகள் நடக்கின்றன. இதில் 4ஆவது வழித்தடமான கலங்கரை விளக்கம் – பூவிருந்தவல்லி தடத்தில், பூவிருந்தவல்லி முதல் போரூர் வரையிலான 10 கி.மீ. தூரத்திற்கு ஏற்கனவே சோதனைகள் முடிந்துவிட்டன.
இதனைத் தொடர்ந்து, போரூர் – வடபழனி இடையேயான மேம்பட்ட மின்பாதை மற்றும் சிக்னல் தொழில்நுட்பப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் (11.1.2026) ஒரு மார்க்கத்தில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. தண்டவாள செயல் திறன் மற்றும் சிக்னலிங் அமைப்புகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த சோதனை ஓட்டம் எவ்வித தடையுமின்றி வெற்றிகரமாக அமைந்தது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குநர் சித்திக் கூறுகையில்:
“பூவிருந்தவல்லி முதல் வடபழனி வரை இணைப்பு வழங்கப்பட்டால் அது பொதுமக்களுக்கு பெரும் பயனாக இருக்கும். பூவிருந்தவல்லி மற்றும் போரூரில் இருந்து வரும் பயணிகள் வடபழனியில் இறங்கி, அங்கிருந்து ஏற்கெனவே உள்ள வழித்தடங்கள் மூலம் சென்ட்ரல் அல்லது விம்கோ நகர் பகுதிகளுக்கு எளிதாகப் பயணம் செய்யலாம்.” ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விரைவில் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்குவார்.
சேவை தொடக்கம்
ரயில்வே வாரியத்தின் அனுமதி கிடைத்தவுடன், பிப்ரவரி மாதம் முதல் பூவிருந்தவல்லி – வடபழனி தடத்தில் மெட்ரோ ரயில் முழுமையாக இயங்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 4 முதல் 5 மாதங்களில் இந்த தடத்தில் உள்ள ரயில் நிலையங்கள் படிப்படியாக தயார் செய்யப்பட்டு, முழுமையான வழக்கமான சேவை தொடங்கும்.
ஜூன் மாதம்
பவர் ஹவுஸ் வரையிலான பணிகள் வரும் ஜூன் மாதத்திற்குள் நிறைவடையும்.
மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டங்கள் கைவிடப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திய அதிகாரிகள், நிலம் கையகப்படுத்தும் பணிகள் முதற்கட்டமாகத் தொடங்கி யுள்ளதாகத் தெரிவித்தனர். மதுரையில் நில திட்ட அட்டவணை தயாராகிவிட்ட நிலையில், கோவையில் இன்னும் ஒரு மாதத்தில் அட்டவணை தயாராகிவிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
