‘ஆசிரியரின்’ தலைமைப் பண்பு!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திராவிடர் கழகம்

ஆ.வந்தியத்தேவன்
கொள்கை விளக்க அணி செயலாளர், ம.தி.மு.க.

திராவிடர் கழக மாநாடுகளில் கலந்துகொள்கிறபோது, திராவிடர் கழக கொடியைக் கைகளில் ஏந்திக் கொண்டு. வருகை தந்துள்ள கொள்கைக் குடும்ப உறவுகளைச் சந்தித்து, நலம் விசாரித்துக்கொண்டு மேடையேறுவது, தமிழர் தலைவர் நம் ஆசிரியரின் பண்பு நலனாகும். “நம் ஒரே தலைவர் தந்தை பெரியார் அவர்கள்தான்! நான் தொண்டர்களுக்கெல்லாம் தொண்டன்!” என்று பேசுவதும், “உங்கள் தோழன், தொண்டன்!” என்று தன் அறிக்கைகளில் கையொப்பமிடுவதும் எளிமையை விரும்பும், ஆசிரியரின் தலைமைப் பண்பின் வெளிப்பாடு ஆகும்!

இளம் வயது முதலே தொடரும் இந்தப் பண்பாட்டினைத் தலைவர் பெரியாரிடம் கற்றுப் பெற்றவர், நம் ஆசிரியர்! தந்தை பெரியார் அவர்களின் தலைமைப் பண்பினை, 22 வயது இளைஞராக – மாணவராகத் திகழ்ந்த ‘கடலூர் வீரமணி’ அவர்களே ஆய்வுக் கட்டுரையாக எழுதிய பெருமைக்கும் உரியவர் நம் ஆசிரியர்!

‘டார்ப்பிடோ’ ஏ.பி.ஜனார்த்தனம் அவர்களின் ‘தோழன்’ என்ற திராவிடர் கழக வார ஏட்டில் (20.11.1955) இதனை விளக்கி, “தலைவரென்போர் யாரெனக் கேட்டால்” என்ற தலைப்பில் ஓர் கட்டுரையினை நம் ஆசிரியர் எழுதினார்.

‘ஆந்துரு மராய்’ (Andre Mourois) என்ற பிரெஞ்சு எழுத்தாளர் எழுதிய ‘வாழும் கலை’ (The Art of Living) என்ற நூலினை ஊன்றிப் படித்த அன்றைய ‘மாணவரான’ கி.வீரமணி, அந்நூலில் குறிப்பிட்டுள்ள தலைமைப் பண்புகள், தந்தை பெரியார் அவர்களிடம் மிளிர்வதை ஒப்பிட்டு ஆய்வுக் கட்டுரையினை எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையினை நாம் அனைவரும் பாடமாகக் கற்றுப் பின்பற்ற வேண்டும்!

“பிரிட்டனில் தலைவர்கள் குறைவு; பின்பற்றுபவர்கள் ஏராளம். ஆனால், உங்கள் நாட்டிலோ தலைவர்கள் அதிகம்; பின்பற்றுபவர்கள் மிக மிகக் குறைவு” என்ற பெர்னாட்ஷாவின் கருத்தினை மேற்கோள்காட்டி “இது தமிழ்நாட்டின், பொது வாழ்வின் சரியான படப்பிடிப்பு என்று கூறலாம். ஒரு நாட்டில் அளவற்ற கட்சிகள் இருந்தால் மக்களின் சிந்தனையிலே தெளிவு இல்லை என்றுதானே பொருள்?” என்று கேள்வி கேட்டு, “சுயநலம், சூது, சூழ்ச்சி, முன்னுக்குப் பின் முரணான செய்கை, தெளிவற்ற எண்ணங்கள், மாறாத மன உறுதியின்மை இவை தமிழ்நாட்டுத் ‘தலைவர்களின்’ பண்புகளாக காட்சியளிக்கின்றன” என்ற விளக்கத்துடன்  ஆசிரியரின் கட்டுரை தொடங்குகிறது. அன்றைக்குத் தலைவர்களின் பண்பு நலன்களாக ஆசிரியர் குறிப்பிட்டதற்குச் சான்றுகளாக தமிழ்நாட்டின் ‘திடீர்’ தலைவர்களாகப் பலர் இப்பொழுதும் உலா வந்து கொண்டிருக்கிறார்கள்!

இந்தத் திடீர் தலைவர்களில் இருந்து மாறுபட்டவர் பெரியார் என்பதை, “இந்தச் சூழ்நிலையில் நல்ல பண்புகள் வாய்ந்த, தேர்தல் போதை ஏறாத, புகழ் – விளம்பரம்; – இவை பற்றிச் சற்றும் கவலைப்படாத ஒரே ஒரு தலைவர் தந்தை பெரியார் அவர் களாவார்! வயதில், அறிவில் முதியவராம்;  வாய்மைப் போருக்கு என்றும் இளைய வராம் பெரியார் இராமசாமி, தமிழ்நாட்டுப் பொது வாழ்க்கைச் சேற்றிலே முளைத்த செந்தாமரை” என்றும், “A leader is born not made’’ என்ற ஆங்கிலப் பழமொழிக்கேற்ற தலைமைப் பண்பை இயற்கையிலேயே பெற்றவர்” என்று பெரியார் தலைமைப் பண்புக்கு விளக்கம் அளித்தார் ஆசிரியர் கி.வீரமணி!

“திராவிடர் கழகத்தில் தலைவர்கள் கிடையாது. தலைவர் உண்டு. சலியாத உழைப்பு, நிறைந்த ஊக்கம், சிறந்த சிந்தனை, பரந்த அனுபவம், எதிர்ப்புக்கு அஞ்சா பண்பு, இவை படைத்தவர் என்று தொண்டர்கள் பெருமையோடு சொல்லிக் கொள்ளும் தலைவர் பெரியார்” என்று பெரியாரின் தலைமைப் பண்பை பட்டியலிட்டுக் காட்டிய ஆசிரியர், 1944ஆம் ஆண்டில் சேலத்தில் நீதிக்கட்சி மாநாட்டில் தலைமைப் பீடத்தை கைப்பற்றும் சதிக் கூட்டத்திற்கு எதிராக, ‘எங்கள் தலைவர் பெரியாரே’ என்று தொண்டர்கள் கூட்டம் ஆர்த்தெழுந்ததைக் குறிப்பிட்டு “இத்தகைய தலைவராலும், தொண்டர்களாலும்தான் வீழ்ந்த தமிழ்நாடு எழுந்து நிற்கிறது!” என்றும் கட்டுரையில் ஆசிரியர் குறிப்பிட்டுக் காட்டுவார்.

“நாட்டு நிலையை உணர்ந்து செயலாற்றும் வினைத் திட்பம், எண்ணித் துணிய வேண்டும் என்ற தத்துவம், எவரிடம் எதை ஒப்படைப்பது என்பதை அறியும் திறனாய்வு சக்தி, அறிவின் கூர்மை, வைர நெஞ்சம், எஃகு உள்ளம், இவைகள் அனைத்தும் பெரியாரிடம் நிரம்பித் ததும்புவதைக் கண்டு மாற்றாரும் மதிப்பார், மரியாதை காட்டுவார்” என்றும் தந்தை பெரியாரின் தலைமைப் பண்பினை கட்டுரையில் ஆசிரியர் அவர்கள் மேலும் தொகுத்து எழுதுவார்!

“தலைவர்கள் என்பவர்கள் நாட்டின் முன்னேற்றம், கொண்ட கொள்கைகள் ஆகியவைகளை மலரச் செய்ய வேண்டும். வெட்டிப் பேச்சு, சுய புராணம் போற்றுபவர்களாக இருக்கக் கூடாது” என்று குறிப்பிட்டு விட்டு, “பெரியார் காலத்தை வீணாக்கியிருக்கிறாரா? விரல்விட முடியுமா? முடியாதே! சோம்பல் அவரின் தீராப் பகைவன்; சுறுசுறுப்பு – எறும்பின் சுறுசுறுப்பு – அவர்தம் சோர்விலா நண்பன். ஒரு பெருந்தலைவர் என்பவர் – மிகப் பெரும் சக்தியுள்ள ஒரு பேரறிஞர். விருப்பு வெறுப்பு அற்ற சுயநலமில்லாதவர் என்பதன் இலக்கணம்தான் தந்தை பெரியார்” என்றும் அய்யாவின் தலைமைப் பண்புகளை அக்கட்டுரையில் மேலும் விளக்குவார் நம் ஆசிரியர்!

“பெரியார் ஒரு தனி மனிதர் அல்ல; ஓர் இயக்கம் திராவிடத்தின் பொதுச்சொத்து, சொந்த வாழ்வை – உல்லாச வாழ்வை இளமையிலேயே துறந்து இன்று பொது வாழ்க்கைப் புழுதியிலே உழலுகின்றவர், உழைப்பு, சக்தி, சொல்வன்மை, பொறுமை ஆகிய பண்பு நலன்களைக் கொண்டவர், தள்ளாத வயதிலும் சலியாது உழைப்பவர், ஏற்க இயலா இன்னல்களையும் எதிர்கொண்டு சாதித்து வெற்றி காணும் வீரத்தின் விளைநிலம்” என்றும் பெரியாரின குணநலன்களை பெருமையுடன் கட்டுரையில் குறிப்பிடுகிறார் நம் ஆசிரியர்!

“சிறந்த உடல்நலமும், நிறைந்த தைரியமும் தலைவருக்கு மிக மிகத்தேவை. பெரியார் அவர்கள் 77ஆவது வயதிலும், 27 வயது இளைஞனைப் போல் ஏறுநடை போடுவதன் ரகசியம் இதுதானே!” என்ற நம் ஆசிரியரின் கூற்றும், “எதிர்நீச்சலில் சளைக்காமல் நீந்தி, வெற்றிக்கரை சேரும் விவேகி; மலை குலைந்தாலும் மனங் குலையா மாவீரர் அல்லவா நம் திராவிடத் தந்தை!” என்ற நம் ஆசிரியரின் வியப்பும் பெரியாரின் தலைமைப் பண்பை பளிச்சிட்டுக் காட்டுகின்றன.

“தலைவர் என்பார் மிகவும் எளிய முறையில் வாழ வேண்டும். பெரியார் எப்பொழுதும் எளிய வாழ்வு வாழும் எளிய தலைவர், தனக்குத் தகுதியிருந்தும் அதை இத்தள்ளாடிய வயதிலும் புறக்கணித்து, எளிய வாழ்வுடன், தொண்டர்களைக் கண்டு உள்ள உரம் ஊட்டி, அஞ்சாமை எனும் முனை மழுங்காத ஆயுதத்துடன் போராடி வரும் தலைவர் நம் பெரியார்” என்று நம் ஆசிரியர் விளக்குவதும்  சரிதானே!

“தலைவன் என்றால் தன் காலத்திற்குப் பிறகு 50 ஆண்டுகளுக்குக் குறையாமல் பார்க்கக் கூடியவனே” என்ற காண்டேகரின் கருத்தைச் சுட்டிக்காட்டி, “இந்த உரைகல்லில் உரைத்துப் பார்த்தால், மாற்றுக்குறையாத பத்தரை மாற்றுத் தங்கமாக காட்சியளிக்கிறார் நம் பெரியார்” என்று பெரியாரின் தொலைநோக்குப் பார்வையை சுட்டிக்காட்டி, “சுமார் 2000 ஆண்டுகளாக சுய உணர்விழந்து, சுயமரியாதை அற்றுக்கிடந்த ஒரு மாபெரும் இனத்தை 30 ஆண்டுகளில் தட்டி எழுப்பி, சுயமரியாதை உணர்வைப் பெறச் செய்ய யாரால் முடியும்? பெரியாரைத் தவிர!” என்றும் அறிவார்ந்த வினாவை எழுப்புகிறார் நம் ஆசிரியர்!

“பிரெஞ்ச் எழுத்தாளர் ஆந்துரு மராய், தலைவருக்குள்ள மிக முக்கிய பண்புகளில் அதிகம் வலியுறுத்துவது  ஒழுக்கத்தைப் பற்றி, சிறந்த நடத்தையைப் பற்றி, தலைவர் என்பவர் ஒழுக்கத்தின் உயர் சின்னமாக விளங்க வேண்டும்” என்று குறிப்பிட்டு விட்டு, “நாணயம், நேர்மை, உண்மை, சொன்ன சொல் தவறாமை இவைகளின் கூட்டுத் தொகைதான் ஒழுக்கம். இதன் அடையாளம் தந்தை பெரியார் என்றும் நம் ஆசிரியர் பெரியாரின் தலைமைப் பண்பை விவரித்து எழுதுகிறார்.

“நிறைவாக இத்தகைய பண்புகள் ஒருங்கே சேர்ந்த ஓர் உருவம் தென்னாட் டின் பொது வாழ்வில் உலவுகிறது என்றால் அவர் நம் தலைவர் பெரியார் ஒருவரே!” என்றும் பெருமிதம் பொங்கிட நம் ஆசிரியர் அக்கட்டுரையில் எழுதினார்.

இளம் வயதிலேயே தந்தை பெரியாரின் தலைமைப் பண்புகளை அருகில் இருந்து கசடறக் கற்று, கற்ற பின் அதன் வழி நின்று, பொது வாழ்வில் பயணிப்பவர்கள் அனைவருக்கும் எடுத்துக்காட்டான தலைவராக வாழ்ந்து காட்டும் உயரிய தலைவர்தான் நம் தமிழர் தலைவர் “ஆசிரியர்” ஆவார்! அவருக்கு இன்று வயது 93!

விடுதலை களஞ்சியம் முதல் தொகுதி வெளியீட்டு விழாவில் ஈரோடு தமிழன்பன் அவர்கள் நம் ஆசிரியரின் பெருமைகளைச் சுட்டிக்காட்டி வாழ்த் துரைத்தபோது,

‘‘தந்தை பெரியாரின் தளவாய்ப்பட்டறை

வடித்துக் கொடுத்த வாள்களின் தொகுப்பு நீங்கள்!

தந்தை பெரியாரின் எஞ்சிய வயது மானமிகு ஆசிரியர் வீரமணி

தந்தை பெரியாரின் பின் தொடரும் தன்மான உழைப்பு மானமிகு ஆசிரியர் வீரமணி!

உங்களின் பழுதடையாத விரலுக்கு

எப்போதும் வயது 16தான்!

அவரின் வார்த்தைகள் எப்போதும் படுக்கை போடுவதில்லை!

அவரின் வாக்கியங்கள் எப்போதும் படுத்துத் தூங்குவதில்லை!

அவர் வளர்ந்த வயது.

நம் முன் அவரை அழைத்து வந்து சொல்கிறது

இவர்தான் இரண்டாம் ஈ.வெ.ரா.! என்று

விடுதலையை நீதிக்கட்சியிடமிருந்து

மீட்டெடுத்தவர் முதல் ஈ.வெ.ரா.!

விடுதலை களஞ்சியத்தை நம் கைகளில் கொடுத்தவர்

இரண்டாம் ஈ.வெ.ரா.!

வாழ்த்துவோம் அவரை!’’

என்று புகழ்மாலை சூட்டினார்!

நாமும் வாழ்த்தி – வணங்கி மகிழ்ந்திடுவோம்!!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *