ஜோத்பூர், டிச.3 பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவிற்கு வழங்கப் பட்டுள்ள பிணையை ரத்து செய்யக் கோரி, பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப் பட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமை
குஜராத் மாநிலத்தை சேர்ந்த மதபோதகர் ஆசாராம் பாபு (86). இவருக்கு ராஜஸ்தானின் ஜோத்பூர் உள்ளிட்ட பல இடங்களில் ஆசிரமங்கள் உள்ளன. கடந்த ஆகஸ்ட் 2013-இல் ஜோத்பூருக்கு அருகிலுள்ள மனாய் கிராமத்தில் உள்ள ஆசிரமத்தில், 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில், வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு, குஜராத்தின் சூரத்தில் உள்ள மற்றொரு ஆசிரமத்தில் இரண்டு சகோதரிகளை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆசாராம் மற்றும் அவரது மகன் நாராயண் சாய் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கிலும் ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு, மருத்துவக் காரணங்களுக்காக ஜனவரி 7, 2025 அன்று இடைக்கால பிணை பெற்றார். பின்னர் இந்த பிணை ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து பிணையை நீட்டிக்கக் கோரிய அவரது மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், ஆகஸ்டில் சரணடைந்தார்.
இடைக்காலப் பிணை
இச்சூழலில் அக்டோபர் 29 அன்று, சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் இருந்த ஆசாராமுக்கு மருத்துவ காரணங்களுக்காக ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் ஆறு மாதம் பிணை வழங்கியது. ஒரு வாரம் கழித்து, நவம்பர் 6 ஆம் தேதி, குஜராத் உயர் நீதிமன்றமும் ஆசாராமுக்கு ஆறு மாதம் இடைக்கால பிணை வழங்கி உத்தரவிட்டது.
இந்நிலையில் ஆசாராமிற்கு வழங்கப்பட்டுள்ள பிணையை ரத்து செய்யக்கோரி பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பின் வழக்குரைஞர் அல்ஜோ ஜோசப், ஆசாராம் உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், ஆசாராம் நாடு முழுவதும் பயணம் செய்து வருவதாகவும், அவரது பிணையை ரத்து செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் மாதம், உயர்நீதிமன்றம் ஒரு மருத்துவக் குழுவை அமைத்ததாகவும், அதன் அறிக்கையில் ஆசாராம் நிலையாக இருப்பதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் கூறியதாகவும் வழக்குரைஞர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். மருத்துவ காரணங்களுக்காக பிணை பெற்ற ஆசாராம், அகமதாபாத், ஜோத்பூர் மற்றும் இந்தூர் உள்ளிட்ட பிற இடங்களுக்கு பயணம் செய்து வருவதாகவும் ஜோசப் வாதிட்டார்.
