இரண்டு நாள் மாநாடு மும்மொழிகளில் மாநாடு எனத் தமிழ், மராத்தி, ஆங்கிலம் என மும்மொழிகளில் சரித்திரம் படைக்க இருக்கிறது! மும்பைத் தோழர்கள் படைத்த பல முத்திரை களில், இது முத்தாய்ப்பாய் அமைய இருக்கிறது!
முதல் நாள் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு, மறுநாள் சமத்துவம், சமூகநீதி, மதச்சார்பின்மை எனப் பன்முகம் கொண்ட சமூக அமைப்புகளுடன், இந்திய அளவிலான மாநாடு எனப் பொலிவுடன் நடைபெற இருக்கிறது!
தந்தை பெரியாரின் கொள் கைகள் தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியாவிற்கும் எவ்வளவு தேவை என்பதை நாளும், பொழுதும் அறிந்து வருகிறோம். அய்யகோ! எங்களுக்கு ஒரு பெரியார் இல்லையே… திராவிட மாடல் அரசு கிடைக்கவில்லையே எனப் பிற மாநில இளைஞர்கள் கவலைப்படுவதையும், கண்ணீர் சிந்துவதையும் சமூக ஊடகங்களில் பார்த்து வருகிறோம்!
காலம் கடந்து இனவுணர்வும், மொழி உணர்வும், மாநில வளர்ச்சி யும் எவ்வளவு முக்கியம் என்பதை அவர்கள் அறிகிறார்கள். இந்தச் சூழலில் தான் திராவிடர் கழகம் முன்னெடுக்கும், நமது தலைவர் வழிகாட்டும் நிகழ்வாக இந்த மாநாடு பெரும் முக்கியத்துவம் பெறுகிறது!
மும்பை வாழ் தமிழர்கள் நூறைக் கடந்தும், மகாராட்டிர மக்கள் கணிசமாகவும் வருகை தர இருக்கிறார்கள்! குறிப்பாகத் தமிழ்நாட்டில் இருந்து சற்றொப்ப 60 தோழர்கள் வருகிறார்கள்!
ஒரு நிகழ்ச்சிக்காகத் தமிழ்நாட் டில் நாம் செய்யும் பணிகளை விட, மும்பையில் பல மடங்கு உழைக்க வேண்டும். காரணம் அது வேறொரு மாநிலம்! எனினும் கடந்த 80 ஆண்டுகளாய் சாதனைப் படைத்து, தலைமுறை தலைமுறையாய் நீடித்து வருபவர்கள் நம்முடைய மும்பை வாழ் பெரியாரியத் தோழர்கள்!
இதன் ஒவ்வொரு அசை விற்கும் இயங்கு திசையாய் இருப்பது, பின்னணியாய் இருப்பது நமது ஆசிரியர் அவர்களே என்பதைத் தனியாகச் சுட்டிக் காட்ட வேண்டியதில்லை!
இந்திய அளவிலான இடஒதுக் கீட்டுப் பயன்கள், அதற்கான சமூகநீதித் தலைவர்களின் ஒருங்கிணைப்பு எனப் பலவற்றி லும் அச்சாணியாய் இருந்தது ஆசிரியர் கி.வீரமணி அவர்களே! தமிழ்நாடு கடந்தும் பெரும் வரலாற்றைப் படைத்து வரும் தமிழர் தலைவருக்கு, மும்பை மாநாடு மற்றுமொரு மைல்கல்!
வரக் கூடியவர்கள் நேரில் ரசிக்கட்டும்; இயலாதவர்கள் இணைய வழியில் ருசிக்கட்டும்!
மும்பைத் தோழர்களுக்குத் தமிழ்நாட்டின் சார்பில் வாழ்த்து களைத் தெரிவித்துக் கொள்வோம்!
– வி.சி.வில்வம்
