சுசீந்திரம், ஜன.4 கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் திருக் கோயில் தேரோட்ட நிகழ்வின் போது வன்முறையைத் தூண்டும் வகையில் முழக்கமிட்ட பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப் பினருக்கு, அனைத்து ஜாதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாண வர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அச்சங்கத் தின் தலைவர் வா.ரங்கநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் முன்வைத்துள்ள முக்கிய அம் சங்கள் பின்வருமாறு:
“ஆலயங்கள் என்பது ஆன்மிகத் திற்கான இடங்களே தவிர, மதவெறி அரசியலுக்கான களம் அல்ல” என்று குறிப்பிட்டுள்ள அவர், கருவறையில் தமிழும், தமிழர்களும் பூஜை செய்ய மறுக்கப்படுவது ஆன்மிகமா அல்லது அதிகார மேன்மை அரசியலா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். ‘அனைத்து ஜாதி யினரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்ற சமூக நீதித் திட்டத்தை முடக்க நினைப்பது பக்தி அல்ல, அது ஜாதி ஆதிக்கத்தின் அரசியல் என்று அவர் விமர்சித்துள்ளார்.
பிரிவினைவாத
அரசியலுக்குக் கண்டனம்
மத நல்லிணக்கம்: இந்திய அளவில் கிறிஸ்துவ கோயில்கள் மற்றும் மசூதிகள்கூட பிளவு அரசியலுக்கான கருவிகளாகப் பயன்படுத்தப்படுவது மதத்தின் பாதுகாப்பு அல்ல, அது வெறுப் பின் வியாபாரம்.
இரட்டை வேடம்: இன்று ‘இந்துக்கள்’ என்று முழக்கமிடும் அமைப்புகள், அர்ச்சகர் பயிற்சி முடித்து 20 ஆண்டுகளாகப் பணி வாய்ப்புக்காகக் காத்திருக்கும் இந்து மாணவர்களுக்காகக் குரல் கொடுக்காதது ஏன்?
சாவர்க்கர் முழக்கம்: சைவ, வைணவ, சாக்த ஒருமைப்பாடு நிலவும் ஆன்மிக கோயில்களில், காந்தியைச் சுட்ட சிந்தனை கொண்ட சாவர்க்கர் குறித்த முழக்கங்கள் எதற்கு? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதத்தை அரசியலுக்குள் இழுப்பதும், கோயில்களை வெறுப்பின் மேடையாக்குவதும் சமூக அமைதிக்கு எதிரான குற்றம் என்று ரங்கநாதன் சுட்டிக்காட்டியுள்ளார். இத்தகைய மதவெறிச் செயல்களில் ஈடுபடும் அமைப்புகளுக்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். “ஸநாதனத்துக்கு எதிராகப் போர் செய்வோம்! சமத்துவ சமூக நீதியை கருவறையில் நிலைநாட்டுவோம்!” என்று அந்த அறிக்கையில் அவர் சூளுரைத்துள்ளார்.
