புதுடில்லி, டிச.11- தேர்தல் சீர்திருத்தம் குறித்து மக்களவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல், ஒன்றிய அரசிடம் மூன்று கேள்விகளை எழுப்பினார். மேலும் நான்கு கோரிக்கைகளை வைத்தார்
மக்களவையில் தேர்தல் சீர்திருத்தம் குறித்த விவாதம் தொடங்கியது.
ஓட்டுத் திருட்டு
இந்த விவாதத்தில் ராகுல் பேசியதாவது: ஓட்டுத் திருட்டை விட மிகப்பெரிய தேச விரோத செயல் ஏதும் இல்லை. பிரேசிலைச் சேர்ந்த பெண் ஒருவர் பெயர், அரியானா வாக்காளர் பட்டியலில் இருபத்து இரண்டு இடங்களில் உள்ளது. மற்றொரு பெண்ணின் படம் இருநூறு இடங்களில் உள்ளது. இதன் மூலம் அரியானா தேர்தல் திருடப்பட்டது. இதனை திரும்பத் திரும்ப கூறினாலும், அதற்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்க மறுக்கிறது.
லட்சக்கணக்கான பொய் (டூப்ளிகேட்) வாக்காளர்கள் பெயர்கள் ஏன் உள்ளது என என்னிடம் தேர்தல் ஆணையம் சொல்லவில்லை. இந்தக் கேள்விகளுக்கு தேர்தல் ஆணையத்திடம் பதில் இல்லை. பீகாரில் எஸ்அய்ஆர் பணிகளுக்கு பிறகு ஒன்று. இரண்டு லட்சம் போலி வாக்காளர்கள் ஏன் இருந்தார்கள். நீங்கள் அமைப்புகளை கைப்பற்றியுள்ளீர்கள் என்பது தெளிவாகிறது. தேர்தல் ஆணையம் எவ்வாறு விசயங்களை முற்றிலும் விதிமுறைக்கு மாறாக செய்கிறது என்பதை நான் சுட்டிக்காட்டியுள்ளேன்.
தேர்தல் சீர்திருத்தங்கள் என்பது எளிது. ஆனால், அதனை செய்ய யாருக்கும் விருப்பம் இல்லை. அரசு அதனை செய்ய விரும்பவில்லை. அனைத்து அமைப்புகளையும் ஓட்டுக்கள் மூலம் ஆர்எஸ்எஸ் அமைப்பு கைப்பற்றியுள்ளது. முக்கிய பல்கலைகளில் துணைவேந்தர்களே, நியமிக்கப்படுவதை அனைவரும் பார்க்கிறோம். அவர்களின் கல்வித்தகுதியை பற்றி கவலைப்படவில்லை. எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது மட்டுமே நோக்கமாக இருக்கிறது.
சிபிஅய் மற்றும் அமலாக்கத்துறை அமைப்புகள் கைப்பற்றப்பட்டதுடன், தனது கொள்கைக்கு ஒத்துப்போகும் அதிகாரிகள் மட்டுமே அங்கு நியமிக்கப்படுகின்றனர். அடுத்ததாக, தேர்தல் ஆணையம் மூலம் தேர்தல்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. இதனை ஆதாரம் இல்லாமல் சொல்லவில்லை. உரிய ஆதாரத்துடன் சொல்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்
மூன்று கேள்விகள்
மேலும், அப்போது ராகுல் எழுப்பிய மூன்று கேள்விகள்: ஒன்று. தேர்தல் ஆணையர்கள் நியமனம் செய்வதற்கான தேர்வுக்குழுவில் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கியது ஏன்? அவரை நீக்குவதற்கு என்ன நோக்கம் இருக்கிறது. யார் தேர்தல் ஆணையராக இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதில் பிரதமர் மோடியும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தீவிரமாக இருப்பது ஏன்இந்தத் தேர்வுக்குழுவில் நான் உறுப்பினராக இருந்தும், ஆளும் தரப்பில் அதிகமானோர் உள்ளதால் எனது குரல் கேட்கப்படவில்லை.
இரண்டு. கடந்த இரண்டாயிரத்து இருபத்து மூன்று ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பதவியில் இருக்கும்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்காக எந்த தேர்தல் ஆணையரும் தண்டிக்கப்படக்கூடாது என்பதை உறுதி செய்வதற்காக ஒன்றிய அரசு சட்டத்தை மாற்றியது. தேர்தல் ஆணையருக்கு இந்தப் பரிசை பிரதமரும் , உள்துறை அமைச்சரும் வழங்கியது ஏன் தேர்தல் ஆணையருக்கு முன்பு இருந்த எந்த பிரதமரும் வழங்காத இந்த மகத்தான பரிசை மோடி வழங்கியது ஏன்?
மூன்று. ஓட்டுப்பதிவு மய்யங்களில் உள்ள சிசிடிவிக்கள் மற்றும் தகவல்கள் குறித்த சட்டங்கள் மாற்றப்பட்டது ஏன்? தேர்தல் முடிந்த நாற்பத்து அய்ந்து நாட்களில் சிசிடிவி காட்சிகளை அழிப்பதற்கு தேர்தல் ஆணையத்திற்கு அனுமதி வழங்கி சட்டம் இயற்றியது ஏன் அதற்கான காரணம் என்ன இதற்கு தகவல்கள் குறித்த பிரச்சினைகள் உள்ளதாக ஆளுங்கட்சி கூறியது. இது தகவல்கள் குறித்த கேள்வி அல்ல. அது தேர்தலைத் திருடியது தொடர்பான கேள்வி.
கோரிக்கைகள்
ஒன்று. தேர்தல் நடத்துவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு, இயந்திரத்தால் படிக்கக்கூடிய வாக்காளர் பட்டியல் வழங்கப்பட வேண்டும்.
இரண்டு. சிசிடிவி பதிவுகளை அழிக்கும் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும். இது கடினம் அல்ல. எளிதானது.
மூன்று. மின்னணு ஓட்டு இயந்திரத்தின் கட்டமைப்பு குறித்து விளக்க வேண்டும். மின்னணு ஓட்டு இயந்திரத்தை அணுக வேண்டும்.
அதற்குள் என்ன இருக்கிறது என்பதை எங்கள் நிபுணர்கள் ஆய்வு செய்யட்டும். இன்று வரை மின்னணு ஓட்டு இயந்திரம் அணுக வாய்ப்பு இல்லை.
நான்கு. விரும்பும் என்ன வேண்டு மானாலும் செய்யலாம் என தேர்தல் ஆணையருக்கு வழங்கப்பட்ட அனுமதியை மாற்ற வேண்டும். இவ்வாறு ராகுல்காந்தி கூறியுள்ளார்.
