மும்பையில் சுயமரியாதை இயக்க மாநாடு! (3)

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

வி.சி.வில்வம்

திராவிடர் கழகம்

ஒவ்வோர் ஆண்டும் தந்தை பெரியார் பிறந்தநாள், நினைவு நாள், அன்னை மணியம்மையார் பிறந்தநாள், நினைவு நாள், ஆசிரியர் பிறந்தநாள் என ஒன்றையும் விடாமல் நடத்துபவர்கள் மும்பைத் தோழர்கள். பிறந்தநாள், நினைவு நாட்களில் சென்னையில் இருந்து சுவரொட்டி வாங்கி, தவறாமல் மும்பைச் சுவற்றில் ஒட்டும் தீரமிக்க களப்பணியாளர்கள் அவர்கள்! வசிப்பது மும்பை என்றாலும், தங்கள் எண்ணங்களை எல்லாம் பெரியார் திடலைச் சுற்றியே வைத்திருப்பார்கள். வெறுமனே அவர்களைப் பாராட்டுவது நம் நோக்கமல்ல; இருபது ஆண்டுகளுக்கு மேலாக தொடர்பில் இருக்கிறோம். அதனால் உண்மை அறிந்து, அதுவும் காலம் கடந்து இதைப் பதிவு செய்கிறோம்!

சாதனைப் படைக்கும் மும்பை தோழர்கள்!

ஜாதி ஒடுக்குமுறைக் காரணமாகவும், பொருளாதார நோக்கத்திற்காகவும் மும்பை சென்ற தமிழர்கள் பல்லாயிரம் பேர்! தானுண்டு; தம் வேலையுண்டு என இருப்பவர்களே 99 விழுக்காட்டினர்.‌ அதில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே நம்மிடம் உள்ளனர். ஆனால் 99 விழுக்காட்டினர் செய்யாத செயல்களை, சாதனைகளைக் கடந்த 80 ஆண்டுகளாக, தலைமுறைக் கடந்தும் செய்து வருபவர்கள் நமது தோழர்கள்!

அப்படியான தோழர்களிடம் ஜனவரி 3,4 ஆகிய இரண்டு தேதிகளில் மாநாடு என அறிவிக்கப்பட்டது. கழகத்தின் பொதுச் செயலாளர் அண்ணன் வீ.அன்புராஜ் அவர்கள் அறிவித்த அடுத்த நாளில், மும்பையில் கலந்துரையாடல் கூட்டம் நடத்திவிட்டார்கள். மாநாட்டை எந்த இடத்தில் நடத்துவது, மும்மொழி மாநாட்டிற்கு யாரை அழைப்பது, எவ்வளவு செலவு ஆகும், வரவுக்கு என்ன வழி என முதல் நாளிலேயே உற்சாகமாய் திட்டமிட்டு உழைக்கத் தொடங்கிவிட்டார்கள்.‌

மலர்ந்த முகங்கள் வாடவே இல்லை!

இதற்கிடையில் தமிழ்நாட்டில் இருந்து தோழர்களை அழைத்துச் செல்லலாம் என்கிற முடிவின்படி, அறிவிப்பு செய்யப்பட்ட ஒரே வாரத்தில் 50 பேர் முன்பதிவு செய்துவிட்டார்கள். இதில் சரிபாதி மகளிர் என்பது குறிப்பிடத்தக்கது. யார், யார் எந்தத் தொடர்வண்டியில் வருகிறார்கள், எந்தத் தேதியில் வருகிறார்கள், எந்த நேரத்தில் வருகிறார்கள், மும்பையில் எந்த இரயில் நிலையத்தில் இறங்குகிறார்கள், அவர்களை அழைத்துச் செல்லும் ஏற்பாடுகள் என ஒவ்வொன்றையும் பார்த்து, பார்த்து செய்தார்கள் மும்பைத் தோழர்கள்!

திராவிடர் கழகம்

இதில் கணிசமான மகளிர் குடும்ப உறுப்பினர்கள் எவருமின்றி, தனியாகப் பயணம் செய்வதாகக் கூறினர். சென்னையில் இருந்து 24 மணி நேரப் பயணம், 1350 கிலோமீட்டர், புதிய மாநிலம், தெரியாத மொழி என்பதெல்லாம் நம் தோழர்களிடம் ஓரமாக நினைவுகளில் இருந்தது. ஆனால் மும்பையில் இறங்கி, நமது தோழர்களைக் கண்டதும் புத்தெழுச்சிப் பெற்றுவிட்டார்கள். அப்போது “மலர்ந்த” முகம், தமிழ்நாட்டிற்குத் திரும்பும் வரையில் “வாடவே” இல்லை!

பெரியார் வழிவந்த ஆசிரியர்!

ஆசிரியர் அவர்கள் 3 ஆம் தேதி காலை 11 மணிக்கு விமானம் மூலம் மும்பை வந்தார்கள். ஆசிரியருக்கு உள்ள கூடுதல் சிறப்பு என்னவென்றால் இயக்கத் தோழர்கள், கட்சித் தலைவர்கள், உறுப்பினர்கள் இவர்களைக் கடந்து எண்ணற்ற நலன் விரும்பிகள் இருக்கிறார்கள். மும்பை விமான நிலையத்தில் கூட, கருப்புச் சட்டைக்கு இணையாகப் பல வண்ணச் சட்டைகளைக் காண முடிந்தது. கடவுள் இல்லை என்கிற இயக்கத்திற்கு மட்டும் இவர் தலைவர்கள் இல்லை என்பதை இந்தச் சமூகம் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறது.

விமான நிலையத்தில் பெரும் வரவேற்புகளும், ஒளிப்பட பதிவுகளும் முடிந்த நிலையில் ஆசிரியர் தங்குமிடத்திற்குப் பயணமாகிறார். தங்குமிடம் “தகதகவென” மின்னுகிறது. ஆசிரியரிடம் எந்த மகிழ்ச்சியும் தென்படவில்லை. மாறாக, “இவ்வளவு வாடகைக்கு ஏன் தங்குமிடம்? குறைவான தொகையில் ஏற்பாடு செய்திருக்கலாமே?”, என்று கேட்கிறார். தோழர்களிடம் பதில் ஏதுமில்லை. அமைதியாக நின்றனர். ஆனால் “பெரியார் வழிவந்த ஆசிரியர்” என்பதை ஒவ்வொரு இடத்திலும் அவரிடம் காண முடியும் என்பதற்கான சான்றாக இந்நிகழ்வு இங்கே குறிப்பிடப்படுகிறது.

கல்வித் தந்தை தேவதாசன் அரங்கம்!

அன்று மாலை சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தார்கள். இதற்கிடையில் எந்த இடத்தில் மாநாடு நடத்தலாம் எனத் தோழர்கள் ஆலோசித்த வேளையில், “எங்கள் பள்ளி வளாகத்தில் உள்ள அரங்கத்தில் நடத்துங்கள். ஆசிரியர் வருகிறார், திராவிடர் கழகத் தோழர்கள் வருகிறார்கள், எங்கள் தந்தை தேவதாசன் அவர்கள் திராவிட இயக்கத்தைச் சார்ந்தவர், அதன் வழியொட்டி நானும் இருக்கிறேன், எனவே சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டை எங்கள் வளாகத்தில் நடத்துவது எங்களுக்குக் கிடைத்த பெருமை”, எனப் பிரைட் உயர்நிலைப் பள்ளியின் நிர்வாகி ஜேம்ஸ் தேவதாசன் அவர்கள், மாநாடு நடத்த இடமும் கொடுத்து, தோழர்கள் தங்க உதவியும் செய்த உயர் பண்பாளர்.

திராவிடர் கழகம்

ஆசிரியரும், நூறு மகளிர் தோழர்களும்!

மாலை நிகழ்ச்சி 6.30 மணிக்குத் தொடங்கியது. ஆனால் 6 மணிக்கே அரங்கம் நிரம்பி வழிந்தது.‌ சிலருக்கு உட்கார இடம் இல்லை. காரணம் அதிக இருக்கைகள் போடவே இடமில்லை. தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் படங்களை முழுக்கவும் மகளிரே திறந்து வைத்தனர். சாவித்திரிபாய் புலே படத்தினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்தார்கள்.

மும்பை வாழ் பெரியார் பெருந்தொண்டர்கள் 6 பேருக்கு, பெரியார் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. திராவிடர் கழகத்தில் உள்ள 54 மகளிரை நேர்காணல் செய்து, அது “கொள்கை வீராங்கனைகள்” எனும் பெயரில் நூலாக வெளிவந்துள்ளது. மும்பை திராவிடர் கழகத்தின் பொருளாளர் பெரியார் பாலா, அந்நூலின் 100 பிரதிகளைப் பெரியார் திடலில் இருந்து தருவித்து, மும்பை வாழ் மகளிர் 100 பேருக்கு ஒரே நேரத்தில் வழங்க ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்வில் 100 மகளிரும், தமிழர் தலைவர் ஆசிரியருடன் ஒளிப்படம் எடுத்துக் கொண்டனர். அது வரலாற்று ஆவணமாக மும்பைக்கு கிடைத்திருக்கிறது. மும்பை தமிழர் பிரதிநிதிகளும், திராவிடர் கழக, திமுக பொறுப்பாளர்களும் வாழ்த்துரை வழங்க, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

பாசத்தோடு பரிமாறப்பட்ட பந்தி!

மும்மொழி மாநாட்டில், முதல் மொழியாகத் தமிழ்மொழி மாநாடு சனிக்கிழமை நிறைவு பெற்றது. இரவு சிற்றுண்டியைத் தோழர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

மும்பையில் சப்பாத்தி மற்றும் ரொட்டி (Bread) முதன்மையான உணவு. எனினும் தமிழ்நாட்டுத் தோழர்களுக்குப் பிடிக்காமல் போனால் என்ன செய்வது என்று தமிழ்நாட்டு உணவாகவே கேசரி, இட்லி, சப்பாத்தி, ஊத்தப்பம், தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, குருமா, சுவையான சாம்பார் என மனதை நிரப்பியதைப் போல, வயிற்றையும் நிறைத்துவிட்டார்கள்.

அடுத்த நாள் ஞாயிறன்று ஆங்கிலம் மற்றும் மராத்தி மொழிகளில் மாநாடு நடைபெற்றது. தெரியாத மாநிலம், புரியாத மொழி எனத் தமிழ்நாட்டுத் தோழர்கள் சொன்ன நிலையில், மராத்தியில் தோழர்கள் பேசப் பேச கரவொலியால் அரங்கத்தை நிரப்பிவிட்டார்கள். ஒரே நாளில் நம் தோழர்களுக்கு எப்படி மராத்தி புரிந்தது? எங்கே கற்றுக் கொண்டார்கள்? விடையை நாளை பார்ப்போம்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *