தி.மு.க. எம்.பி.க்களுக்கு இடமில்லை
புதுடில்லி, நவ.13- பிரதமர் மற்றும் முதலமைச் சர்களை பதவி நீக்கம் செய்யக்கோரும் மசோதாவை ஆய்வு செய்யும் நாடாளுமன்ற கூட்டுக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் அபராஜிதா சாரங்கி எம்.பி. தலைமையில் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் அ.தி.மு.க. உறுப்பினர் இடம் பெற்றுள்ளார். அதே நேரம் தி.மு.க. உறுப்பினருக்கு இடம் கொடுக்கப்படவில்லை.
திருத்த மசோதா
கடுமையான குற்றச்சாட்டில் சிக்கும் பிரதமர் அல்லது முதலமைச் சர்கள் மற்றும் அமைச்சர்கள் கைது செய்யப்பட்டாலோ அல்லது அவர்கள் தொடர்ந்து 30 நாட்கள் காவலில் வைக்கப் பட்டாலோ அவர்களை பதவி யில் இருந்து நீக்குவதற்கான அரசியலமைப்பின் 130-ஆவது திருத்த மசோதா கடந்த ஆகஸ்டு மாதம் 20-ஆம் தேதி மழைக்கால கூட்டத்தொடரில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தன. இதனைத் தொடர்ந்து இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
31 பேர் குழு
இந்தநிலையில் பா.ஜனதா நாடாளுமன்ற உறுப்பினர் அபராஜிதா சாரங்கி தலைமையில் மக்களவையில் 21 பேரும், மாநிலங் களவையில் 10 பேரும் அடங்கிய 31 பேர் கொண்ட கூட்டுக்குழு அமைக் கப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்று (12.11.2025) வெளி யானது.
கூட்டுக்குழுவில் தலைவர் தவிர பா.ஜனதா நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர், பா.ஜனதா கூட்டணி நாடாளுமன்ற உறுப் பினர்கள் 11 பேர், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 4 பேர் உள்ளனர்.
சி.வி.சண்முகம்
தேசியவாத காங்கிரஸ் நாடாளு மன்ற உறுப்பினர் சுப்ரியா சுலே, அகாலிதளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சிம்ரத் கவுர், ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதீன் ஒவைசி, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிரஞ்சன் ரெட்டி ஆகியோர் எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆவர். இதில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் சேர்க்கப்படவில்லை. அ.தி.மு.க.வில் இருந்து சி.வி.சண்முகம் எம்.பி. இடம் பெற்று உள்ளார். இந்த குழு விரைவில் ஆய்வைத் தொடங்கி, வருகிற குளிர் கால கூட்டத்தொடரில் அறிக்கை சமர்ப்பிக்கும் என தெரிகிறது.
