தமிழ்நாட்டில் மூன்று மிகப் பெரிய திட்டங்கள் இம்மாதம் தொடங்கப்படுகிறது தமிழ்நாடு அரசு தீவிரம்

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, டிச.2- தமிழ்நாட்டில் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான அறிவிப்பு பிப்ரவரி மாதம் இறுதியில் அல்லது மார்ச் மாதம் தொடக்கத்தில் வெளிவர வாய்ப்பு இருக்கிறது.

தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டால், தமிழ்நாடு அரசால் புதிய திட்டப் பணிகளை அறிவித்து செயல்படுத்த முடியாது. எனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதிதாக செயல்படுத்த வேண்டிய திட்டங்களை விரைவில் தொடங்குவதற்கான ஆயத்தப்பணிகளை தொடங்கி உள்ளார். தற்போதைய நிலையில் இந்த டிசம்பர் மாதம் 3 மெகா திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

அதில் முதலாவது கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம். கடந்த பட்ஜெட்டில், 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நேரடி கண்காணிப்பில் இந்த திட்டப்பணிகள் நடப்பதால் அதிகாரிகள் பம்பரமாக சுழன்று செய்து வருகின்றனர். தற்போது இந்த திட்டம் இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டது.

முதல்கட்டமாக 10 லட்சம் மடிக்கணினிகள் ஏப்ரல் மாதத்திற்குள் வழங்கப்பட்டு விடும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அடுத்த மாதம் தொடங்கி வைக்கிறார். இந்த மடிக்கணினிகளை தயாரிக்கும் பணி ஏசர், டெல், எச்.பி. ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இவர்கள் இந்த மடிக்கணினிகளை தயார் செய்து வைத்திருக்கின்றனர். ஒரு மடிக்கணினி ரூ.21 ஆயிரத்து 650 என்ற விலையில் வாங்கப்படுகிறது. இந்த திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தவுடன் தமிழ்நாடு முழுவதும் இருக்கும் கல்லூரி மாணவர்கள் அரசின் மடிக்கணினியை பெறுவார்கள்.

இரண்டாவது மகளிர் உரிமை தொகை திட்ட விரிவாக்கம். தமிழ் நாட்டில் தற்போது ஒரு கோடியே 14 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி இவர்களது வங்கி கணக்கிற்கு மாதம்தோறும் 15ஆம் தேதி தலா ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கிறது. எனவே இந்த திட்டத்தின்கீழ் விடுப்பட்ட மகளிருக்கும் உரிமைத்தொகை வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்தது. அதற்காக உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மொத்தம் 28 லட்சம் பெண்கள், இந்த திட்டத்தின் கீழ் உரிமைத்தொகை கேட்டு விண்ணப்பம் செய்து உள்ளனர்.

இந்த மனுக்கள் பரிசீலனை தற்போது இறுதிகட்டத்தை எட்டி பட்டியல் தயாராகி வருகிறது. ஏற்கனவே அரசின் அறிவிப்புப்படி, இந்த திட்டத்தின்கீழ் உள்ள தகுதி வரையறை அடிப்படையில் தகுதியான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி இவர்களுக்கு டிசம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் வங்கிக்கணக்கில் பணம் போடப்படும். ஆனால் எத்தனை பெண்களுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று அறிவிக்கப்படவில்லை.

மூன்றாவது பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம். இந்த திட்டம், ஜனவரி மாதம் செயல்படுத்தப்படும் என்றாலும், இந்த திட்டப்பணிக்கான முடிவுகள் டிசம்பரிலேயே எடுக்கப்பட்டுவிடும். 2026ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை யின்போது பொங்கல் தொகுப்புடன், ரொக்க தொகையும் வழங்கப்படும் என்ற பேச்சு பரவலாக எழுந்து உள்ளது. அதற்கு காரணம், ஏப்ரல் மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடப்பதுதான். ஆனால் அரசு தரப்பில் இருந்து இதுவரை எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இருந்தாலும், தேர்தல் காரணமாக நிச்சயம் அரசு சார்பில் ரொக்கத்தொகை கொடுப்பார்கள் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு அனைவருக்கும் உள்ளது. தமிழ்நாடு அரசுக்கு நிதி சுமை இருந்தாலும், இந்த பொங்கலுக்கு ரொக்கத்தொகை நிச்சயம் வழங்கப்படும் என்று சிலர் உறுதியாக கூறுகின்றனர்.

தமிழ்நாட்டில் மொத்தம் 2.27 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. ஒரு குடும்பத்திற்கு ரூ.3 ஆயிரம் வழங்கினால் அரசுக்கு மொத்த செலவு ரூ.6 ஆயிரத்து 800 கோடி ஆகும் என்றும், ரூ.6 ஆயிரம் வழங்கினால் ரூ.13 ஆயிரத்து 620 கோடி தான் ஆகும். எனவே இது தமிழ்நாடு அரசுக்கு மிகப்பெரிய சுமை கிடையாது என்றும் அவர்கள் கூறுகின்றனர். ஆனால் அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் இறுதி முடிவு எடுப்பார் என்று அதிகாரிகள் சொல்கின்றனர்.

எனவே டிசம்பர் மாதத்தில் மடிக்கணினி வழங்கும் திட்டம், மகளிர் உரிமைத்தொகை விரிவாக்க திட்டம் மற்றும் பொங்கல் தொகுப்பு ரொக்கத்தொகை திட்டம் ஆகிய 3 மெகா திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *