
பேராசிரியர் முனைவர்
நம்.சீனிவாசன்
தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான தோழர்களின் இதயச் சிம்மாசனத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் இடம்பெற்றிருக்கின்றார்கள்.
93 வயது முதுபெரும் தலைவர்.
83 ஆண்டுகள் பொது வாழ்வுக்குச் சொந்தக்காரர்.
ஒரே கொள்கை, ஒரே கொடி, ஒரே இயக்கம், ஒரே தலைமை என்று வாழும் கொள்கைப் பிழம்பு ஆசிரியர் அய்யா அவர்கள்.
அவருடைய இதயத்தில் நிறைந்திருப்பவர் தந்தை பெரியார் என்பதை எல்லோரும் அறிவார்கள்.
முப்பதாயிரம் நாள்களாகத் தந்தை பெரியார் அவர்களின் புகழைப் பாடிக்கொண்டே இருக்கின்றார்.
பெரியாரைப் பற்றி பேசாத நாள்கள் பிறவா நாள்கள் என்கின்றார்.
பெரியாரன்றிப் பிறரைப் பற்றிப் பேசாத நா அவருடைய நாவாகும்.
கனவிலும் நனவிலும் பெரியார் ஒன்றே நினைப்பு.
பெரியாரின் தொண்டர்களே இவருக்கு உறவு.
இயக்கமே வாழ்க்கை.
நாள்தோறும் தந்தை பெரியாரின் கருத்துக்களைப் பரப்பிக் கொண்டிருக்கின்றார்.
அய்யா ஒப்படைத்த ‘ விடுதலை’யை உயிர்த் துடிப்புடன் நடத்திக் கொண்டிருக்கின்றார்.
அய்யாவின் கொள்கைகளுக்கு விளக்கம் தந்து கொண்டே இருக்கின்றார்.
தந்தை பெரியாரின் வரலாற்றைச் சொல்லிக் கொண்டே இருக்கின்றார்.
அய்யாவைப் பற்றி எழுதிக் கொண்டே இருக்கின்றார்.
அய்யாவின் எழுத்துக்களை வியந்து வியந்து வாசித்துக் கொண்டே இருக்கின்றார்.
தந்தை பெரியாரின் சிந்தனை வளத்தை நாடெங்கும் உணர்த்திக் கொண்டிருக்கின்றார்.
அய்யா விட்டுச் சென்ற பணிகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றார்.
ஒவ்வொரு பிரச்சினையிலும் அய்யா போன்றே முடிவெடுக்கின்றார்.
ஈரோட்டுக் கண்ணாடியை எப்போதும் கைவசம் வைத்திருக்கின்றார்.
ஆதரிப்பதிலும் எதிர்ப்பதிலும் தந்தை பெரியாரின் கொள்கைகளையே அடிப்படையாகக் கொள்கின்றார்.
அய்யாவின் அணுகுமுறையை அப்படியே கடைப்பிடிக்கின்றார்.
அய்யாவின் அடிச்சுவட்டிலேயே நடை போடுகின்றார்.
அய்யாவின் கொள்கை எதிரிகளைக் கடுமையாக எதிர்க்கின்றார்.
‘சொந்த புத்தி வேண்டாம்; பெரியார் தந்த புத்தியே போதும்’ என்று மீண்டும் மீண்டும் உரைக்கின்றார்; எதுகை நயத்திற்காக அல்ல; கொள்கை மீது கொண்ட அழுத்தம் நிறைந்த நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றார்.
தந்தை பெரியார் தோற்றுவித்த இயக்கத்தை வளர்த்துக் கொண்டிருக்கின்றார்.
பெரியார் படைப்புகளை வெளியிட்டுக் கொண்டே இருக்கின்றார்.
பெரியாரை உலகமயமாக்குகிறார்.
உலகைப் பெரியார் மயமாக்குகின்றார்.
பெரியார் பற்றிய திரிபு வாதங்களை முறியடிக்கின்றார்.
பெரியாரைப் பற்றி படம் எடுக்கின்றார்.
பெரியாரைப் பற்றி பயிற்சி வகுப்புகள் நடத்துகின்றார்.
சாமி. சிதம்பரனார், ‘தமிழர் தலைவர்’ என்று சொன்னதைத் திருத்துகின்றார்;
‘உலகத் தலைவர் பெரியார்’ என்று ஓங்கி உரைக்கின்றார்.
‘பெரியார்’ என்று மொட்டையாகச் சொல்வதை வெறுக்கின்றார்;
‘தந்தை பெரியார்’ என்று அடை மொழியோடு அழைக்க வேண்டுமென்று வலியுறுத்துகின்றார்.
பெரியாரின் சிலைகளை விரும்புகின்றார்.
பெரிய அளவிலான பெரியார் சிலைகளை அமைத்து மகிழ்கின்றார்.
பெரியார் உலகம் காண விழைகின்றார்.
எல்லாவற்றிற்கும் பெரியார் பெயரை மட்டுமே சூட்டுகின்றார்.
‘தந்தை பெரியாரை மட்டுமே முன்னிலைப் படுத்துங்கள்’ என்பதில் உறுதி காட்டுகின்றார்.
‘வாழும் பெரியார்’ என்று அவரை விளித்து விட்டால் கோபம் கொள்கின்றார்.
ஒரே பெரியார்; அவருக்கு இணையில்லை; அவர்தாம் தந்தை பெரியார் என்று முழங்குகின்றார்.
முதுமை ஏற ஏற தந்தை பெரியார் போன்றே சுற்றுப்பயணத்தை முடுக்கி விடுகின்றார்.
ஆசிரியர் அய்யா அவர்களின் இதயம் முழுவதும் தந்தை பெரியார் மட்டுமே நிறைந்திருக்கின்றார்.
சிந்தை முழுதும் பெரியார்தான்.
இது ஊருக்குத் தெரிந்த உண்மைதான் ;
பிறந்தநாளில் பகிர்ந்து கொள்ளல் இன்பம்தான்:
அய்யாவின் நம்பிக்கை வென்றது காண்!
