ராகுல் காந்தி குற்றச்சாட்டு
புதுடில்லி, டிச.20 ஆண்டு காந்தி வேலை திட்டத்தை ஒரே நாளில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு அழித்துவிட்டது என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: விபி-ஜி ராம் ஜி மசோதா என்பது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் மறுசீரமைப்போ மாற்றோ அல்ல. அந்த சட்டம் கிராமங்களுக்கு எதிரானது. இருபது ஆண்டு காலமாக அமலில் இருந்த மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தை மோடி அரசு ஒரே நாளில் அழித்துவிட்டது.
இந்த திட்டம், உரிமைகள் அடிப் படையிலான, தேவை சார்ந்த உத்தர வாதத்தை அழித்து கட்டுப்படுத்தப்படும் பங்கீட்டு திட்டமாக மாற்றப்பட்டுள்ளது. அதன் வடிவமைப்பே மாநிலங்கள் மற்றும் கிராமங்களுக்கு எதிரானது.
மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டம் கிராமப்புற தொழிலாளர்களுக்கு பேரம் பேசும் சக்தியை வழங்கியது. கிராமப்புற உள்கட்டமைப்புகள் புத்துயிர் பெற்றன. அந்த செல்வாக்கைத்தான் மோடி அரசு உடைக்க விரும்புகிறது. ஒன்றிய அரசு உருவாக்கியுள்ள புதிய விபி-ஜி ராம் ஜி மசோதா வேலைக்கு வரம்பு விதித்து, அதை மறுப்பதற்கு மேலும் பல வழிகளை உருவாக்குவதன் மூலம் கிராமப்புற ஏழைகளிடம் இருந்த ஒரே ஒரு ஆயுதத்தையும் பறித்து பலவீனப்படுத்துகிறது. இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
