தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறை இந்தியாவில் உள்ள அனைத்து மாநில கூட்டுறவுத் துறைகளுக்கும் முன்னோடியாக திகழ்கிறது

2 Min Read

அமைச்சர் பெரியகருப்பன் பெருமிதம்

சென்னை. நவ.22– தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறை இந்தியாவில் உள்ள அனைத்து மாநில கூட்டுறவுத்துறைகளுக்கும் முன்னோடியாக திகழ்கிறது என அமைச்சர் பெரியகருப்பன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் ஆகியோர் (20.11.2025) திருநெல்வேலி, பாளையங்கோட்டை, நேருஜி கலையரங்கில் நடைபெற்ற 72ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா மாநில அளவிலான விழாவில் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பேசும் போது தெரிவித்த தாவது:-

தமிழ்நாடு அரசில் ஒவ்வொரு துறைக்கும் ஒரு பெருமை உண்டு. எந்த துறையையும் குறைத்து மதிப்பிட முடியாது. அந்த வகையில் கூட்டுறவுத்துறை என்றால் அதற்கு பல சிறப்புகள், பல பெருமைகள் உண்டு என்றால் அது மிகையாகாது. நம்முடைய மாநில அளவில் மட்டுமல்ல, தேசிய அளவிலும் நம்முடைய கூட்டுறவுத்துறைக்கு சிறப்புகள் உண்டு என்பதை நான் இங்கு குறிப்பிட கடமைப்பட்டுள்ளேன். இந்தியாவில், தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு நிறுவனங்கள், வங்கிகள் மிக நீண்ட வரலாற்றையும், சிறந்த பராம்பரியத்தையும் கொண்டதாகத் திகழ்கிறது. எவ்வாறு தமிழர்களின் கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு எல்லாம் நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டுள்ளதோ அதே போன்று நம் கூட்டுறவுத்துறையும் வரலாற்றைக் கொண்டுள்ளது. உலக அளவில் இங்கிலாந்து நாட்டில் துவக்கப்பட்டிருந்தாலும், இந்தியாவில் முதல் கூட்டுறவு சங்கம் 1904-இல் திருவள்ளூவர் மாவட்டத்தில் “திரூர்” என்ற கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இன்றைக்கு 125 ஆண்டுகளை எட்டிப்பிடித்த ஒரு நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டது கூட்டுறவுத்துறை.

கூட்டுறவின் தத்துவமான ‘கூட்டுறவே நாட்டுயர்வு’, ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்பதை மெய்ப்பின்கின்ற துறைதான் இந்த கூட்டுறவுத்துறை. கிராமங்கள் தொடங்கி பெரு நகரங்கள் வரையில் உள்ள மக்களின் பொருளாதாரத் தேவையை பூர்த்தி செய்கின்ற துறையாக கூட்டுறவுத்துறை விளங்கி வருகின்றது. எல்லாத் தொழில்களுக்கும் முதலீடு தேவை. தொழில் சிறக்க குறைந்த வட்டியில், சில நேரங்களில் வட்டியும் இல்லாமல் தொழில் நிறுவனங்களுக்கு முதலீட்டு கடன்களை வழங்கி வருகிறது கூட்டுறவுத்துறை என்பதை பெருமையோடு நினைவுபடுத்த விரும்புகிறேன். அடித்தட்டுமக்களை பொருளாதார ரீதியாக உயர்த்துவதற்காக அவர்களுக்கு தேவையான நிதி உதவிகளை செய்கின்ற அமைப்பு கூட்டுறவு. 30க்கும் மேற்பாட்ட சேவைகளை கூட்டுறவுத்துறை வழங்கி வருகின்றது. மாணவ, மாணவியர்கள் கூட்டுறவுத்துறையின் மூலம் வேலை வாய்ப்பினை பெருவதற்கு பட்டப்படிப்புடன் கூட்டுறவு மேலாண்மை பட்டயப்படிப்பும் அவசியமாகின்றது.

அதற்கான 24 மாவட்டங்களில் கூட்டுறவு மேலாண்மை கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் படித்து வரக்கூடிய மாணவர்களுக்கு வேலைவாய்ப்பினையும் அளித்து வருகின்றது. முதலமைச்சர் பெறுப்பேற்ற பிறகு இதுவரை 17 ஆயிரம் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது இந்த துறை என்பதை பெருமையோடு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கின்றேன். இவ்வாறு அன்றாட மக்கள் வாழ்க்கையில் பின்னிப்பிணைந்த ஒரு அமைப்பு தான் கூட்டுறவுத்துறை. தமிழ்நாட்டில் உள்ள 2 கோடியே 20 லட்சத்திற்கு மேற்பட்ட குடும்பங்களோடு தொடர்புடைய துறை இந்த கூட்டுறவுத்துறை. பொதுமக்களுக்குத் தேவையான குடிமைப் பொருட்களை நியாயவிலைக்கடைகள் மூலம் கொண்டு சேர்க்கும் பணியினையும் கூட்டுறவுத்துறை மேற்கொண்டு வருகின்றது. 37,000 நியாய விலைக் கடைகள் இத்துறையின் மூலம் சிறப்பாக வெற்றிகரமாக நடத்தப்பட்டு, உச்ச நீதிமன்றத்தின் பாராட்டுகளையும், ஒன்றிய அரசின் பாராட்டுகளையும் பெறக்கூடிய அளவில் நிர்வாகம் இன்றைக்கு தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்றால் அது மிகையாகாது என்று குறிப்பிட்டார் அமைச்சர் பெரியகருப்பன்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *