அண்ணல் அம்பேத்கர் கடுமையாக உழைத்து அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கினார்!
ஆனால், 80 விழுக்காடு நீதித்துறை, உயர்ஜாதியினரிடம் இருக்கிறது!
பெரியார் மண்– சமூகநீதி மண்ணான தமிழ்நாட்டை அழிக்கவேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள்!
சென்னை சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
சென்னை, டிச.17 அண்ணல் அம்பேத்கர் கடுமையாக உழைத்து இந்த அரசியலமைப்புச் சட்டத்தை உரு வாக்கினார்! 80 விழுக்காடு நீதித்துறை, உயர்ஜாதி யினரிடம் இருக்கிறது! பெரியார் மண்ணான, சமூகநீதி மண்ணான தமிழ்நாட்டு மண்ணை அழிக்கவேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள்! மனுதர்மத்தைச் சட்டமாக்க வேண்டும் என்று துடிக்கிறார்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.
கடந்த 11.12.2025 அன்று சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் ‘‘மதக் கலவரங்களுக்கு உயர் நீதித் துறை ஆயுதம் ஆகலாமா?’’ என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்
அவரது சிறப்புரை வருமாறு:
24 மணிநேரத்திற்குள்ளாகவே
இவ்வளவு பேர் திரண்டிருக்கிறார்கள்!
24 மணிநேரம்கூட இல்லாத அளவிற்கு மிக அவசர அவசரமாக, முக்கியமான பரிகாரங்கள் தேடவேண்டும் என்பதற்காகக் கூட்டப்பட்டுள்ள கூட்டத்திற்கு உள்ள படியே, 24 மணிநேரத்திற்குள்ளாகவே இவ்வளவு பேர் திரண்டிருக்கிறார்கள். வழக்கமாக வருவதைவிட, ஊடக நண்பர்கள், தொலைக்காட்சி நண்பர்கள் அதிகமாகத் திரண்டிருக்கிறார்கள்.
இந்நிகழ்வு அத்தனையும் பதிவாகிக் கொண்டி ருக்கின்றது. இப்போது உள்ள மின்னணுவியல் புரட்சியினால், பல்வேறு நாடுகளில் இருக்கக் கூடிய நண்பர்கள், வீட்டிற்குள்ளே அமர்ந்தபடியே இந்தக் கூட்டத்தைக் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் மட்டுமல்ல, யார் யாரைப்பற்றி நாம் இங்கே பேசுகின்றோமோ, அவர்களும்கூட அமர்ந்து கேட்டுக்கொண்டிருக்கின்ற நல்வாய்ப்புகளும் நமக்குக் கிடைத்திருக்கலாம். அப்படிப்பட்ட இந்தக் கூட்டத்திற்கு, சிறப்பாக வந்து ஓர் அருமையான விளக்கத்தை, ஆதாரப்பூர்வமாக, ஒரு நீண்ட தீர்ப்பு எழுதுவதைவிட, ஓர் உரையைத் தந்திருக்கிறார். இந்தத் தீர்ப்பு வாங்கப்படக்கூடிய தீர்ப்பாக இருக்காது; வழங்கப்படுகின்ற தீர்ப்பாக இருக்கும் என்று சொல்லத்தகுந்த அளவிற்கு, எந்தவிதமான இடை யூறும் இல்லாமல், மன உள்நோக்கம் இல்லாமல், நமக்கெல்லாம் புரியக்கூடிய அளவிற்கு, மிகுந்த சட்ட நுணுக்கம், அனுபவம், நடைமுறை, உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் போன்றவற்றில் இருக்கக்கூடியவற்றை எல்லாம் அறிந்த நிலையில், சிறப்பாக எடுத்துச் சொன்னா மாண்பமை நீதியரசர் பெருமதிப்பிற்குரிய அய்யா ஜஸ்டிஸ் அரிபரந்தாமன் அவர்களே,
சிறப்பாக இங்கே வந்திருக்கிற பெருமக்களே, ஊடக வியலாளர்களே, நண்பர்களே உங்கள் எல்லோருக்கும் அன்பான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்களைப்பற்றி நாங்கள்
கவலைப்படாதவர்கள்!
நம் நீதியரசர் அவர்களுடைய பொதுநலன் உணர்வு என்பது அனைவரும் பாராட்டவேண்டிய மிகப்பெரிய போராட்ட உணர்வு ஆகும். ஏனென்றால், யாரும் இவ்வளவுத் தெளிவாக இந்த விஷயத்தைப் பேசமாட்டார்கள். வழக்கமாக பலிகடாக்கள் நாங்கள் இருக்கிறோம். எங்களைப்பற்றி நாங்கள் கவலைப்படாதவர்கள். அதற்குரிய விலையைக் கொடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். ஆகவே, இவ்விஷயத்தை நாங்கள் பேசுவது என்பது ஒன்றும் அதிசயமில்லை. கடிகாரம் சுற்றுவதுபோன்று. ஆனால், அய்யா நீதியரசர் போன்றவர்கள் இங்கே வந்து, இவ்வளவு தெளிவாக, மக்கள் நலனுக்காக இறுதிவரையில் பாடுபடக் கூடிய ஒருவராக இருக்கி றார் என்று சொன்னால், அதற்காக எவ்வளவு வேண்டு மானாலும் பாராட்டலாம்.
அதேபோன்று, அவருக்கோ, எங்களுக்கோ எந்த நீதிபதி மீதும் சுட்டி காட்டப்படுகிறவர் மீதோ தனிப்பட்ட முறையிலோ விருப்போ, வெறுப்போ கிடையாது. எந்த உள்நோக்கமும் கிடையாது.
80 விழுக்காடு நீதித்துறை,
உயர்ஜாதியினரிடம் இருக்கிறது!
அப்படிப்பட்ட இந்த இடத்தில், ஓர் அரிய தகவலை மட்டும் நம்முடைய திராவிடர் கழகத்தினுடைய துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள், காலையில் நாடாளுமன்றத்தில் நடந்த ஒரு செய்தியைச் சொன்னார். 80 விழுக்காடு நீதித்துறை, உயர்ஜாதியினரிடம் இருக்கிறது. அதில் மற்றவர்களுக்கு வாய்ப்பே இல்லை. சமூகநீதி எல்லா துறைகளிலும் இருக்க வேண்டும். அண்ணல் அம்பேத்கர் அவர்கள் கொடுத்திருக்கிற அரசியலமைப்புச் சட்டத்திலே அரசியல் நீதியை அளிக்க வேண்டும் என்று சொல்கிற நேரத்திலே, ஜஸ்டிஸ் என்று போட்டுவிட்டு, அதற்கு அடுத்திருக்கிற பகுதி என்ன? என்பதை தயவுசெய்து எண்ணிப் பார்க்க வேண்டும்.
அரசியலமைப்புச் சட்ட அடிக்கட்டுமானத்தை மாற்றவே முடியாது; மாற்றக் கூடாது!
இந்த அரசியலமைப்புச் சட்டம் யாரால் தயாரிக்கப்பட்டது? யாருக்காகத் தயா ரிக்கப்பட்டது? எப்படி அது செயல்படுகிறது? என்பது மிக மிக முக்கியமானது. இந்த அரசியலமைப்புச் சட்டத்தை தயாரித்து கொடுத்த புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள், வேறு எந்த இடத்திலும் இல்லாத அளவிற்கு, மிகத் தெளிவாக ஒரு நல்ல வாய்ப்பை உருவாக்கிக் காட்டி இருக்கிறார். இப்போது அதற்குத்தான் மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டிருக்கிறது என்பதை இங்கே சுட்டிக் காட்ட வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தில், ‘முகப்புரை’ (Preamble) என்று சொல்லக்கூடிய பகுதி இருக்கிறதே, அதுவே பெரிய விவாதத்துக்குரியதாயிற்று; வழக்காடு மன்றத்திலேகூட கூட சென்றது. அதனுடைய தத்துவத்தில் இது Basic Structure of the Constitution என்ற அரசியலமைப்புச் சட்டத்தினுடைய அடிக்கட்டுமானம் என்பது விவாதத்துக்கு, வழக்கு மன்றத்திற்கு உரியதா? என்றெல்லாம் வந்தபோது, அதற்கும் தீர்ப்பு இருக்கிறது; அடிக்கட்டுமானம் மிக முக்கியம். அதை மாற்றவே முடியாது; மாற்றக் கூடாது என்று சொன்னார்கள்.
அண்ணல் அம்பேத்கர் கடுமையாக உழைத்து இந்த அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கினார்!
புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் இதற்காக அரும்பாடுபட்டார். சாதாரணமான அளவிற்கு இல்லை. அரும்பாடு பட்டார். உங்களுக்கு தெரியும், அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய வரைவுக் குழுவில் ஆறு பேர் என்று சொன்னால், அதில் நான்கு பேர் பார்ப்பனர்கள்! இரண்டு பேர்தான் மற்ற வர்கள். அதில் ஒருவர் அம்பேத்கர்; இன்னொருவர் முகமது சாதுல்லா. அவர் அதிகமாக வருவதில்லை, உடல்நலத்தைக் காரணம் காட்டி! ஆனால், முழுக்க முழுக்க அம்பேத்கர் அவர்கள் எவ்வளவு நெருக்கடிகள் அவருக்கு உள்ளாந்தரத்தில் கொடுக்கப்பட்டாலும், அதையும் தாண்டி அவர், கடுமையாக உழைத்து இந்த அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கினார். முகப்பு ரையைத் தயாரித்தார். அது மிக மிக முக்கியமானதாகும்.
இப்போது ஜனநாயகம் இருக்க வேண்டுமா? குடியரசாக இருக்க வேண்டுமா? நமக்கான உரிமைகள் தொடர வேண்டுமா? என்றெல்லாம் சொன்னால், முதல் எடுத்த எடுப்பிலேயே அந்த உறுதி மொழியை உருவாக்கிக் கொண்டார். அதுதான் இந்தச் சிறப்பு. மற்றபடி அதில் பல குறைகள் இருக்கலாம், மாற்றங்கள் வேண்டும் என்று நினைக்கலாம். அவரே அதைச் சுட்டிக்காட்டி இருக்கிறார் என்பது வேறு செய்தி.
முகப்புரையில், அய்ந்து அம்சங்கள்!
அந்த முகப்புரை எப்படி தொடங்குகிறது?
‘‘We, the People of India’’ அதுதான் மிக முக்கியம், இந்தியாவினுடைய குடிமக்களாகிய நாம் என்று சொல்லிவிட்டு, We, the People of India, having solemnly resolved to constitute India into a Sovereign, Socialist, Secular, Democratic, Republic’’ என்று அய்ந்து அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
‘‘மக்களாகிய நாம், நமக்கு நாமே உருவாக்கிக் கொண்டு கொடுக்கின்ற இந்த அரசியலமைப்புச் சட்டத்தில்’’ முதலில் என்னவென்று சொன்னால், எப்படிப்பட்ட ஒன்றை அமைக்க வேண்டும் என்று சொன்னால், முதலில், ‘‘இறையாண்மை மிக்க’’, இரண்டாவது ‘‘சமதர்ம’’, மூன்றாவது ‘‘மதச்சார்பற்ற’’, நான்காவது ‘‘ஜனநாயக’’, அய்ந்தாவது ‘‘குடியரசு’’. இந்த அய்ந்து அம்சங்கள் என்பது எல்லாம் இணைந்தது. அப்படிக் கொடுத்துவிட்டு, அடுத்ததில் ஆரம்பிக்கும் போது மிக முக்கியமான ஒன்றைச் சுட்டிக்காட்டுகிறார்.
பெரியார் மண்ணான. சமூகநீதி மண்ணான தமிழ்நாட்டு மண்ணை அழிக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்!
இன்றைக்கு இதற்காகத்தான் போராட்டம். இந்த அரசியலமைப்புச் சட்டமே கூடாது. அதற்குப் பதிலாக ‘‘மனுதர்மம்’’ தான் இருக்க வேண்டும் என்று, இந்த அரசியலமைப்புச் சட்டம் செயலுக்கு வந்தபோதே எழுதியது ஆர்.எஸ்.எஸ். என்பதை மறந்து விடாதீர்கள். இந்த அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்க முடியாது. இன்றைக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் பெயரால், பதவிப் பிரமாணம் எடுக்கின்ற ஆட்சியாக இருந்தாலும், அது ஓபன் அஜெண்டா – ஆர்எஸ்எஸ்சுக்கு! ஆனால், அதற்கு உள்ளாந்தரத்தில், இதை எப்படி ஒழிப்பது? எப்படி புத்தகத்துக்குள்ளே ‘கரையான்’ நுழைந்து, அதனுடைய வேலையைச் செய்துவிட்டால், வெளிப்பார்வையில் புத்தகத்தின் அட்டை நன்றாக இருக்கும். ஆனால், உள்ளே திறந்து பார்த்தால், உள்ளே பக்கங்கள் இருக்காதோ, அதுபோன்று, முழுக்க முழுக்க இந்தக் கரையான்கள் இன்றைக்கு ஆட்சியை எப்படி, எப்படியோ பிடித்துக்கொண்டு, அதன் மூலமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். ஜஸ்டிஸ் என்று ஆரம்பிக்கிறார். ஜஸ்டிஸ் சோசியல், சமூகநீதி. இப்போது அதற்காகத்தான் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. அதனால்தானே இந்த மண், பெரியார் மண்ணாக, சமூகநீதி மண்ணாக இருக்கிறது. எப்படியாவது இதை அழிக்க வேண்டும் என்பதற்காகத்தானே இன்றைக்கு முயற்சிகள், போர்கள் நடந்து கொண்டிருக்கின்றன, களம் கண்டு கொண்டிருக்கிறார்கள். அதுதான் அரசியல் என்று வெளியில் காட்டப்பட்டாலும், உள்ளாந்தரத்தில் இருக்கிற தத்துவம் அதுதான்.
இந்திய உயர்நீதிமன்றங்களில் இருப்பதிலேயே அதிகமாக மகளிர் நீதிபதிகள் தமிழ்நாட்டில்தான்!
சோசியல், எகனாமிக், அன்ட் பொலிட்டிக்கல் ஜஸ்டிஸ் (Social, economic, and political justice) அவ்வவுளதான். அதாவது முதல் நீதி சமூகத்தில்; இரண்டாவதுதான் பொருளாதாரம்; மூன்றாவதுதான் அரசியல். இதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த அடிப்படையில் பார்க்கும்போது, உயர்நீதிமன்றங்கள், உச்சநீதி மன்றம் யார் கைகளில் இருக்கிறது? எத்தனை சதவீதம் அவர்கள் இருக்கிறார்கள்? சமூக நீதி இருக்கிறதா? இன்றைக்குத் தமிழ்நாட்டில் ஓரளவுக்குப் பெண் நீதிபதிகள் இருக்கிறார்கள். ‘‘இந்திய உயர்நீதிமன்றங்களில் இருப்பதிலேயே அதிகமாக மகளிர் நீதிபதிகள் தமிழ்நாட்டில்தான் இருக்கிறார்கள்’’ என்று தலைமை நீதிபதியாக இருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவரே, இங்கே வந்து சொல்லிட்டுப் போனார்!
பாலியல் நீதி, ‘‘சமூக நீதியோடு’’
இணைந்ததாக இருக்க வேண்டும்!
ஆனால், அதில் கூட சில தந்திரங்கள் இருக்கின்றன. ஏனென்றால் உயர்ஜாதிக்காரர்களாகப் பார்த்து நிய மித்துவிட்டு, ‘பாலியல் நீதி’ (Gender Justice) என்று கணக்கு காட்டுவது நடக்கிறது. பெண்களுக்குக் கொடுப்பதை வரவேற்கிறோம். ஆனால், நாம் கேட்பது என்னவென்றால், இன்னும் போராட வேண்டிய பிரச்சினை என்னவென்றால், ‘ஜெண்டர் ஜஸ்டிஸ்’ என்று சொல்லக்கூடிய பாலியல் நீதி, ‘‘சமூக நீதியோடு’’ (Social Justice) இணைந்ததாக இருக்க வேண்டும். Gender Justice Continued with Social Justice என்று இருக்கவேண்டும் என்று சொல்கிறோம்; இன்றைக்குக் குறைவாகப் பெண்கள் வந்தால் கூட பார்ப்பனர்கள், நீதிபதிகளாக வருகிறார்கள்.
‘‘பார்ப்பனர் நீதிபதியாக வந்தால்,
அது கடும்புலி வாழும் காடே ஆகும்!’’
தந்தை பெரியார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்தார். என்ன வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் என்று சொன்னால், ‘‘பார்ப்பனர் நீதிபதியாக வந்தால், அது கடும்புலி வாழும் காடே ஆகும்’’ என்று மிகக் கடுமையாகச் சொன்னார்; அவரைத் தண்டித்தனர். அதைப்பற்றி கவலை யில்லை என்று சொல்லி, அதனை ஏற்போம் என்று சொல்லுகிறார். ஏன், அவர் ‘‘தர்மப்படி’’ அவர்களுடைய மனுதர்மப்படிதான் காப்பாற்ற நினைப்பார்கள்.
பல நேரங்களில் முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள் ஒன்றை நகைச்சுவையாகச் சொல்லுவார். ஏனென்றால், இந்த முன்னுரைக்குப் பின்னால் வரக்கூடிய செய்திக்கு இது மிகவும் முக்கியம்.
நாங்கள் போராடுவோம்; அய்யா அவர்கள் பேசுவார். ஒரு நியமனம் என்று வரும்போதுகூட, ‘‘என்னங்க இத்தனை பேர் இருக்காங்க, மேலே இன்னும் நம்மாட்க ளைக் கூடுதலாகப் போடலாமே!’’ என்போம்.
ஆமாம், நம்மாளைப் போடுகிறோம். என்கிட்டயே வந்து கேட்கிறார்கள். முதலில் சொல்லும்போது சொல்கி றார், ‘‘அய்யா இந்த அரசினுடைய கொள்கையை புரிந்து கொள்ளவேண்டும். நான், நான்–பிராமின் அல்லவா? அதற்காகக் கொடுங்கள்’’ என்கிறார்.
சரி என்று கொடுத்தவுடன், பதவியில் அமர்ந்த பிறகு, முதலில் வேகமாகச் சொன்னார் அல்லவா, ‘‘நான் நான்–பிராமின்’’ என்று சொன்னாரே, அந்த வேகம் அடுத்து நடைமுறையில எப்படி இருக்கும் என்றால், கொஞ்ச நாளைக்குப் பிறகு, பதவியில் அமர்ந்தவுடன், ‘‘நான்’’ – கொஞ்ச நேரம் இடைவெளி விட்டுட்டு, ‘‘பிராமின்’’. ஒரு சின்ன கோடு (Hyphen), அவ்வளவுதான்’’ என்று சொல்லுவார். அப்படி இருந்தாலும், அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. எங்களுடைய வேலை சமூகநீதி. அதைச் செய்கிறேன்.
மனுதர்மத்தை பதவியில் செயல்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள்!
ஆனால், தந்தை பெரியாருடைய அந்தத் தொலைநோக்கு இருக்கிறது பாருங்கள்; உயர்நீதிமன்றம் சொன்னது – அவர்களை ஏன் நாங்கள் எதிர்க்கிறோம்? தனிப்பட்ட வெறுப்பு இல்லை. யார் மீதும் கோபம் கிடையாது. அமர்ந்த உடனே மனுதர்மத்தை பதவியில் செயல்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள் அவர்கள். அதுதான் அவர்களுடைய கடமை என்று நினைக்கிறார்கள்.
எங்கே இருந்தாலும், அமைச்சராக இருந்தாலும் சரி, அய்ஏஎஸ் அதிகாரியாக இருந்தாலும் சரி, அய்க்கோர்ட் நீதிபதியாக இருந்தாலும் அவர்களுடைய தர்மத்தை, அதாவது மனுதர்மத்தை, உயர்ஜாதித் தத்துவத்தை நிலைநாட்டவேண்டும் என்று நினைக்கிறார்கள். அதனால், அவர்கள் கிடைத்த வாய்ப்பை எப்படி பயன்படுத்துகிறார் என்றால், அரசியலமைப்புச் சட்டத்தின்மீது பதவிப் பிரமாணம் எடுத்தார்கள்; ஆனால், அதை நடைமுறைப்படுத்துவதில்லை. எப்படி ஆட்சியாளர்கள் அரசியலமைப்புச் சட்டத்தின்மீது பிரமாணம் எடுத்துக்கொண்டு, அவர்கள் வேஷம் காட்டி, வெளிவேஷம் காட்டி உள்ளாந்தரத்தில் இதற்கு எதிரான நிலையை நடத்துகிறார்களோ, அதே சூழ்நிலைதான்.
பொதுநலம் நோக்கத்துடன்
நடத்தப்படுகிற கூட்டம் இது!
இன்றைக்கு நடைபெறுகின்ற இந்தக் கூட்டத்திற்குத் தலைப்பு என்ன? ‘‘மதக் கலவரங்களுக்கு உயர் நீதித் துறை ஆயுதம் ஆகலாமா?’’ ஏன், இந்தத் தலைப்பு வரவேண்டிய அவசியம் என்ன?
உயர்நீதித் துறை ஆயுதம் ஆகும் நிலை பல இடங்களில் வந்து கொண்டிருக்கின்றது. தொடக்கத்தி லேயே அதைக் கெல்லி எறியவேண்டும் என்ற பொதுநலம் நோக்கம்தான் இந்தக் கூட்டத்தின் நோக்கம்.
இப்படி நீதித்துறையிலும் கோருவது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு செய்யக்கோரும் சலுகையல்ல; அவர்கள் எடுத்துக்கொண்டிருக்கின்ற உறுதிமொழியினுடைய அடிப்படை என்ன?
ஏன், இந்தத் தலைப்புத் தேவைப்படுகிறது?
பதவி ஏற்கும் போது நீதிபதிகளுக்கும், மற்றவர்க ளுக்கும், ஒவ்வொருவருக்கும் பதவிப் பிரமாண வாசகம் உண்டு.
Form of oath or affirmation to be made by the Judges of a High Court
இதில் இரண்டு வகை உண்டு.
(தொடரும்)
