-
கோட்சே ஒரு முறை தான் காந்தியைக் கொலை செய்தான்!
-
ஒன்றிய பிஜேபி அரசோ நாள்தோறும் அவரை கொலை செய்கிறது!!
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் – இதற்கு எதிரானது ஆர்.எஸ்.எஸ்.
அதனால்தான் ‘திராவிட மாடல்’ அரசை வீழ்த்தத் துடிக்கிறது…
ஆத்தூர், ராசிபுரம் பகுதிகளில் நடைபெற்ற சூறாவளி சுற்றுப்பயணத்தில் கழகத் தலைவர் கலந்து கொண்டு எழுச்சி உரையாற்றினார்!
ஆத்தூர். டிச. 23- ’கல்வியில் சிறந்தது தமிழ்நாடு’ என்ற பெருமையை சாதித்து காட்டியது திராவிட மாடல் அரசு என்று சுட்டிக் காட்டி ஆத்தூரிலும், 100 ஆண்டுகளுக்கு முன்னால் நாற்காலி இருந்தது. அந்த நாற்காலியில் அமரும் துணிச்சல் பெண்களுக்கு இருந்ததா? என்று கேள்வி கேட்டு ராசிபுரத்திலும், கழகத் தலைவர் சுட்டிக்காட்டி எழுச்சி உரையாற்றினார்.
- கோட்சே ஒரு முறை தான் காந்தியைக் கொலை செய்தான்!
- ஒன்றிய பிஜேபி அரசோ நாள்தோறும் அவரை கொலை செய்கிறது!!
- சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் – இதற்கு எதிரானது ஆர்.எஸ்.எஸ்.
- அதனால்தான் ‘திராவிட மாடல்’ அரசை வீழ்த்தத் துடிக்கிறது…
- ஆத்தூர், ராசிபுரம் பகுதிகளில் நடைபெற்ற சூறாவளி சுற்றுப்பயணத்தில் கழகத் தலைவர் கலந்து கொண்டு எழுச்சி உரையாற்றினார்!
ஆத்தூர் கழக மாவட்டம் சார்பில் “இதுதான் ஆர்எஸ்எஸ் – பாஜக ஆட்சி; இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி’ எனும் தலைப்பிலான பரப்புரை தொடர் பயணத்தில், “பெரியார் உலகம் நிதி அளிப்பு விழா”வையும் இணைத்து, இரு பெரும் நிகழ்ச்சிகளாக, 17.12. 2025 அன்று புதன் மாலை 5 மணியளவில், ஆத்தூர் மணிக்கூண்டு அருகில் (பேருந்து நிலையம் எதிரில்) மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 104 வயது கண்ட பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி ஆத்தூர் வேலாயுதம் தங்கவேல் அவர்களின் நினைவாக மேடை அமைக்கப்பட்டு இருந்தது. ஆத்தூர் – சேலம் சாலையிலும், பக்கவாட்டுச் சாலையான காமராசனார் சாலையிலும் கழகக் கொடிகள் சாலையின் இரு மருங்கிலும் கட்டப்பட்டு எழிலுற பறந்தும், சுவரொட்டிகளும், பதாகைகளும் நிகழ்ச்சிக்கு கட்டியம் கூறிக் கொண்டிருந்தன. குறித்த நேரத்தில் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. மாலை 5 மணி அளவிலேயே மக்கள் மிகவும் ஆர்வத்துடன் வந்து நாற்காலிகளில் அமர தொடங்கி விட்டனர். கழகத் தலைவர் குறித்த நேரத்தில் நிகழ்விடத்திற்கு வந்தார். எழுச்சிகரமான வரவேற்பு மாவட்டத்தின் சார்பாக அவருக்கு அளிக்கப்பட்டது. அதன் பிறகு நாற்காலிகள் அனைத்தும் நிரம்பி, மக்கள் நின்று கொண்டு பார்க்கும் சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.
நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் அ.சுரேஷ் தலைமையேற்று உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் சேகர் வரவேற்புரை வழங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் ஊ.ஜெயராமன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். மாவட்ட காப்பாளர்கள் பழனி புள்ளையண்ணன், இரா.விடுதலைச் சந்திரன், கி.ஜவகர், த.வானவில், பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச்செயலாளர் தமிழ் பிரபாகரன், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் முருகானந்தம், ஆத்தூர் நகரத் தலைவர் அண்ணாதுரை, பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் அறிவுச்செல்வன், பொதுக்குழு உறுப்பினர் அமிர்தம் சுகுமார், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் மாயக்கண்ணன், ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் கோபால் ராஜ், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் சடையன், தி.மு.க. தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் அருண், சி.பி.அய். மாவட்டக் குழு உறுப்பினர் சடையன், தி.மு.க. வாழப்பாடி ஒன்றியச் செயலாளர் மாதேஸ்வரன், பெத்தநாயக்கன்பாளையம் முன்னாள் துணைத் தலைவர் இராஜாமணி, சேலம் மாவட்ட தலைவர் வீரமணி ராஜு, மேட்டூர் மாவட்டத் தலைவர் கா.நா.பாலு ஆகியோர் முன்னிலை வகித்துச் சிறப்பித்தனர். தொடக்க உரையாக கழகச் சொற்பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் உரையாற்றினார்.
அதைத்தொடர்ந்து, ஆத்தூர் மாவட்டச் செயலாளர் சேகர் தனது தோட்டத்தில் விளைந்த செவ்வாழைக் குலையை, தூக்க முடியாமல் தூக்கி வந்து தனது இணையருடன் இணைந்து, கழகத் தலைவரிடம் நன்கொடையாக வழங்கினார். கழகத் தலைவர் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார். அதை ஏலம் விடுவதாக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் அறிவித்தார். தி.மு.க. தொழில்நுட்ப குழு மாவட்ட அமைப்பாளர் அருண் 5,000/- ரூபாய்க்கு ஏலம் எடுத்து, கழகத் தலைவரிடம் செவ்வாழை குலையைப் பெற்றுக் கொண்டார். அந்தத் தொகை பெரியார் உலகத்துக்கு சேர இருக்கிறது என்று அறிவிப்பு செய்யப்பட்டது. தொடர்ந்து ஆசிரியர் கூத்தன் எழுதிய நூலை கழகத் தலைவர் ஆசிரியர் வெளியிட மாதேஸ்வரன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து “பெரியார் உலகம்” நன்கொடை அளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வின் இறுதியில், மாவட்டக் கழகத்தின் சார்பாக மொத்தம் வழங்கப்பட்டதாக தொகை அறிவிக்கப்பட்டது. அது 10 லட்சத்துக்கும் சிறிது குறைவாக இருந்தது. அதைக்கேட்ட இந்திய தேசிய காங்கிரஸின் மாவட்ட தலைவர் ஓசுமணி, “அதை 10 லட்சமாக அறிவித்து விடுங்கள். பற்றாக்குறையை நான் வழங்குகிறேன்” என்று பலத்த கைதட்டல்களுக்கிடையே அறிவித்தார். அவர் ஏற்கனவே நன்கொடை வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இறுதியாக கழகத் தலைவர் ஆசிரியர் பேசினார்.
அவர் தமது உரையில், ஆத்தூர் தங்கவேல் – அங்கம்மாள் இணையர்களைப் பற்றி பெரியார் காலத்திலிருந்து இன்று வரையிலான நினைவுகளை அசை போட்டார். தொடர்ந்து உலக நாடுகளில் இருந்து எல்லாம் வந்து பார்த்து திகைக்கக் கூடிய அளவுக்கு, “பெரியார் உலகம்” அமைக்கப்பட்டு கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி விவரித்தார். பின்னர், ஆத்தூரில் அன்னாள் தோழர்களான செல்லமுத்து, வீரமுத்து, சிவகடாட்சம், சுந்தரம் ஆகியோரைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். அதைத்தொடர்ந்து, “நாங்கள் ஆத்தூருக்கு எப்போது வந்தாலும் எங்களுக்கு ‘சிவகடாட்சம்’ நிச்சயம் உண்டு” என்று நகைச்சுவையுடன் குறிப்பிட, எதிர்பாராத வெடிச் சிரிப்பு மேடையிலும், மக்களிடமும் எழுந்து அடங்கியது. மேலும் அவர், “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்பதை இன்றைக்கு எல்லோரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அதுதான் திராவிட இயக்கத்தின்; திராவிட மாடலின் சாதனை” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். அந்த சாதனைக்கு மனுதர்மம் தான் தடையாக இருந்தது என்பதையும், ராஜாஜியின் குலக்கல்வி உட்பட, அதை எப்படி எல்லாம் திராவிட இயக்கம் தகர்த்தெறிந்து வந்தது என்பதையும் வரலாற்று பார்வையில் பதிவு செய்தார். தமிழ்நாட்டின் மதச்சார்பின்மையின் சிறப்பை சுட்டிக் காட்டி, அதை வலியுறுத்தி வந்த, காந்தியை கோட்சே ஒரு முறை தான் கொலை செய்தான். இன்றைக்கு இருக்கும் ஒன்றிய அரசு காந்தியை நாள்தோறும் கொலை செய்து கொண்டிருக்கிறது என்று குற்றம் சாட்டி, காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தையே குலைத்து விட்டதை எடுத்துரைத்தார். அதை ஒட்டியே, “ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. அமைப்புகளுக்கு தமிழ்நாடு மட்டும்தான் தலைவலியாக இருக்கிறது. ஓட்டைப் போடுவதன் மூலம் ஜனநாயகத்தில் ஓட்டையைப் போட்டு விடலாம் என்று இப்போது முயற்சி செய்கிறார்கள். அதையும் முறியடித்து திராவிட மாடல் அரசை வெற்றி பெறச் செய்ய வேண்டியது அவசியம் இருக்கிறது. அது எங்களுக்காக அல்ல; உங்களுக்காக; உங்களது சந்ததிகளின் நல்வாழ்வுக்காக என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார். இறுதியில் மாவட்ட மாணவர் கழகச் செயலாளர் அஜித்குமார் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
நிகழ்ச்சியில் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில், ச.வினோத்குமார், கா.பெரியசாமி, பெ.முரளி, அருண், கூ.பிரகாஷ், முரளி, பெ.மு.நடராஜன், சே. முத்துலட்சுமி, திராவிடர் கழகத் தோழர்கள் நீதிமான், ந.விஜய் ஆனந்த், அ.குழந்தைவேல், க.நல்லசிவம், து.இளங்கோ, சத்தியமூர்த்தி வீரன், இரா.கார்முகிலன், கூ.செல்வம், பாலசுப்பிரமணியம் பழனியம்மாள் ராஜாமணி, சித்தார்த்தன் தி.மு.க. உள்ளிட்ட ஏராளமான தோழர்கள், அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த பொறுப்பாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சி முடியும் வரை இருந்து கருத்துகளை கேட்டுச் சென்றனர்.

ராசிபுரம்
கழகத் தலைவர் ஆத்தூர் தோழர்களிடம் விடை பெற்றுக்கொண்டு ராசிபுரம் நோக்கி சுற்றுப் பயணத்தை தொடர்ந்தார். சரியாக இரவு 8:20க்கு ராசிபுரம் வந்தடைந்தார். அப்போது தலைமைக் கழகத்தின் சொற்பொழிவாளர் தஞ்சை இரா. பெரியார் செல்வன் உரையாற்றிக் கொண்டிருந்தார். கழகத் தலைவருக்கு மாவட்டக் கழகத்தின் சார்பாக எழுச்சிகரமாக வரவேற்பு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி முறைப்படி தொடங்கப்பட்டது. மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் பெரியசாமி தலைமையில் மாவட்ட இளைஞரணித் தலைவர் ஆனந்தகுமார் கணேசன் அனைவரையும் வரவேற்று சிறப்பித்தார். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் அவர்கள் முன்னிலை ஏற்று உரையாற்றினார். அமைச்சரின் தந்தையார் டாக்டர் மாயவன், சி.பி.அய்.எம் மாவட்டச் செயலாளர் கந்தசாமி, தி.மு.க. நகர் மன்றத் தலைவர் கவிதா சங்கர், சி.பி.அய்.மாவட்டக் குழு உறுப்பினர் கார்த்திகேயன், சி.பி.அய். நகரச் செயலாளர் சண்முகம், காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் சித்திக், காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் சீனிவாசன், சுற்றுப்பயணத்தை ஒருங்கிணைக்கும் கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஊ.ஜெயராமன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
தொடர்ந்து, பெரியார் உலகம் நிதியளிப்பு விழா நடைபெற்றது. அப்போது அமைச்சர் மதிவேந்தன் அவர்கள், “குறுகிய காலத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததால், எண்ணிய அளவுக்கு நிதி தர இயலவில்லை. விரைவில் ஒரு பெரிய தொகையை திரட்டி அளிக்கவிருக்கிறோம்” என்று அறிவித்தார். நிகழ்ச்சிக்கு பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் அவர்கள் வருகை தந்திருந்தார். அவருக்கு கழகத் தலைவர் ஆசிரியர் மரியாதை செய்தார். அமைச்சரின் தந்தையாருக்கும் கழகத் தலைவர் மரியாதை செய்தார். முன்னிலை வகித்த பெருமக்களும் கழகத் தலைவருக்கு மரியாதை செய்து மகிழ்ந்தனர். இறுதியாக இரவு 8:45க்கு கழகத் தலைவர் உரையாற்றினார்.
அவர் தமது உரையில், நூறாண்டு கால திராவிடர் இயக்கத்தின் சாதனைகளைப் பற்றி ஒற்றைக் கருத்தில் விளக்க முனைந்து ஒரு முக்கியமான வரலாற்றுச் சம்பவத்தை குறிப்பிட்டார். தான் மாணவப் பருவத்தில் இருந்தபோது சேலம் மாவட்டத்தில் முதன் முதலில் சுற்றுப்பயணத்திற்கு 1946 இல் வந்ததாகவும், போளுக்குறிச்சி ஜி.பி.சோமசுந்தரம் போன்றவர்கள் தங்களை வரவேற்றுச் சிறப்பித்ததாகவும் கூறி விட்டு, 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தான் ஆஸ்திரேலியாவில், “பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம்” ஒருங்கிணைந்த நிகழ்ச்சிக்கு, சென்றிருந்த போது அங்கு ஜி.பி.எஸ். இன் கற்றறிந்த பெயர்த்தி தன்னை வரவேற்றதாக கூறி, “இதுதான் திராவிட இயக்கம் செய்த சாதனை” என்று அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்தார். மக்கள் வியந்து போயினர். தொடர்ந்து அவர் அப்படி கற்ற கல்விக்கு எதிராகத்தான் மனுதர்மம் இருந்தது என்றும், அதை மீண்டும் புதுப்பிக்கத்தான் ஒன்றிய அரசு எண்ணுகிறது; முயற்சி செய்கிறது என்றும் கழகத் தலைவர் எச்சரித்தார். மேலும் அவர், தான் சொன்ன கருத்துக்கு வலிமை சேர்க்க, “எதைக் கொடுத்தாலும் சூத்திரனுக்கு கல்வியை கொடுக்கலாகாது” என்ற மனு தர்மத்தின் ஸ்லோகத்தை நினைவூட்டினார். தொடர்ந்து, “அப்படி கல்வி கற்காமல் இருந்த நிலைமையை தலைகீழாக மாற்றிய இயக்கம் தான் திராவிட இயக்கம்” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். பெற்ற உரிமைகளை பேணி பாதுகாக்க வேண்டிய கடமை இருக்கிறது என்பதை குறிப்பிட, “இந்திய அரசியல் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய மூன்றும் ஆர்.எஸ்.எஸ்.சுக்கு எதிரானது. இதை அவர்கள் அரசியல் சட்டம் உருவான போதே எதிர்த்தவர்கள். அவர்களின் முக்கிய பத்திரிகையான ஆர்கனைசர் வெளியிட்டிருக்கிறது” என்ற உண்மையையும் போட்டுடைத்தார். “அதனால்தான் அவர்கள் மீண்டும் மனு தர்மத்தை கொண்டுவர துடிக்கிறார்கள். அப்படி மனுதர்மம் வந்துவிட்டால், இன்றைக்கு ராசிபுரத்தில் நகர மன்றத் தலைவராக ஒரு பெண் இருக்க மாட்டார்” என்ற பாலியல் நீதி கலந்த சமூகநீதிக்கு ஆபத்து என்பதை, நகர்மன்றத் தலைவரை சுட்டிக்காட்டிப் பேசினார். மேலும் அவர், “அதனால் தான் திராவிடர் இயக்கக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துகின்ற, ’திராவிட மாடல் ஆட்சி’ மீது அவர்களுக்கு அவ்வளவு கோபம்” என்று ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., சங்பரிவார அமைப்புகளை அம்பலப்படுத்தினார். இறுதியாக, “எவ்வளவு ஒடுக்குமுறைகளையும், நெருக்கடி களையும் தமிழ்நாட்டுக்கு கொடுத்தாலும் அவர்களால் வெற்றி பெற முடியாது. காரணம், இது சுயமரியாதை மண்! இது சமூக நீதி மண்! ஆகவே, மீண்டும் ‘திராவிட மாடல் அரசு’ தான் வெற்றி பெறும்” என்று கூறி உரையை நிறைவு செய்தார். பின்னர் தோழர்களிடம் விடை பெற்றுக் கொண்டு சென்னைக்கு புறப்பட்டார்.
இறுதியாக, குமாரபாளையம் நகரத் தலைவர் சரவணன், நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். நாமக்கல் மாவட்டத் தலைவர் குமார், பொதுக்குழு உறுப்பினர் பொன்னுசாமி, பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் தமிழ்ச்செல்வன், திருச்செங்கோடு நகரத் தலைவர் மோகன், மாவட்ட துணைச் செயலாளர் மோகன் மற்றும் கழகத் தோழர்கள், அனைத்துக் கட்சியைச் சேர்ந்த பிரமுகர்கள், மக்கள் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
