புதுடில்லி, நவ.25- தமிழ்நாட்டில் நடத்தப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப்பணிக்கு எதிராக விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சார்பில் வழக்குரைஞர் அதிதி குப்தா உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்
அந்த மனுவில், ‘தமிழ்நாட்டில் நடத்தப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிக்கு உரிய காரணங்களை தேர்தல் ஆணையம் தெரிவிக்கவில்லை. இதுபோன்ற சூழலில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப்பணி அரசியலமைப்பு சாசனம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மீறுவதாக உள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் குறித்து தேர்தல் ஆணையம் கடந்த 27ஆம் தேதி வெளியிட்ட அறிவிக்கையை ரத்து செய்ய வேண் டும் என்று கூறியுள்ளார்.
இதேபோல் த.வெ.க. தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா சார்பில் வழக்குரைஞர் யஷ் எஸ்.விஜயும் இதே விவகாரம் தொடர்பாக ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில் இந்த மனுவை விசாரித்து தீர்ப்பு அளிக்கும் வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
