திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு இதைத்தான் கூறுகிறது! நூறு நாள் வேலைத் திட்டம் – பி.ஜே.பி. அரசின் புதிய முடிவால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் மிகப்பெரிய பாதிப்புகள், பாரீர்!

3 Min Read

சென்னை, டிச.19 தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்டம் என்று அழைக்கப்படும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிக்கும் திட்டத்தை ஒன்றிய அரசு விபிஜி ராம் ஜி என பெயர் மாற்றம் செய்து, அடுத்த நிதியாண்டு முதல் நடைமுறைப்படுத்த உள்ளது. அதோடு, இந்த சட்டத்தின் மூலம் இனி 100 நாட்களுக்கு பதில் 125 நாட்கள் வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்று ஒன்றிய அரசு உறுதி அளித்து இருக்கிறது.

ஆனால், இந்தத் திட்டத்தின் இதர அம்சங்கள், இந்த திட்டத்தையே முடக்கி போட்டு விடும் என்று எதிர்க்கட்சிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். உதாரணமாக முன்பு இந்தத் திட்டத்தில், இந்தத் திட்டத்திற்கான நிதி உதவி, அதாவது ஊழியர்களுக்கான ஊதியம் முழுவதும் ஒன்றிய அரசு வழங்கியது. அதே நேரத்தில் திட்டத்தின் கீழ் பொருட்களுக்கான செல வில் ஒன்றிய அரசு 75 சதவீதமும், மாநில அரசின் பங்கு 25 சதவீதமூம் இருந்தது.

ஆனால், புதிய திட்டத்தில் ஊழியர்கள் சம்பளம் மற்றும் பொருள்களுக்கான செலவில் ஒன்றிய அரசின் பங்கு 60 சதவீதமும், மாநில அரசின் பங்கு 40 சதவீதமும் இருக்கும். இது மாநிலங்க ளுக்கு பெரும் நிதி சுமை ஏற்படுத்தும். குறிப்பாக இந்த திட்டத்தால் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டிற்கு மிக அதிக பாதிப்பு ஏற்பட உள்ளது. ஏனென்றால் இந்தியாவிலேயே, இந்தத் திட்டத்தால் அதிகம் பலன் பெற்ற மாநில மாக தமிழ்நாடு தான் முன்னணியில் இருக்கிறது.

தமிழ்நாட்டிற்குக் கூடுதல் செலவு ரூ.4,600 கோடி!

தமிழ்நாட்டில் சராசரியாக ஆண்டுக்கு 30 கோடி மனித சக்தி நாட்கள் உரு வாக்கப்பட்டு ரூ.12 ஆயிரம் கோடி ஊதியமாக வழங்கப்படுகிறது. இந்தத் தொகை மற்ற மாநிலங்களை விட மிக அதிகம். ஆனால் அதே மதிப்பில் இந்தத் திட்டத்தை வரும் ஆண்டிலும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தினால், அதாவது குறைந்தபட்சம் ரூ.4 ஆயிரத்து 600 கோடி தமிழக அரசு ஒதுக்க வேண்டி வரும். ஒரே ஆண்டில் இவ்வளவு பெரிய தொகையை நிச்சயம் ஒரு மாநில அர சால் ஒதுக்க முடியாது. எனவே, இந்தத் திட்டத்தின் செலவைக் குறைக்க மாநில அரசு முற்படும். அப்படி செய்தால் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும்.

இது தவிர, இந்தப் புதிய திட்டத்தால் தமிழ்நாடு அரசுக்கு ஏற்படும் மற்ற பாதிப்பு கள் விவரம் வருமாறு:-

பழைய திட்டத்தில் தமிழ்நாடு  அரசு, ஒரு நிதியாண்டிற்கு எவ்வளவு திட்டங்களைச் செயல்படுத்த போகிறோம் என்று கூறி ஒன்றிய அரசுக்கு உத்தேச அறிக்கை கொடுப்பார்கள். பின்னர் திட்டங்களை கூடுதலாக செயல்படுத்தினாலும், அந்தத் தொகையையும் ஒன்றிய அரசு கொடுத்து விடும். ஆனால், இனி அது போல் நடக்காது. கூடுதலாக மேற்கொள்ளப்படும் திட்டத்திற்கான நிதியை 100 சதவீதம் மாநில அரசு மட்டுமே ஏற்கவேண்டும்.

இந்தத்  திட்டத்தின் கீழ் எந்தப்  பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதனை கிராம ஊராட்சிகளும், மாநில அரசும் முடிவு செய்தது. ஆனால்,  இனி ஒன்றிய அரசு அதனை முடிவு செய்து ஒப்புதல் வழங்கும்.

தமிழ்நாட்டிற்குக்
குறைவான நிதி!

முன்பு தமிழ்நாடு  அரசு எவ்வளவு ரூபாய் மதிப்பீட்டுக்கு திட்டம் வகுத்தாலும், அதனை ஒன்றிய அரசு ஏற்றுக்கொள்ளும். ஆனால், இனி நிதி ஒதுக்கீட்டினை ஒன்றிய அரசு தான் முடிவு செய்யும். அதாவது மக்கள் தொகை போன்ற அம்சங்களைக் கவனத்தில் கொண்டு தான் ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். எனவே,  குறைவான மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டிற்குக் குறைவான நிதி தான் ஒதுக்கப்படும்.

கிராமப்புறங்களில் இந்தத்  திட்டத்தின் கீழ் கட்டப்படும் பஞ்சாயத்து அலுவலகம், அங்கன்வாடி மய்யம், ரேஷன் கடை மற்றும் சிமெண்ட் ரோடு ஆகியவற்றுக்கும் 100 நாள் திட்டத்தின் வேலை உழைப்பு நாட்கள் பயன்படுத்தப்பட்டது. மேலும் இதற்கான பொருட்கள் செலவில் மத்திய அரசு 75 சதவீதம் வழங்கியது. ஆனால் இனி 60 சதவீதம் தான் வழங்கும். எனவே அதற்கும் தமிழ்நாடு  அரசுக்குக்  கூடுதல் நிதி சுமை ஏற்படும்.

கலைஞர் கனவு இல்லத்திற்கும் பாதிப்பு

மகாத்மா காந்தி வேலை திட்டத்தின் கீழ், மனித உழைப்பு நாட்கள் கலைஞர் வீடு கட்டும் திட்டத்திற்கும் ஒதுக்கப்படுகிறது. அதாவது கலைஞர் கனவு இல்ல திட்ட பயனாளிகள் வீடு கட்டும் போது 100 நாள் திட்டத்தின் கீழ் பயனாளிகளைப்  பணியில் அமர்த்தி கொள்ளலாம். அதற்காக இந்தத்  திட்டத்திற்கு மனித உழைப்பு வழங்கப்படுகிறது. ஆனால், இனி மாநில அரசின் திட்டங்களில், இந்த மனித உழைப்பு நாட்கள் வழங்கப்படாது. எனவே,  அந்த உழைப்பு நாட்களுக்கான நிதியை தமிழ்நாடு  அரசு இனி ஒதுக்க வேண்டி வரும்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *