புதுடில்லி, டிச.9 உங்கள் தீர்ப்புகளுக்கு முன்னால் நீதி ஒருபோதும் தலைவணங்காது என்று சு.வெங்கடேசன் எம்.பி., நாடாளு மன்றத்தில் உரையாற்றினார்.
வந்தே மாதரம் பாடலின் 150 ஆவது ஆண்டு குறித்த நாடாளுமன்ற விவாதத்தில் அவர் ஆற்றிய உரை வருமாறு:
அவைத் தலைவர் அவர்களே ,
பங்கிம் சந்திரருடைய வந்தே மாதரம் பாடலை நூறாண்டுகளுக்கும் மேலாக இந்த நாடு விவாதித்துக் கொண்டிருக்கிறது. அந்தப் பாடலை முதன்முதலில் மெட்டமைத்துப் பாடிய ரவீந்திரநாத் தாகூரே. அதற்கு இரண்டு தசாப்தத்திற்கு பின்பு எழுதிய கரே பைரே என்கிற நாவலில் அந்தப் பாடலைப் பற்றி விவாதித்திருக்கிறார். அரசியலமைப்புச் சட்டம் அந்தப் பாடலை மிக விரிவாக விவாதித்து, இரண்டு சரணங்களை மட்டும் எடுத்துக் கொண்டு, நான்கு சரணங்களை விடுவித்து ஒரு முடிவு செய்தது. இவ்வள விற்குப் பிறகு இந்த அவையில் இந்தப் பாடலினுடைய 150 ஆவது ஆண்டை விவாதிக்க வேண்டும் என்று ஆளுங்கட்சித் தரப்பு விரும்பியிருக்கிறது.
பிரதமர் அவர்கள் வந்தே மாதரம் என்ற இந்த முழக்கம் இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு ‘ஆன்மா’வாக அமைந்தது என்று குறிப்பிட்டார் , உண்மை தான். இந்த ஒரு முழக்கம் மட்டுமல்ல, வந்தே மாதரம் என்ற முழக்கத்திற்கு இம்மியளவும் குறைந்ததல்ல ‘ஜெய்ஹிந்த்’ என்ற முழக்கம். ஜெய்ஹிந்த் என்ற முழக்கத்திற்கு துளியளவும் சளைத்ததல்ல ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ என்ற முழக்கம்.
நீங்கள் எந்த முழக்கத்திற்குப் பின்னால் திரண்டீர்கள்?
ஒவ்வொரு முழக்கத்திற்குப் பின்னாலும் இலட்சக்கணக்கானவர்கள் திரண்டார்கள். தூக்குக் கயிற்றை முத்தமிட்டவர்கள்; துப்பாக்கிக் குண்டுக்கு நெஞ்சு காட்டியவர்கள்; பீரங்கியை வாயில் வைத்துச் சுட்டுத் தள்ளப்பட்டவர்கள்; குதிரையின் காலடிக் குளம்புகளால் எத்தி உதைக்கப்பட்டவர்கள்; ஜாலியன் வாலாபாக்கில் பொதுக்கூட்டம் கேட்டவர்கள்; சிட்டகாங்க் ஆயுதக் கிடங்கை கொள்ளையடித்தவர்கள்; தண்டிக்குப் போய் உப்புக் காய்ச்சியவர்கள்; தூத்துக்குடியிலே இருந்து கப்பலோட்டியவர்கள் என்று ஒவ்வொரு முழக்கத்திற்குப் பின்னாலும் இலட்சக்கணக்கானோர் திரண்டார்கள். அது சரி, நீங்கள் எந்த முழக்கத்திற்குப் பின்னால் திரண்டீர்கள்?
மன்னிப்புக் கடிதம்
எழுதிக் கொடுத்து விட்டு, வெளியே வந்தீர்கள்!
இந்த முழக்கங்கள் எல்லாம் யாருக்கு எதிராக எழுப்பப்பட்டதோ, அவர்களுக்குப் பின்னால் நீங்கள் இருந்தீர்கள் . தப்பித் தவறி விடுதலைப் போரில் பங்கெடுத்தால் கூட “தவறிப் பங்கெடுத்து விட்டேன்” என்று மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து விட்டு, வெளியே வந்தீர்கள். இந்த முழக்கத்தைக் கடந்த காலத்தில் எழுதியவர்கள் எல்லாம், ஏந்தியவர்கள் எல்லாம் விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள். ஆனால், அதற்கு எதிர் திசையில் இருந்துவிட்டு, நீங்கள் இன்றைக்கு இதை விவாதிக்க வேண்டும் சொல்லுகிற போது தான் உங்க ளது அரசியல் பட்டவர்த்தனமாக வெளிப்படு கிறது.
உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?
இந்த தேசத்தினுடைய அடையாளம் அதன் பன்முகத் தன்மையே! அதனால் தான் ‘ஈஸ்வர அல்லா தேரே நாம்’ என்ற முழக்கம் ‘வந்தே மாதரம்’ என்பதை விட மேலே எழுந்து வந்தது. என்றைக்காவது நீங்கள் உங்கள் உதட்டில் ‘ஈஸ்வர அல்லா தேரே நாம்’ என்று சொல்லியிருக்கிறீர்களா? அதற்குப் பதில் நீங்கள் இன்றைக்கு என்ன செய்கிறீர்கள்? உங்களது மாநில அரசுகள் சுற்றறிக்கை அனுப்புகிறார்கள். வந்தே மாதரம் பாடலின் ஆறு சரணங்களையும் பாட வேண்டுமென்று மகாராட்டிரா மாநில அரசு சுற்றறிக்கை அனுப்புகிறது. அடுத்தவர் உதடு என்ன பாடல் பாட வேண்டுமென்பதை தீர்மானிக்க உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? என்ற கேள்வியை இங்கே நாங்கள் கேட்க விரும்புகிறோம்.
ஏன் கிறிஸ்தவம் சார்ந்த உருவச் சிலை ஒன்று கூட உங்களுக்குக் கிடைக்கவில்லையா?
காயங்கள் ஆற்றப்பட வேண்டும். ஆனால், காயங்களைக் கிளறுவது தான் உங்களுக்கு இலாபம் தருகிறது என்ப தால், நீங்கள் காயங்களைக் கிளறிக் கொண்டே இருக்கிறீர்கள். இதோ இந்தப் புதிய நாடாளுமன்றக் கட்டடம், இந்தக் கட்டடத்திற்குள்ளே 12 உருவச் சிலைகளை நீங்கள் வைத்திருக்கிறீர்கள். யாருடைய சிலைகள் தெரியுமா ? சிவன், விஷ்ணு, பிரம்மா, துர்கா, மிதுனா, மஞ்சுசிறீ, யோகிணி, லிங்கேஸ்வர் என்ற 12 உருவச் சிலைகளை வைத்திருக்கிறீர்கள். ஏன் கிறிஸ்தவம் சார்ந்த உருவச் சிலை ஒன்று கூட உங்களுக்குக் கிடைக்கவில்லையா? திருக்குரானினுடைய உருவ அடையாளம் ஒன்று கூட உங்களுக்குக் கிடைக்கவில்லையா? இந்த தேசத்தின் பன்முகத் தன்மை இந்த அவையிலே கூட எதிரொலிக்கக் கூடாது என்று நினைக்கிற நீங்கள், தேசபக்தியைப் பற்றி எங்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருக்கிறீர்கள்.
நண்பர்களே, பன்முகத் தன்மை தான் இந்தியா. அதற்கு எதிரான உங்களின் வரலாறு தான் இங்கேயிருந்து திருப்பரங்குன்றம் வரை நீள்கிறது. எல்லோரின் கண்களுக்கும் உச்சிப் பிள்ளையார் கோவிலில் ஏற்றப்பட்ட தீபம் தெரிகிறது. ஆனால், உங்கள் கண்களுக்கு தர்கா மட்டும் தான் தெரிகிறது. மக்களுக்குத் தேவை பக்தி; உங்களுக்குத் தேவை பகை. எல்லோருக்கும் தேவை ஆன்மீகம்; ஆனால் உங்களுக்குத் தேவை கலவரம்.
தமிழ்நாட்டிற்கு இன்றைக்கு மிகவும் பொருந்தும்!
நண்பர்களே பங்கிம் சந்திரருடைய இந்தக் கவிதையைப் பற்றி பேசுகிற போது, கவியரசு கண்ணதாசன் சொன்ன ஒரு கதையை நான் இங்கே மேற்கோள் காட்ட வேண்டுமென நினைக்கிறேன். சொர்க்கத்திற்கும், நர கத்திற்கும் இடையிலே இருந்த ஒரு சுவர் இடிந்து விழுந்து விட்டது. அந்தச் சுவரை நீ கட்ட வேண்டும், நான் கட்ட வேண்டும் என்று இரண்டு தரப்புகளும் வாதிட்டு விட்டு, கடைசியில் சொர்க்கத்தின் தரப்பிலே இருந்தவர்கள் நாங்கள் வழக்குத் தொடுக்கப் போகிறோம் என்று சொன்னார்களாம். உடனே நரகத்தின் தரப்பிலே இருந்தவர்கள் நீ வழக்குத் தொடுத்தால், உன்னால் வெற்றி பெற முடியாது. ஏனென்றால் தீர்ப்புச் சொல்ல வேண்டியவர் எங்களின் பக்கம் இருக்கிறார் என்று சொன்னார்களாம். இது தமிழ்நாட்டிற்கு இன்றைக்கு மிகவும் பொருந்தும். மதுரைக்கு மிக மிகப் பொருந்தும்.
நூறாண்டுகளாக ‘புண்ணியவான்கள்’ இங்கே விளக்கேற்றலாம் என்று கல்தூணில் எழுதப்பட்டு, அதிலே விளக்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், நான் ‘புண்ணி யவான்’ அல்ல; அங்கே விளக்கேற்ற மாட்டேன் என்று சொல்லி ஒருவர் அடம் பிடிக்கிறார். “உங்கள் தீர்ப்புக்கு முன்னால் நீதி ஒருபோதும் தலை வணங்காது” என்பது தான் இந்த அவையிலே இருந்து நாங்கள் சொல்லிக் கொள்ள விரும்பும் முக்கியமான விசயம்.
மேற்கு வங்காளத்தினுடைய தேர்தல் உங்களுக்குத் தேவையாக இருக்கிறது!
இது வந்தே மாதரம் பாடலினுடைய 150 ஆவது ஆண்டு என்ற ஆதாரத்தை நீங்கள் எங்கிருந்து எடுத்தீர்கள் என்று தெரியவில்லை. அந்தப் பாடலின் இரண்டு சரணம் முதலிலே எழுதப்பட்டது. நான்கு சரணங்கள் பின்னால் ‘ஆனந்த மடம்’ நாவலிலே எழுதப்பட்டது. சரியாக எழுதப்பட்ட ஆண்டு இல்லை. ஆனால், உங்களுக்கு வேறு ஒரு தேவை இருக்கிறது. அந்தத் தேவை வர இருக்கின்ற சட்டமன்றத் தேர்தல், குறிப்பாக மேற்கு வங்காளத்தினுடைய தேர்தல் உங்களுக்குத் தேவையாக இருக்கிறது.
விமானப் போக்குவரத்தே நிலைகுலைந்து போயிருக்கிறது
காலமெல்லாம் உங்களின் தேவை தேர்தலாக இருக்கிறது. ஆனால், நாட்டின் தேவை வேறொன்று. நான்கு தொழிலாளர் நலச் சட்டங்களால் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதைப் பற்றி இந்த அவையிலே விவாதிக்க நீங்கள் தயாராக இல்லை. ஒட்டுமொத்தமாக விமானப் போக்குவரத்தே நிலைகுலைந்து போயிருக்கிறது. அதைப் பற்றி நீங்கள் விவா திக்கத் தயாராக இல்லை. காற்று மாசால் டில்லி நிலைகுலைந்து போயிருக்கிறது. அதைப் பற்றிப் பேச நீங்கள் தயாராக இல்லை.
பாரதி உங்களுக்குச்
சொன்னது!
இறுதியாக, மாண்புமிகு பிரதமர் அவர்கள், மகாகவி சுப்ரமணிய பாரதியை நினைவூட்டினார். சுப்ரமணிய பாரதி தான் ‘வந்தே மாதரம்’ பாடலை 1908 ஆம் ஆண்டு தமிழிலே மொழி பெயர்த்தார். பிரதமர் அவர்கள் நினைவூட்டியதால் பாரதியின் அருமையான கவிதையை நான் நினைவூட்டுகிறேன். “தாயைக் கொல்லும் பஞ்சத்தை தடுக்க முயற்சியுறார், வாயைத் திறந்து சும்மா – கிளியே! வந்தே மாதர மென்பார்” என்று பாரதி சொன்னார். அது பாரதி உங்களுக்குச் சொன்னது என்று சொல்லி முடிக்கிறேன்.
– இவ்வாறு சு.வெங்கடேசன் எம்.பி., நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.
