‘அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்ற சட்டத்தை நிறைவேற்றி
‘ஆயிரம் ஆண்டு இழிவை ஒழிக்க முதல் அடி எடுத்த நாள்’ இன்று (12.01.1971)
கோயில் கருவறைக்குள் குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே செல்லலாம் என்ற தடையை தந்தை பெரியார் மனித உரிமை மீறலாகவும், சமூக இழிவாகவும் கருதினார்.
1969 அக்டோபர் 10: தமிழர்களின் பிறவி இழிவை நீக்க, ‘சூத்திரர்’ என்று சொல்லப்படுபவர்கள் கருவறைக்குள் நுழையும் போராட்டத்தில் கலந்து கொள்ள விரும்புவோர் பெயர்களைப் பதிவு செய்யுமாறு பெரியார் வேண்டுகோள் விடுத்தார்.
1969 அக்டோபர் 12 (திருச்சி சொற்பொழிவு): “நம் சமுதாயத்திலிருக்கிற இழிவை ஒழிக்க வேண்டும் என்பதே இக்கிளர்ச்சியின் நோக்கம். இது மந்திரி பதவியோ, ஆட்சியையோ கைப்பற்றுவதற்கானதல்ல” என்று விளக்கினார்.
1969 அக்டோபர் 13: இந்து சட்டங்கள் மற்றும் சாத்திரங்கள் மூலம் தமிழர்களை ‘சூத்திரர்கள்’ என்றும் ‘கீழ் பிறவியாளர்கள்’ என்றும் இழிவுபடுத்துவதை உடைத்தெறிவது நமது வாழ்வாதாரக் கடமை என ‘விடுதலை’ இதழில் எழுதினார்.
1969 அக்டோபர் 15: இப்போராட்டம் எவ்வித வகுப்பு வெறுப்பும் அற்றது; மனிதன் இழிவிலிருந்து விடுபட்டு மானத்துடன் வாழ நடத்தப்படும் கிளர்ச்சி என்று தெளிவுபடுத்தினார்.
போராட்ட அறிவிப்பும் அரசின் முன்னெடுப்பும்
16.11.1969திருச்சியில் நடைபெற்ற திராவிடர் கழக மத்தியக் குழுக் கூட்டத்தில், 1970 ஜனவரி 26 அன்று கருவறை நுழைவுப் போராட்டம் நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது.
17.01.1970அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள், “அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர்களாக்கிட அரசு முயற்சி செய்யும், எனவே போராட்டத்தைக் கைவிட வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.
19.01.1970 முதலமைச்சரின் உறுதிமொழியை ஏற்று, தந்தை பெரியார் அவர்கள் போராட்டத்தை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
சட்ட வடிவம் பெறுதல்
பெரியாரின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு அரசு இதற்கான சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்தியது:
30.11.1970: அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் வகையிலான சட்ட முன்வடிவு தமிழ்நாடு சட்டமன்றத்தில் முன்மொழியப்பட்டது.
02.12.1970: இச்சட்ட முன்வடிவு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
12.01.1971: அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வழிவகை செய்யும் சட்டத் திருத்தம் முறைப்படி நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது.
