ஜெர்மனியில் சுற்றுப்பயணம் செய்யும் ராகுல் காந்தி, மாணவர்கள், கல்வியாளர்களுடன் கலந்துரையாடினார். ஜனநாயகம் என்பது வெறுமனே ஓர் ஆளும் அமைப்பு அல்ல என்றும், ஈடுபாடு மற்றும் பொறுப்பு கூறல் ஆகியவற்றின் தொடர்ச்சியான செயல்முறை என்றும் பேசினார். மற்றொரு கலந்துரையாடலில் அதிகாரம் ஒன்றே முக்கியமானது என்று ஆர்.எஸ்.எஸ். வெளிப்படையாகக் கூறுவதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரயில் பயணச்சீட்டு முன்பதிவுக்கு
ஆதார் இணைப்பு கட்டாயம்
ஜனவரி 12ஆம் தேதி முதல் அமல்
சென்னை, டிச. 20- அய்.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில் காலை 8 மணி முதல் 10 மணி வரை ரயில் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய ஆதார் இணைப்பு கட்டாயம் என்பது தற்போது அமலில் இருக்கிறது.
ரயில் பயணச்சீட்டு முன்பதிவுகளில் முறைகேடுகளை தடுக்க அய்.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில் காலை 8 மணி முதல் 10 மணி வரை ரயில் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய ஆதார் இணைப்பு கட்டாயம் என்பது தற்போது அமலில் இருக்கிறது. இந்த நடைமுறையில் புதிய மாற்றத்தை ரயில்வே வாரியம் கொண்டுவந்துள்ளது.
அதன்படி, டிசம்பர் 29ஆம் தேதி முதல் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், ஜனவரி 5ஆம் தேதிக்கு பின்னர் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் அய்.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் பயணச்சீட்டு முன்பதிவு செய்வதற்கு ஆதார் இணைப்பு கட்டாயம் ஆகிறது.
ஜனவரி 12ஆம் தேதிக்கு பிறகு அய்.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய வேண்டும் என்றால் ஆதார் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
உண்மையான பயனாளர்களுக்கு ரயில்வே பயணச்சீட்டு வழங்குவதை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசு ஊழியர்களுடன் வரும் 22ஆம் தேதி அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
சென்னை, டிச. 20- அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் பல்வேறு கட்டங்களாக போராட்டங்களை அறிவித்து நடத்தி வருகிறார்கள். பிரதான கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை காலம் தாழ்த்தாமல் மீண்டும் செயல்படுத்த வேண்டும், ஊதிய குறைபாடுகளை களைய வேண்டும், தொகுப்பூதிய ஊழியர்களை நிரந்தர மாக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தி வருகின்றன. ஜனவரி மாதத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர். வேலைநிறுத்த போராட்டத்தையும் பல்வேறு சங்கங்கள் அறிவித்து உள்ளன.
இந்த நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் வருகிற 22ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிப்பதாவது:-
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து வருகிற 22ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை, தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10ஆவது தளத்தில் உள்ள ஆலோசனைக் கூடத்தில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
