புதுடில்லி, நவ.19 பீகாரில் புதிய அரசு பதவியேற்பு விழாவுக்கு இன்னும் இரண்டு நாட் களே உள்ள நிலையில், சட்டப் பேரவைத் தலை வர் பதவியை கைப் பற்றுவதில் பாஜக மற்றும் அய்க்கிய ஜனதா தளம் இடையே போட்டி உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது. பீகார் சட்ட மன்றத் தேர்தல் முடிவடைந்து, தேசிய ஜனநா யகக் கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. நிதிஷ்குமார் 10ஆவது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார்.
புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா வரும் 20ஆம் தேதி பாட்னாவில் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடியும் விழாவில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, கூட்டணிக் கட்சிகளிடையே முக்கிய துறைகளைப் பங்கீடு செய்வது குறித்த பேச்சுவார்த்தைகள் டில் லியில் தீவிரமாக நடந்து வருகின்றன. இதில், சட்டப் பேரவைத் தலைவர் பதவி யாருக்கு என்பதில் இரு பெரும் கட்சிகளுக்கும் இடையே கடும் இழுபறி நீடித்து வருகிறது.
சட்டமன்றத்தில் 89 உறுப்பினர்களுடன் தனிப் பெரும் கட்சியாக உள்ள பாஜக, சட்டப் பேரவைத் தலைவர் பதவியை மீண்டும் தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. ‘முதலமைச்சர் பதவி ஐக்கிய ஜனதா தளத்திற்கு வழங்கப்பட்டுள்ளதால், அதிகாரப் பகிர்வைச் சமநிலைப்படுத்த சட்டப் பேரவைத் தலைவர் பதவியை எங்களுக்கே தர வேண்டும்’ என பாஜக தரப்பு வாதிடுகிறது. மேனாள் சட்டப் பேரவைத் தலைவரும், துணை முதலமைச்சரு மான விஜய் குமார் சின் ஹாவின் பெயர் மீண்டும் இந்தப் பதவிக்குப் பரிசீலிக் கப்படுகிறது.
ஆனால், 85 இடங் களைக் கொண்டுள்ள அய்க்கிய ஜனதா தளம், இம்முறை சட்டப் பேர வைத் தலைவர் பதவியை விட்டுக் கொடுப்பதாக இல்லை. ‘ஏற்கனவே சட்ட மேலவைத் தலைவர் பதவி பாஜகவிடம் உள்ளதால், இரு அவைகளிலும் அதி காரத்தைச் சமமாகப் பங்கிடும் வகையில், சட்டமன்ற சட்டப் பேரவைத் தலைவர் பதவியை எங்களுக்கே ஒதுக்க வேண்டும்’ என்பது அக்கட்சியின் வாதமாக உள்ளது. மேலும், அமைச்சரவையில் ஒவ்வொரு ஆறு சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும், தலா ஒரு அமைச்சர் பதவி என்ற பார்முலா வகுக்கப்பட்டுள்ள நிலை யில், துணை முதலமைச்சர் பதவியை பாஜகவிற்கு ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று டில்லியில் நடை பெறும் இறுதிக்கட்ட பேச்சு வார்த்தையில் இந்த விவகாரத்திற்குத் தீர்வு காணப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.
