‘‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்ட’’த்தை
ரத்து செய்யும் முடிவை உடனடியாகத் திரும்பப் பெறுக!
திட்டத்தைக் கைவிடுவது ஒரு ‘‘வரலாற்றுப் பிழையாக’’ இருக்கும் என்றும் எச்சரிக்கை!
சென்னை, டிச.24 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தை (MGNREGA) ரத்து செய்யும் முடிவை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு ஒன்றிய பா.ஜ.க. மோடி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளதுடன், இந்தத் திட்டத்தைக் கைவிடுவது ஒரு ‘‘வரலாற்றுப் பிழையாக’’ இருக்கும் என்றும் எச்சரித்து பன்னாட்டு பொருளாதார வல்லுநர்கள் மற்றும் சமூக அறிஞர்கள் அடங்கிய குழு கடிதம் எழுதியுள்ளது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்
இன்று (24.12.2025) சென்னை மேடவாக்கத்தில் 100 நாள் வேலை திட்டத்தில், காந்தியாரின் பெயரை நீக்கிய ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:
ஒன்றியத்தில் நடைபெறக்கூடிய
மோடி பா.ஜ.க. ஆட்சி யாருக்கானது?
2019 ஆம் ஆண்டு கோவிட் தொற்று காலகட்டத்தில், யார் அதிகமான வேலை வாய்ப்பை இழந்தார்கள் என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். அதேநேரத்தில், அம்பானிகளும், அதானிகளும் ஒரு நாள் ஒன்றுக்கு ஆயிரம் கோடி ரூபாயை அவர்கள் சம்பாதித்தார்கள் என்றால், ஒன்றியத்தில் நடைபெறக்கூடிய மோடி ஆட்சி யாருக்கானது? பாமர மக்களுக்கா, ஏழை எளிய மக்களுக்கா? என்றால், கிடையவே கிடையாது.
காந்தியாரின் அவர்களுடைய பெயரை எடுத்து விட்டார்கள். காந்தியார் அவர்கள் அனைவருக்கும் பொதுவானவர். அதுமட்டுமல்ல, நாட்டுத் தந்தை என்று அழைக்கப்பட்டவர் அவர்.
தன்னுடைய உயிரையே மதவெறிக்குப் பலியாக்கி, மதவெறி எவ்வளவு ஆபத்தானது என்பதை மக்களுக்கு எடுத்துச் சொன்ன ஒரு நல்ல உதாரணமாக, இந்திய நாட்டினுடைய உயிர்த் தியாகியாக, வழிகாட்டியாக இருந்தவர். அப்படிப்பட்டவருடைய பெயரை அகற்றி யது மட்டும் மிகப்பெரிய வஞ்சனை அல்லவா நண்பர்களே!
ஏழைகளுக்கான ஆட்சியல்ல; முழுக்க முழுக்க கார்ப்பரேட்டுகளுக்கான ஆட்சி!
அதைவிட மிக முக்கியம் என்னவென்றால், ஏழை, எளியவர்களுக்கு, ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில் என்ன அனுதாபம் இருக்கிறது, ஆதரவு இருக்கிறது என்றால், இது ஏழைகளுக்கான ஆட்சியல்ல. முழுக்க முழுக்க கார்ப்பரேட்டுகளுக்கான ஆட்சி! அதானிகளுக்கான ஆட்சி! அம்பானிகளுக்கான ஆட்சி! முதலாளித்துவ ஆட்சி என்பதற்கு, இந்த ஓர் உதாரணமே போதும்!
அதுமட்டுமல்ல, இன்னும் சிறப்பாகச் சொல்லவேண்டு மானால், அவர்களுக்குக் காந்தியார்மேல் இருக்கின்ற வன்மம், அந்தக் கோபம், மதச்சார்பற்ற ஒரு தன்மையை அவர் வலியுறுத்தினார் என்பதினால்தான்.
தந்தை பெரியார், தன் கைப்பட
டைரியில் எழுதியுள்ளார்!
தந்தை பெரியார் அவர்கள், அவருடைய டைரியில் எழுதியிருக்கின்ற தகவல் உங்கள் அனைவருக்கும் தெரியவேண்டும்.
காந்தியாருக்கு ஏன் அந்தத் திட்டத்தினுடைய பெயரில் இடமில்லை என்று சொல்லுகிறபோது, காந்தியார்பற்றி வேறு எவரும் சொல்லாத ஒரு கருத்தைத் தந்தை பெரியார் அவர்கள், தன்னுடைய டைரியில் குறிப்பிட்டு இருக்கிறார்.
‘‘இந்தியா, சுதந்திரம் பெற்றது 15, ஆகஸ்ட் 1947 இல். ஆனால், காந்தியார் கொல்லப்பட்டது 30.1.1948 இல். அதாவது சுதந்திரம் பெற்ற 165 ஆம் நாளில்
அவர் கொல்லப்பட்டார். இந்தியாவை மதச்சார்பற்ற நாடு என்று காந்தி சொன்னது, 7.12.1947 இல்.
7.12.1947 இல், காந்தியார் அவர்கள், ‘‘இந்த நாடு மதச்சார்பற்ற நாடாக இருக்கவேண்டும். அரசியலில் மதத்தைக் கலக்கக் கூடாது’’ என்றார்.
ஆர்.எஸ்.எஸ். கோட்சேக்களை உருவாக்கி, கோட்சேக்களுக்குப் பயிற்சி கொடுத்தது என்பதைக் குறிப்பாகச் சொன்னார்.
இந்தியா சுதந்திரம் பெற்றவுடன், பார்ப்பனர்களின் நடத்தையைப் பார்த்து, காந்தியார் சுயமரியாதைக்கார ராகிவிட்டார். அவர் கொல்லப்படாவிட்டால், இந்தியா சுயமரியாதைக் கொள்கை உள்ள சமதர்ம நாடாக ஆகிவிடும் என்று பயந்தே அவர்கள் கொன்றார்கள்’’ என்று தன்னுடைய டைரியில், தன்னுடைய மனதில் பட்டதை, யாருக்காகவும் தயங்காது எழுதி வைத்திருக்கிறார் தந்தை பெரியார்.
இன்றைக்கும் காந்தியாரின் மேல் உள்ள வன்மத்தை வெளிப்படுத்த பா.ஜ.க.,
ஆர்.எஸ்.எஸ்., மோடி அரசு தயங்கவில்லை
அன்றைக்குக் காந்தியாரைக் கொல்வதற்கு,
ஆர்.எஸ்.எஸிடம் பயிற்சி பெற்ற கோட்சேவைப் பயன்படுத்திக் கொண்டனர் என்பது மட்டுமல்ல, இன்றைக்கும் அந்த வன்மத்தை வெளிப்படுத்த பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., மோடி அரசு தயங்கவில்லை, மறைக்க வில்லை. இதுதான் முதல் காரணம்.
இரண்டாவது காரணம் நண்பர்களே, வேலை வாய்ப்பு, ஏமாற்று வேலை.
எப்போதுமே ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, மறைமுகமான ஒரு திட்டத்தை வைத்திருப்பார்கள். ஆனால், வெளியில் வேறு பேசுவார்கள். இரண்டிற்கும் சம்பந்தம் இருக்காது.
அந்த வகையில், நூறு நாள் வேலைத் திட்டத்தை, 125 நாள்களாக நீட்டித்து இருக்கிறோம் என்று அவர்கள் சொல்கிறார்கள் என்றால், அதிலுள்ள உள்நோக்கத்தை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
அது எவ்வளவு மோசமான உள்நோக்கம் என்பதை, இங்கே இருக்கின்ற கூட்டணிக் கட்சிக்காரர்களுக்கு மட்டும் நாங்கள் சொல்லவில்லை. இங்கே இருக்கின்ற உங்களுக்காக மட்டும் நாங்கள் சொல்லவில்லை.
மகாத்மா காந்தி திட்டத்தைக் கைவிடுவது
ஒரு வரலாற்றுப் பிழையாக இருக்கும்!
19.12.2025 அன்று வெளிவந்துள்ள ஒரு தகவல்.
‘‘Dismantling Mahatma Gandhi Scheme: will be the historic error’’
‘‘அந்தத் திட்டத்தின் பெயரை மாற்றியிருப்பது மிகப்பெரிய வரலாற்றுப் பிழை’’ என்று யார் சொல்லுவது? இங்கே இருக்கின்ற கட்சிக்காரர்களோ அல்லது திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினோ அல்ல; ராகுல் காந்தியோ, சோனியா காந்தி அம்மையாரோ சொல்லவில்லை. மாறாக யார் சொல்லுகிறார்கள் என்றால், பன்னாட்டு பொருளாதார வல்லுநர்கள் மற்றும் சமூக அறிஞர்கள் சொல்கிறார்கள்.
பன்னாட்டு பொருளாதார
வல்லுநர்களின் கடிதம்!
Open Letter என்று ஓர் அறிக்கையை எழுதி யிருக்கிறார்கள். அதில் மிகத் தெளிவாகச் சொல்லி யிருக்கிறார்கள்.
A group of leading international economists and social scientists have called upon the government to reverse the imminent repeal of the Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA), warning that dismantling the scheme will be a “historic error”. என்று சொல்லியிருக்கிறார்கள்
‘‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தை (MGNREGA) ரத்து செய்யும் முடிவை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு ஒன்றிய பா.ஜ.க. மோடி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளதுடன், இந்தத் திட்டத்தைக் கைவிடுவது ஒரு ‘‘வரலாற்றுப் பிழையாக’’ இருக்கும்’’ என்றும் எச்சரித்து வெளிநாடுகளில் இருக்கக்கூடிய பொருளாதார நிபுணர்கள், நோபல் பரிசு வாங்கிய பொருளாதார நிபுணர்கள் கடிதம் எழுதியிருக்கிறார்கள் மோடி பா.ஜ.க. அரசுக்கு.
.ஆகவே, இது வரலாற்றுப் பிழை!
வீடுதோறும், திண்ணை தோறும் எடுத்துச் சொல்லவேண்டும்
இந்தத் திட்டம் முழுக்க முழுக்க எப்படிப்பட்ட சிறந்த திட்டம் என்று, உலக நிபுணர்கள் சொல்கி றார்கள். இந்தியாவில் இருப்பவர்களோ, நம் நாட்டில் இருப்பவர்களோ சொல்லவில்லை. இந்தச் செய்தியை வீடுதோறும், திண்ணை தோறும் எடுத்துச் சொல்லவேண்டும்.
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கண்டன உரை யாற்றினார்.
