ஜெய்ப்பூர், டிச.7 திருமணத்திற்கான சட்டப்பூர்வ வயதை எட்டாவிட்டாலும், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், முழு சம்மதத்துடன் திருமணம் செய்யாமல், ‘லிவ்– – இன் டுகெதர்’ (திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும்) முறையில் ஒன்றாக வாழ உரிமை உண்டு என ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் ஒரு புரட்சிகரமான தீர்ப்பை அளித்துள்ளது.
ராஜஸ்தானின் கோட்டாவைச் சேர்ந்த 18 வயது இளம்பெண்ணும், 19 வயது இளைஞரும் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி, இந்த முக்கிய உத்தரவைப் பிறப்பித்தார்.
அரசியலமைப்புச் சட்டம் 21இன் கீழ் உரிமை: மனுதாரர்கள் திருமண வயதை எட்டவில்லை என்ற அரசின் வாதத்தை நீதிமன்றம் ஏற்க மறுத்தது. இந்திய அரசியலமைப்பின் 21ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள வாழ்க்கை உரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தை மறுக்க முடியாது எனத் தீர்ப்பளித்தது.
திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்வதை சட்டம் தடை செய்யவில்லை, மேலும் அதை குற்றமாகக் கருதவில்லை. 18 வயதைக் கடந்தவர்கள், திருமணத்திற்கான சட்டப்பூர்வ வயதை எட்டாவிட்டாலும், இருவரின் முழு சம்மதத்துடன் ஒன்றாக வாழ உரிமை உண்டு.
ஒவ்வொரு தனிநபரின் வாழ்க்கை மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாக்க அரசுக்கு அரசியலமைப்பு கடமை உள்ளது. எனவே, மிரட்டல் தொடர்பான புகாரை விசாரித்து, தேவைப்பட்டால் இந்தத் இணையருக்குத் தேவையான பாதுகாப்பை உறுதி செய்ய பில்வாரா மற்றும் ஜோத்பூர் காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
பெரியாரின் தொலைநோக்குப் பார்வை
திருமணம் என்ற பாரம்பரிய சடங்கைக் கேள்விக்குள்ளாக்கி, தனிமனித சுதந்திரம் மற்றும் ஆண் பெண் உரிமைகள் அடிப்படையில் உறவுகளை வலியுறுத்திய தந்தை பெரியாரின் தொலைநோக்கு சீர்திருத்தக் கருத்தோடு ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மிகவும் ஒத்துப்போகிறது.
பல பத்தாண்டுகளுக்கு முன்பே, சமூகக் கட்டுப்பாடுகளையும், சம்பிரதாயங்களையும் தகர்த்தெறிந்து, தனிநபர் உரிமையே முதன்மையானது என்று பெரியார் வலியுறுத்தினார். அந்த கருத்தின் நவீன வடிவாகவும், இந்தியச் சட்ட அமைப்பின் உறுதிப்பாடாகவும் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது. இது, இந்தியச் சமூகத்தில், குறிப்பாக இளைய தலைமுறையினர் மத்தியில், தனிமனிதத் தேர்வுக்கான உரிமையை நிலைநாட்ட உதவும் ஒரு மைல்கல் தீர்ப்பாகும்.
