மறதியா? மறதி நோயா?

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மருத்துவம்

பத்மசிறீ டாக்டர்
வி.எஸ். நடராஜன்
முதியோர் நல மருத்துவர்
சென்னை

இன்று எனது பெயர்த்தி அவளுடைய முதல் மாத ஊதியத்திலிருந்து ஒரு புதிய மூக்குக் கண்ணாடியை எனக்காக வாங்கிக் கொடுத்தாள். ஆனால், அதை எங்கு வைத்தேன் என்று எனக்கு ஞாபகப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அதை நான் தேடினேன். மீண்டும் தேடினேன். மீண்டும் தேடினேன். மீண்டும் தேடினேன். இப்பொழுது நான் எதைத் தேடினேன் என்பதே மறந்து விட்டது . . .

இந்தக் கடிதத்துடன் ஓர் இளம் பெண் தன் தாத்தாவை அழைத்துக் கொண்டு என் கிளினிக்கிற்கு வந்தார். இந்தக் கடிதத்தை நன்றாகப் படியுங்கள். “மீண்டும் தேடினேன்” என்பதையே ஞாபக மறதியினால் எத்தனை முறை உபயோகித்து இருக்கிறார் பாருங்கள் அந்த முதியவர். மறதி நோய் எப்படி வெளிப்படும் என்பதற்கு இது ஓர் உதாரணம்.

வயதான காலத்தில் மறதி ஏற்படுவது முதுமையின் விளைவா? அல்லது ஏதாவது நோயின் அறிகுறியா?

சுமார் 60 வயதைக் கடந்தவர்களுக்கு சற்று ஞாபக மறதி ஏற்படுவது சகஜம். மிகவும் பழக்கமானவர்களின் பெயர் மறந்து விடும். புதிதாக தொலைப்பேசி எண்ணை ஞாபகத்தில் வைத்துக் கொள்வது சிரமமாக இருக்கும். பணத்தைப் பலமுறை எண்ணிக்கொண்டே இருப்பார்கள். இப்படி பல ஞாபக மறதி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் நாள்தோறும் நடப்பது சகஜம். இது முதுமையின் விளைவு. ஆனால், பல நோய்களினாலும் ஞாபக மறதி ஏற்படலாம். முதுமையில் எந்தக் காரணமுமின்றி ஞாபக மறதி ஏற்படுவதை மறதி நோய் (டிமென்சியா) என்று கூறுவதுண்டு.

முதுமையில் ஏற்படும் ஞாபக மறதிக்கும், மறதி நோயினால் ஏற்படும் ஞாபக மறதிக்கும் உள்ள வித்தியாசம்? அதை எப்படிக் கண்டு கொள்வது?

ஆரம்ப நிலையில் இரண்டுக்கும் வித்தியாசம் கண்டறிவது மிகவும் கடினமே, இருந்தாலும் கீழ்க்கண்ட குறிப்புகளின் மூலம் வித்தியாசம் கண்டுகொள்ள முடியும்.

முதுமையில் ஏற்படும் ஞாபக மறதி

  1. தனக்கு ஞாபக மறதி உள்ளதாக கவலை அடைந்து, அவரே மருத்துவரிடம் செல்வார்.
  2. ஒரு பொருளை தவறாகச் சொன்னாலும், அதை எடுத்துக் கூறினால், அவர் அதைப் புரிந்து திருத்திக் கொள்வார். (உதாரணம் : பேனாவை கத்தி என்பார். ஆனால் அது தவறு, இது எழுதுவதற்கு உபயோகப்படுத்தக்கூடிய பொருள் என்று சொன்னால், அவர் புரிந்து, “ஆம் அது பேனா தான். நான் தவறாக கத்தி என்று சொல்லிவிட்டேன்” என்று தன்னைத் திருத்திக் கொள்வார்.
  3. MOCA Test : மனநோயைக் கண்டறியும் பரிசோதனை. இதில் மாற்றம் ஏதும் இருக்காது.
  4. MRI மற்றும் PET Brain scan : இதிலும் மாற்றம் ஏதும் இருக்காது.

மறதி நோய்

  1. தனக்கு அப்படி ஞாபக மறதி ஏதுமில்லை என்று அவராகவே மருத்துவரிடம் செல்லமாட்டார். ஆகையால், அவரை குடும்பத்தினர்கள் மருத்துவரிடம் அழைத்து வருவர்.
  2. பேனாவை கத்தி என்றுதான் அடித்துக் கூறுவார். தன்னைத் திருத்திக்கொள்ளத் தெரியாது.
  3. MOCA Test : இச்சோதனையில் மிக்க மாற்றம் இருக்காது
  4. MRI மற்றும் PET Brain scan : இப்பரிசோதனைகளில் மாற்றம் தெரியும்.

மறதி நோய் எதனால் வருகிறது?

இது முதுமையைத் தாக்கும் ஒரு கொடிய நோய், மூளையிலுள்ள திசுக்கள் அழிவதால், இந்நோய் ஏற்படுகிறது. இதற்கான காரணம் இன்னமும் கண்டறியப்படவில்லை. அதனால், அதற்கு தக்க சிகிச்சையும் இல்லை. டாக்டர் அலோசிஸ் அல்சமையர், ஜெர்மனியிலுள்ள மனோதத்துவப் பேராசிரியர், இந்நோயை 1906 ஆம் ஆண்டு முதன் முதலில் கண்டுபிடித்தார்.

மறதி நோயின் முக்கிய அறிகுறிகள் யாவை?

இந்நோய் சுமார் 70 – 75 ஆண்டுகள் கடந்த முதியவர்களுக்கே அதிகம் வர வாய்ப்புண்டு. ஆண்களைவிட பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களுடைய அறிவுத்திறன் முதலில் வீழ்ச்சி அடைகிறது. இதனால் நினைவாற்றல், ஒருமுகக்கவனம், இடஇயல் அறியும் தன்மை, ஆகியவை பாதிக்கப்படுகின்றன. ஒரு பொருளை பகுத்தறியும் தன்மையும், புதிதாய் ஒன்றைக் கற்றுக்கொள்ளும் தன்மையும் குறைகின்றன. இதனால் பல தொல்லைகள் ஏற்படுகின்றன. உதாரணம் :கவனக்குறைவு, இதனால் எதையும் மனதில் பதிய வைக்க முடிவதில்லை. முக்கியமாக அண்மைக்கால நினைவு பாதிக்கப்பட்டு மறதி உண்டாகிறது. ஏதாவது ஒன்றைக் கூறினால், அதில் கவனம் செல்லாததால், அதை நினைவில் பதிய வைத்துக் கொள்ள முடிவதில்லை. அதனால் அண்மை நினைவுகள் அற்றுப்போய் விடுகின்றன. யார் யார் வந்தனர்? யார் யார் போயினர்? நேற்று என்ன நடந்தது? என்பதுகூட அவர்கள் நினைவில் இருப்பதில்லை.

இந்தக் கொடிய நோயைப்பற்றி வேறு ஏதேனும் தகவல் உண்டா?

ஏழை, பணக்காரன் என்று பாகுபாடு இல்லாமல், இந்நோய் எத்தரப்பினரையும் பாதிக்கலாம், உதாரணம் : அமெரிக்கா அதிபர் ரொனால்டு ரீகன் அவர்களுக்கும் மற்றும் பிரபல குத்துச் சண்டை வீரர் முகமது அலிக்கும் இந்நோய் வந்துள்ளது.

மறதி நோயை இரண்டு வகைகளாக பிரிக்கலாம்

  1. காரணமின்றி (தெரியாமல் ) வரும் டிமென்சியா

அல்ஸைமர் நோய்: இன்னமும் இந்த நோய்க்கான காரணம் கண்டறியப்படவில்லை. மரபுப் பண்பும், சுற்றுப்புறச் சூழ்நிலையில் ஏற்படும் மாற்றமும் ஒரு காரணமாக இருக்கலாம்.

மூளையின் Medical Temporal lobe பகுதியில் Amyloid என்ற புரதம் சேர்வதன் காரணமாக வருவது தான் அல்ஸைமர் மறதி நோய்.

டிமென்சியா மருத்துவப் பயனாளிகளில் சுமார் 70 சதவிகிதம் பேர் அல்ஸைமர் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த நோய்க்கான காரணம் தெரியப்படாததால், அதற்கு தகுந்த சிகிச்சையுமில்லை. அதை பூரணமாக குணப்படுத்தவும் முடியாது.

  1. சில காரணங்களால் வரும் டிமென்சியா

ஒரு சில குறிப்பிட்ட காரணங்களால் டிமென்சியா வருவதுண்டு. அந்தக் காரணங்களுக்குத் தகுந்த சிகிச்சை அளித்தால் டிமென்சியா குணம் அடைய வாய்ப்புண்டு. சுமார் 30 சதவிகிதம் பேர் காரணங்களால் வரும் டிமென்சியாவினால் பாதிக்கப்படுகிறார்கள். அவற்றின் விவரம் :

மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் பாதிப்பு :

மூளையில் ரத்தக் கசிவோ அல்லது ரத்த ஓட்டம் தடைபட்டாலோ, பக்கவாதம் போன்ற தொல்லைகள் ஏற்படலாம். பக்கவாதம் ஏற்பட்டு சில மாதங்கள் கழித்து அவர்களுக்கு டிமென்சியா வர வாய்ப்பு உண்டு. இந்தத் தொல்லை கீழ்க்கண்ட நோய்களினால் பாதிக்கப்பட்டவருக்கு டிமென்சியா ஏற்பட வாய்ப்பு அதிகம் உண்டு.

உதாரணம்: நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், உடற்பருமன், ரத்தத்தில் அதிக கொழுப்புச் சத்து, புகைபிடித்தல்.

மூளையில் கட்டி அல்லது ரத்தக் கட்டி :

மூளையில் தோன்றும் சாதாரண மற்றும் புற்றுநோய் கட்டிகளினாலும் டிமென்சியா வரலாம்.

அதிக மது அருந்துவது :

பல மாதங்கள் அல்லது ஆண்டுகள் தொடர்ந்து அதிகமாக மது அருந்துபவர்களுக்கு டிமென்சியா நோய் வர வாய்ப்பு அதிகம் உண்டு.

தைராய்டு சுரப்பி குறைவாக சுரப்பது

வைட்டமின் குறைவு: வைட்டமின் பி1 மற்றும் பி12 ரத்தத்தில் குறைந்தால் டிமென்சியா வர வாய்ப்பு உண்டு.

மருந்துகள்: தூக்க மாத்திரை, மனநோய்க்கு கொடுக்கும் மாத்திரைகளை அதிக நாள் சாப்பிடுவதினாலும் டிமென்சியா வரலாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *