புதுடில்லி, டிச.16- தமிழ்நாட்டில் ‘நவோதயா பள்ளி’களை தொடங்க அனுமதிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழ்நாடு அரசின் சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு நேற்று (15.12.2025) விசாரித்தது.
தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் ஆஜராகி, ‘‘ஜவஹர் நவோதயா பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை பின்பற்றப்படுகிறது. ஆனால், தமிழ்நாடு அரசு இருமொழிக் கொள்கையைச் சட்டமாக்கியுள்ளது என வாதிட்டார்.
அப்போது நீதிபதிகள், ‘‘ஜவஹர் நவோதயா பள்ளிகள் விவகாரத்தை மொழிப் பிரச் சினையாக மாற்றக் கூடாது. நாம் கூட்டாட்சி அமைப்பில் வாழ்கிறோம். குடியரசின் ஒரு பகுதியாக தமிழ்நாடு உள்ளது. ஓரடி முன்னேறினால், ஒன்றிய அரசும் ஓரடி முன்னால் வரும். ஜவஹர் நவோதயா பள்ளிகளைத் திணிப்பாகப் பார்க்காமல், மாநில மாணவர்களுக்கான வாய்ப்பாகப் பார்க்க வேண்டும். மாநில அரசின் மொழிக் கொள்கை இதுதான் என்று ஒன்றிய அரசிடம் கூறுங்கள், அது குறித்து ஆலோசனைகள் நடத்துங்கள்’’ என்று உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளிவைத்தனர்.
