இந்தியாவில் உறுப்பு மாற்று சிகிச்சைகள் தமிழ்நாட்டின் பங்களிப்பு 24 சதவீதம்

2 Min Read

புதுடில்லி,. நவ.22- நாடு முழுவதும் 36 மாநிலங்களில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட உறுப்பு மாற்று சிகிச்சைகளில் நான்கில் ஒரு பங்கு தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஒன்றிய அரசின் தரவுகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அதாவது அந்த கால கட்டத்தில் நாடு முழுவதும் மூளைச்சாவு அடைந்த 1,128 பேரின் உறுப்புகள் கொடையாகப் பெறப்பட்டு தகுதியானவா்களுக்கு பொருத்தப்பட்டன. அதில், 268 உறுப்பு கொடைகள் தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ளன. இது மொத்த எண்ணிக்கையில் 24 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. உத்தர பிரதேசம், பீகார் போன்ற பல மாநிலங்களில் மூளைச் சாவு அடைந்த ஒருவரிடம் இருந்து கூட உறுப்பு கொடை பெறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தலைநகர் டில்லியில் கூட 40 உடல் உறுப்பு கொடைகள்தான் அளிக்கப்பட்டதாக தரவுகள் தெரிவிக்கின்றன. தெலங்கானாவில் அந்த எண்ணிக்கை 188-ஆகவும், மகாராட்டிரத்தில் 172-ஆகவும், கருநாடகத்தில் 162-ஆகவும், குஜராத்தில் 119-ஆகவும் உள்ளது.

இதுதொடா்பாக மாநில உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பினர் செயலா் டாக்டா் என்.கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:

நாட்டின் பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் உறுப்பு மாற்று நடவடிக்கைகள் சிறப்பாகவும், மேம்பட்ட நிலையிலும் உள்ளன. அதன் காரணமாகவே இந்திய அளவில் தமிழ்நாடு தொடா்ந்து உடல் உறுப்பு கொடையில் முதலிடத்தில் உள்ளது.

உறுப்பு கொடை செய்பவா்களின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும் என்று கடந்த 2023 செப்.23-ஆம் தேதி முதலமைச்சர் அறிவித்தார். இதைப் பின்தொடா்ந்து இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இத்தகைய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அரசு மரியாதை அறிவிப்புக்கு பிறகு தமிழ்நாட்டில் இதுவரை 553-க்கும் மேற்பட்டோர் உடல் உறுப்பு கொடை அளித்துள்ளனா். அவா்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. 23,000-க்கும் மேற்பட்டோர் உறுப்பு கொடை செய்வதாகப் பதிவு செய்துள்ளனா்.

கடந்த 2023-இல் 178 போ் உறுப்பு கொடை செய்துள்ளனா். அவா்களிடமிருந்து கொடையாகப் பெற்ற உறுப்புகள் வாயிலாக 1,000 போ் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மறுவாழ்வு பெற்றுள்ளனா். கடந்த ஆண்டில் மூளைச்சாவு அடைந்த 268 பேரிடம் இருந்து உறுப்புகள் கொடையாகப் பெறப்பட்டு 1,500 பேருக்கு பொருத்தப்பட்டுள்ளன. அதில் 456 சிறுநீரகங்களும், 409 விழி வெண்படலங்களும், 210 கல்லீரல்களும் கொடையாகப் பெறப்பட்டுள்ளன.

மூளைச்சாவு அடைந்த ஒருவரால் 7 பேருக்கு மறுவாழ்வு அளிக்க முடியும். அதன் அடிப்படையில், ஒருவரிடம் இருந்து பெறப்படும் உடல் உறுப்புகள், உரிய விதிகளின் படியே பயனாளிகளுக்கு பொருத்தப்படுகின்றன.

தமிழ்நாட்டில் இதுவரை 2,286 கொடையாளா்களிடம் இருந்து 13,400 உறுப்புகள் கொடையாக பெறப்பட்டுள்ளன. அவற்றில் 4,036 சிறுநீரகங்களும், 3,356 விழி வெண் படலங்களும், 2,036 கல்லீரல்களும், 1,089 இதய வால்வுகளும், 979 இதயங்களும், 1,010 நுரையீரல்களும் கொடையாகப் பெறப்பட்டன. இதன் வாயிலாக பல்லாயிரக்கணக்கானோர் மறுவாழ்வு பெற்றுள்ளனா்.

உடல் உறுப்புகளை பயனாளிகளுக்கு அளிப்பதில் அரசு மருத்துவமனைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதன் பின்னரே தனியார் மருத்துவமனைகளுக்கு உறுப்புகள் வழங்கப்படுகின்றன என்றார் அவா்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *