தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ அரசின் பண்பாட்டுப் பன்னாட்டுத் தொடர்புப் புரட்சி!

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

உறவுப் பாலத்தைப் பலப்படுத்தி, உச்சிமோந்து பாராட்டுவதுடன் வாழ்வுரிமைக்கும் வழிவகுப்பதே அயலகத் தமிழர் துறை!

தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ அரசின் பண்பாட்டுப் பன்னாட்டுத் தொடர்புப் புரட்சி என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

‘திராவிட மாடல்’ ஆட்சி ஏற்கெனவே அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சிகளின் நீட்சியாகவும், திராவிடத்தின் மீட்சியாகவும் அமைந்து, பல்வேறு வரலாற்றுச் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது! புதுமையிலும் மவுனப்புரட்சி இது!

பாராட்டத்தக்க ஏற்பாடு!

உள்நாட்டு மக்களின் உரிமைகள் பாதுகாப்பு மட்டுமல்ல, வெளிநாடுகளில் உள்ள, புலம் பெயர்ந்து சென்று வாழும் நம் மக்களுடையவும், ‘தொப்புள் கொடி உறவு’ என்ற தொன்மை  தொடர்பாம் திராவிட நாகரிக மக்களின் வாழ்வுரிமைக்குக் குரல் கொடுக்கவும் தவறாது, தகைமையோடு வாதாடி, போராடி வருவதோடு, அயலகத் திராவிட மக்களோடு அன்பு உறவுப் பாலத்தையும், பலத்தையும் புதுப்பித்து, புத்துணர்ச்சியுடன் அந்த விழுதுகளும், வேர்களை மறக்காமல் இருக்கச் செய்ய நல்லதோர் பாராட்டத்தக்க ஏற்பாடுதான் தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத் துறையும், நல வாரியமும்!

அரசியல் ரீதியாக அவர்கள் வெளிநாட்டவராக குடியுரிமை, வாழ்வுரிமை பெற்று, அந்த நாட்டு வளர்ச்சிக்குத் தத்தம் உழைப்பினை ஈந்து, வளர்ச்சிக்கு வழி செய்து வாகை சூடி வருகின்றனர்.

ஆனால், பிறந்த இனம், மொழி, பண்பாடு என்று அழியா நிலைத்த உறவுகளை, ஊக்கமூட்ட ‘அயலகத் தமிழர் நாள்’ என அயலகத் தமிழர்களுக்கு சாதனை விருதுகளும் ஆண்டுதோறும் வழங்கி, பெருமைப்படுத்தி வருகிறது தமிழ்நாடு அரசு!

பல ஆண்டுகளுக்கு முன்பு, நமது முன்னோர்கள் அயல்நாடுகளுக்கு வெறும் தோட்டத் தொழி லாளிகளாகவும், ரப்பர் தோட்டக் கூலிகளாகவும் சென்றே தம் வாழ்வுக்கு வழிதேடினர்.

அதற்குப் பிறகு, சிலர் நமது ‘திராவிட நாகரிகத்தின்’ ஒரு சிறப்பம்சமாக ‘திரைகடலோடியும் திரவியம் தேடு’ என்பதற்குச் செயல் வடிவம் தந்து, அவர்களையும் வாணிபம் நடத்திடச் செய்து, இருதரப்பும் வளமோடு வாழும் நிலையை ஏற்படுத்தினர்!

கடந்த ஒரு நூறாண்டு வரலாற்றைப்
புரட்டிப் போட்டனர்

பிறகு, திராவிட இயக்கம், தந்தை பெரியார், நமது தொடர் பாரம்பரிய பண்பாட்டுக் காவலர்களின் கடும் உழைப்பு, சுயமரியாதையை மீட்டெடுத்தல், கல்விக் கண்ணைப் பெரிதும் பெற்றதன் நல் விளைவாக, ‘‘குலக்கல்வி’’ போன்ற வர்ண தர்மக் கல்வித் திணிப்பினை எதிர்த்து ஒழித்ததன் காரணமாக, கல்வி அறிவுத்திறன் மேலோங்கி, அமெரிக்கா, அய்ரோப்பா மற்றும் பல நாடுகளில் அறிவுக் கொடையாளர்களாக, அறிவுத் திருப்பணி செய்து, வாழ்வுரிமை பெற்றவர்களாகப் புலம் பெயர்ந்து சென்றோர் கடந்த ஒரு நூறாண்டு வரலாற்றைப் புரட்டிப் போட்டனர்.

அவர்களது நலனை ‘‘தாய்க்கோழி’’ – என்றும் – எங்கும் – தமது குஞ்சுகளை – பருந்துகளிடமிருந்து பாதுகாக்கும் கடமையைச் செய்வதில் கண்ணுங்கருத்துமாய் இருப்பதுபோல, இந்த அயலகத் தமிழர் நலன் காக்கும், போற்றும் அமைப்பாக நமது ஒப்பற்ற ‘திராவிட மாடல்’ ஆட்சியின் ஒப்பிலா மாணிக்க முதலமைச்சரின் ஆளுமையின்கீழ் விழுமிய பலன்கள்மூலம், வேர் – விழுது பலம் நாளும் இறுகி, பண்பாட்டுப் பாதுகாப்பு என்ற விளைச்சல் பரவி, இன்று ஒளி வீசுகிறது!

தமிழ்நாடு உச்சிமோந்து, மெச்சிக்கொண்டது

1929 இல் மலேயாவிற்குச் சென்ற போதும், அதன் பிறகு மலேசியா, சிங்கப்பூர், இலங்கை சென்றபோதும், அங்கே தோட்டப்புறங்களுக்குத் தந்தை பெரியார் சென்று, அவர்களுக்குத் தக்க அறிவுரைகளைக் கூறி, ‘சிக்கனம், பகுத்தறிவு, சமத்துவத்தை, தம் பிள்ளைகளுக்குக் கல்வி, குடி உரிமை’பற்றிப் பேசி, நினைவூட்டியதனால், அங்குத் தலைமுறைகள் மாறின; தக்க கல்வியாளர்களாகி, ஆளுமைத் திறனோடு ஜொலித்தனர்; இன்றும் ஒளிர்கின்றனர்.

இன்று புலம்பெயர்ந்து சென்ற நாட்டிலும் நலம்பெய்யும் அவர்களை அடையாளம் கண்டு, ‘சான்றோன் எனக் கேட்ட தாய்’ மகிழ்வதுபோல், தமிழ்நாடு உச்சிமோந்து, மெச்சிக்கொண்டது என்னே சிறப்பு! எவ்வளவு பெருமை!!

இத்தகைய பண்பாட்டுப் பாசறை ஆட்சிதான் ‘திராவிட மாடல்’ ஆட்சி!

இவ்வாட்சி தொடருவது உறுதி; அயலகத் தமிழர்களின் வாழ்வு மேலும் ஒளி வீசி, கழிபேருவகை கொள்ள புலம்பெயர்ந்த, அயலகத் தமிழர்களின் பற்றும், நன்றியும் மிகவும் வியக்கத்தக்கவை – வாழ்த்துகள் – அரசுக்கும், அயலகத் தமிழர்களுக்கும்!

கி.வீரமணி

  தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
13.1.2026

 

குறிப்பு:  அயலகத் தமிழர் விழா நிகழ்ச்சிப் படம் 5 ஆம் பக்கம் காண்க!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *