பெங்களூரு, டிச.19 கருநாடக மாநில சட்டப்பேரவையில் காங்கிரஸ் அரசின் முக்கிய வாக்குறுதியான ‘வெறுப்புப் பேச்சு தடுப்பு மசோதா’ நேற்று (18.12.2025) குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, சமூகத்தில் அமைதியைக் குலைக்கும் வகையில் பேசப்படும் வெறுப்புப் பேச்சுகளைத் தடுக்க தனிச் சட்டம் கொண்டு வரப்படும் என காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. அதன்படி, பெலகாவியில் நடை பெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரில், கடந்த வாரம் உள்துறை அமைச்சர் டாக்டர் பரமேஸ்வர் இந்த மசோதாவைத் தாக்கல் செய்தார். இந்தச் சட்டத்தின் சாதக, பாதகங்களை விளக்கிய அமைச்சர், சமூக நல்லிணக்கத்தைப் பேண அனைத்து உறுப்பினர்களும் இதற்கு ஆதரவளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இந்த மசோதா மீதான விவாதம் சட்டப்பேர வையில் நடைபெற்றது. அப்போது பா.ஜ.வி.னர் இந்த மசோதாவிற்கு ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்தனர்.
குரல் வாக்கெடுப்பில் வெற்றி
எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், மசோதா மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உள்துறை அமைச்சர் பேரவைத் தலைவரிடம் கோரிக்கை வைத்தார். இதைத்தொடர்ந்து, பேரவைத் தலைவர் யு.டி.காதர் வாக்கெடுப்பை நடத்தினார். இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம், வெறுப்புப் பேச்சுகளைக் கட்டுப்படுத்துவதில் கர்நாடக அரசு அடுத்தகட்டத்திற்குச் சென்றுள்ளது. இருப்பினும், இது அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் விவா தங்களைக் கிளப்பியுள்ளது. கருநாடகாவில் பள்ளிகள், மசூதிகள் மற்றும் பிற மத விழாக்களின் போது ஹிந்து அமைப்புகள் வேண்டுமென்றே ‘ஜெய் சிறீராம்’ உள்ள பல வெறுப்ப சொற்களைக் கூறி கையில் கத்தி திரிசூலத்துடன் சென்று பதட்டத்தில் ஆழ்த்தும் நிகழ்வு தொடர்கதையாகி உள்ளது இதனால் சில இடங்களில் கலவரமும் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து காங்கிரஸ் தேர்தலில் பரப்புரை வெறுப்பு பேச்சுக்களை தடுக்க சட்டம் கொண்டுவருவோம் என்று வாக்குறுதி கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும். அதன்படி இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.
