கவுஹாத்தி, டிச.3 அசாம் மாநிலத்தின் சிறீபூமி மாவட்டத்தில் 1.12.2025 அன்று அதிகாலையில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள குளத்தில் விழுந்தது. வாகனத்தின் கண்ணாடிகள் மூடியிருந்த நிலையில், அது தண்ணீரில் மூழ்கத் தொடங்கியது. இதற்கிடையில், விபத்து சத்தம் கேட்டு அருகில் இருந்த மசூதியின் இமாம் அப்துல் பாசித் வெளியில் வந்து பார்த்து அதிர்ச்சியுற்றார். உடனே, அவர் மசூதியின் ஒலிப்பெருக்கி மூலம் கிராம மக்களை உதவிக்கு அழைத்தார்.
இதையடுத்து, சில நிமிடங்களில் அங்கு ஓடிவந்த கிராம மக்கள் குளத்தில் குதித்து, வாகனத்தில் சிக்கியிருந்த 7 பேரையும் உயிருடன் மீட்டனர். வாகனத்தில் இருந்தவர்கள் இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் அசாமின் சில்சாரில் இருந்து திரிபுரா நோக்கி செல்லும்போது இந்த விபத்தில் சிக்கினர் என்றும் தெரிய வந்தது.
இமாம் அப்துல் பாசித்தின் துரித நடவடிக்கைக்குப் பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்தனர். உள்ளூர் பாஜக தலைவர் ஒருவர் நேரடியாக வந்து பாராட்டு தெரிவித்தார். இமாம் அப்துல் பாசித்தைக் கவுரவிக்க உயர் அதிகாரிகளுக்குப் பரிந்துரைக்க உள்ளதாகப் காவல்துறை அதிகாரிகள் கூறினர்.
