மொழி அழிவைத் தடுத்த முதலமைச்சர்!

12 Min Read

“மொழிதான் ஓர் இனத்தின் அடையாளம். மொழிதான் ஓர் இனத்தின் உயிர். மொழிதான் ஒரு மனிதரின் உணர்ச்சிக்கு உணவு. மொழிதான் ஒருவரின் சிந்தனைக்கு உரம். எனவே, தாய் மொழிப் பற்று என்பது தாய் மொழி படிப்பாக, தாய் மொழி அறிவாக மாற வேண்டும் என்பதே ஆசை.”

Contents
 ‘தொல்குடி மின்னணுக் காப்பகம்’ தேசிய கருத்தரங்கம்வெறும் தகவல்கள் அல்ல, நிழற்படங்கள் அல்ல, நமக்கான சொத்து!மொழியும், பண்பாடும் காலம் முழுவதும் வரலாறு நெடுகிலும் நிலைத்து நின்று வாழ வேண்டும்!பணத்தால், அதிகார பலத்தால் மட்டுமே ஒரு மொழியை வாழ வைக்க முடியாது!இந்த நூற்றாண்டிற்குள் 1,500 மொழிகள் மறைந்துபோய்விடுமாம்!அதிக நிதியை ஒதுக்கியதால் மட்டுமே சமஸ்கிருதம் வளர்ந்துவிடாதுபழங்குடியின மாணவர்களை உயர்கல்வி படிக்க வைக்கும் முதலமைச்சர்இடைநிற்றல் இல்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது!தமிழ்நாட்டில் உயர் கல்வி பெறும் பழங்குடியின மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை உயர்ந்துவருகிறது!

– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 ‘தொல்குடி மின்னணுக் காப்பகம்’

பிற இதழிலிருந்து...

2024-2025 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின்போது தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகவும் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். “தமிழ்நாட்டிலுள்ள பழங்குடியின மக்களுடைய மொழி அழியும் நிலையில் இருக்கிறது. அதை அழியவிடக் கூடாது, பாதுகாக்க வேண்டும். அழியும் நிலையிலுள்ள மொழிக்குப் புத்துயிர் கொடுக்க வேண்டும். பழங்குடியின மக்களின் வாய்மொழிப் பாடல்களையும், பேச்சு வழக்கினையும் பாதுகாக்க வேண்டும். மொழி இழப்பு என்பது கலாச்சார, பண்பாட்டு இழப்பு. நமது கலாச்சார, பண்பாட்டு செல்வங்களை இழக்கக் கூடாது. அதைப் பாதுகாக்க வேண்டும். அதற்காக இரண்டு கோடி ரூபாய் ஒதுக்குகிறேன். அதன் மூலம் ‘தொல்குடி மின்னணுக் காப்பகம்’ உரு வாக்கப்படும். அதன் மூலம் தோடர் சமூகத்தின் சடங்குப் பாடல்கள், இருளர் சமூகத்தின் மரபுவழி மருத்துவ நடைமுறைகள், காணிக்காரர் சமூகத்தின் கதை சொல்லும் ஓவியங்கள், வாய்மொழிப் பாடல்கள், வாய்மொழிக் கதைகள், நம்பிக்கைகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படும். அதற்காக www.tholkudi.in இணையதளம் உருவாக்கப்படும். பழங்குடி மொழிகளை ஆவணப்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் (SPPEL) என்ற அமைப்பு உருவாக்கப்படும். நான் அறிவித்த இந்தப் பணிகளை எல்லாம், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இவ்வாண்டே செய்து முடிக்க வேண்டும்” என்று அறிவித்தார்.

 தேசிய கருத்தரங்கம்

முதலமைச்சரின் அறிவிப்பிற்கிணங்க ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை 2024, செப்டம்பர் 27, 28 ஆகிய தேதிகளில் ‘தமிழகப் பழங்குடியினரின் கலாச்சாரத்தைப் பாதுகாத்தல் மற்றும் வளப்படுத்துதல்’ என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கை நடத்தியது. இந்தக் கருத்தரங்கில் இந்தியா முழுவதும் இருக்கிற மொழியியல் அறிஞர்கள், மானுடவியல் அறிஞர்கள், சமூக விழுமியங்கள் மீது அக்கறை கொண்ட சமூக ஆர்வலர்கள் என்று பலரும் பங்கேற்றனர். கருத்தரங்கில் பேசப்பட்ட கருத்துகளையெல்லாம் தொகுத்து, அதன் அடிப்படையில், அழியும் நிலையிலுள்ள தமிழ்நாடு பழங்குடியின மக்களின் மொழியையும் பண்பாட்டையும் வாய்மொழிப் பாடல்களையும் வாய்மொழிக் கதைகளையும் பாதுகாப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுவருகிறது. அந்த முயற்சியில் வெற்றியும் பெற்றிருக்கிறது.

வெறும் தகவல்கள் அல்ல,
நிழற்படங்கள் அல்ல, நமக்கான சொத்து!

2025 ஆகஸ்ட் 9ஆம் தேதி உலகப் பழங்குடியினர் நாளன்று, ‘தொல்குடி மின்னணுக் காப்பக’த்தைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். இந்தத் தொல்குடி மின்னணுக் காப்பகத்தின் மூலம் தமிழ்நாட்டின் பழங்குடியின மக்களான காணிக்காரர், நரிக்குறவர், இருளர், தோடர், குறும்பர், எரவல்லா இன மக்களுடைய பேச்சு மொழி, மரபுவழி பண்பாடு, கலாச்சாரம், பாட்டு, இசை, நடனம், பழக்கவழக்கம், சடங்கு முறைகள், வழிபாட்டு முறைகள், அதற்காகப் பயன்படுத்திய பொருட்கள், கருவிகள் ஆகிய அனைத்தும் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு விட்டதென்றே சொல்லலாம். தமிழ்நாட்டில் இருக்கிற பழங்குடியின மக்களின் வாழ்வை முழுமையாக அறிவதற்கு, படிப்பதற்கு www.tholkudi.in என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. சேகரித்து வைக்கப்பட்டிருப்பவை வெறும் தகவல்கள் அல்ல, நிழற்படங்கள் அல்ல, நமக்கான சொத்து, பெருமிதம்.

’தொல்குடி மின்னணுக் காப்பகம்’ அமைப்பதிலும் www.tholkudi.in இணையத்தை உருவாக்குவதிலும், இணையத்தில் பழங்குடியின மக்களுடைய வாழ்க்கை சார்ந்த அனைத்துத் தரவுகளையும் தொகுத்துப் பதிவேற்றம் செய்ததிலும், அமைச்சர் மதிவேந்தன், அரசு செயலாளர் லட்சுமி பிரியா, இயக்குநர் அண்ணாதுரை ஆகியோரின் அக்கறையும் ஈடுபாடும் அர்ப்பணிப்பும் போற்றத்தக்கது. இனி தமிழ்நாட்டின் பழங்குடியின மக்களுடைய மொழியும், பண்பாடும் காலம் முழுவதும் வாழும். குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழ்ந்த இனக்குழு வாழ்க்கையைப் படிக்கிறோம். பண்பாட்டுப் படிப்பு,கலாச்சாரப் படிப்பு, இதுவே உண்மையான படிப்பு.

மொழியும், பண்பாடும் காலம் முழுவதும் வரலாறு நெடுகிலும் நிலைத்து நின்று வாழ வேண்டும்!

மொழியையும், பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் ஏன் பாதுகாக்க வேண்டும்? தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் இதற்குக் கூடுதல் அக்கறையும் கவனமும் செலுத்தினார் என்பதை அறிய வேண்டும். ஒரு மனிதனுக்கு உயிர் எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு அவன் பேசுகிற, அவன் வாழ்கிற சமூகம் பேசுகிற மொழி, அந்த மொழியில் இருக்கிற இலக்கியம் முக்கியமானது. தனக்கென்று ஒரு மொழியும், இலக்கியமும் இலக்கணமும் இல்லாத மனிதன் கிட்டத்தட்ட ஆடையற்ற மனிதனுக்குச் சமம். தமிழ்நாட்டின் பழங்குடியின மக்கள் ஆடையற்ற மனிதர்களுக்குச் சமமாக வாழக் கூடாது, அவர்களுடைய மொழியும், பண்பாடும் காலம் முழுவதும் வரலாறு நெடுகிலும் நிலைத்து நின்று வாழ வேண்டும் என்ற நோக்கில்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதற்காக அக்கறை கொண்டிருக்கிறார்.

தான் நினைப்பதைப் பிறரிடம் சொல்ல வேண்டும், பிறர் சொல்வதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் எழுந்த போதுதான் பேச்சு மொழி உருவாகி இருக்க வேண்டும். சத்தத்தை எழுப்பி தன் கருத்தை வெளிப்படுத்தி இருக்க வேண்டும். சத்தம் அல்லது ஒலி என்பதுதான் பேச்சு. அல்லது மொழி என்பது. பிற விலங்குகளிடமிருந்து எந்தவிதத்தில் மனிதன் மேம்பட்டவன், வேறுபட்டவன் என்பதற்கு அவன் பேசுகிற மொழியும், எழுதுகிற மொழியும்தான் காரணம். மொழி ஏன் முக்கியமானது, அதை ஏன் பாதுகாக்க வேண்டும், மனிதன் எப்போது பேசினான் என்பதை யாராலும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

1996இன் கணக்கெடுப்பின்படி உலகில் 6,703 மொழிகள் பேசப்பட்டதாக ஆய்வுகள் சொல்கின்றன. அதன்படி அமெரிக்கா கண்டத்தில் 1000–த்துக்கும் அதிகமான மொழிகளும் ஆசியக் கண்டத்தில் 2,165 மொழிகளும், ஆப்பிரிக்கக் கண்டத்தில் சுமார் 2,011 மொழிகளும் பேசப்பட்டதாகச் சொல்லப்படுகின்றன. இந்தப் புள்ளிவிவரங்கள் இப்போதும் அப்படியே இருக்கின்றன என்று சொல்ல முடியாது. உலக மயமாக்கலின் காரணமாக, இடப்பெயர்வின் காரணமாகப் பல பேச்சு மொழிகள் வேகமாக அழிந்துவருகின்றன. இந்திய ஒன்றிய அரசுகூட ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு என்ற முழக்கத்தை முன்னிறுத்துகிறது. இந்த முழக்கம் ஹிந்திப் பண்பாட்டை நிலைநிறுத்தவும், பல தேசிய இனங்களுடைய மொழியை, பண்பாட்டை அழிப்பதற்குமான முயற்சியே, இது போன்ற சூழ்ச்சிகளிலிருந்து மொழியை, பண்பாட்டை எப்படிக் காப்பாற்ற முடியும்?தாய் மொழி பேசுபவர்களுக்குச் சாதகமான சூழலை உருவாக்குதல், கல்வி நிலையங்களில் பாடத் திட்டத்தை உருவாக்குதல், சிறுபான்மை மொழிகளைப் பாதுகாக்க, கொள்கைகளை வகுத்தல், நிதி ஒதுக்கீடு செய்தல், சிறுபான்மை மொழியை மதிக்கும் அமைப்புகளை உருவாக்குதல் போன்ற காரியங்களால்தான் அழியும் மொழிகளைத் தக்க வைக்கவும், பாதுகாக்கவும் முடியும். மொழியைப் பராமரித்தல், ஆவணப்படுத்துதல், இலக்கண சொல்லகராதி, வாய்மொழி மரபுகளை ஆவணப்படுத்துதல் போன்ற காரியங்கள்தான் அழியும் நிலையிலுள்ள மொழிக்குப் புத்துயிர் அளிக்கும். அப்படியான பணியைத்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் செய்து வருகிறார். இந்த முயற்சியில் மொழியியலாளர்கள், பூர்வீகச் சமூகங்கள், அரசுசாரா அமைப்புகள், யுனெஸ்கோ போன்ற பன்னாட்டு அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றன.

பிற இதழிலிருந்து...

பணத்தால், அதிகார பலத்தால் மட்டுமே
ஒரு மொழியை வாழ வைக்க முடியாது!

‘‘உலகின் தொன்மையான மொழிகளான சமஸ்கிருதம், கி.மு. 1500 ஆண்டுகளுக்கு முந்தையது. கிரேக்கம், கி.மு.1450 ஆண்டுகளுக்கு முந்தையது. சீனம், கி.மு. 1250 ஆண்டுகளுக்கு முந்தையது. எபிரேயம், கி.மு. 1000 – கி.பி. 200 ஆண்டுகளுக்கு முந்தையது’’ என்று மொழியியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.தமிழ் மொழியின் வயது 3500 ஆண்டுகளுக்கு முந்தையது என்று அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டாலும் அது எதனால் இன்னும் உயிர் வாழ்கிறது என்றால் அது பேசும் மொழியாகவும் இருக்கிறது, இலக்கிய, இலக்கண மொழியாகவும் இருப்பதால்தான். சமஸ்கிரு தம் எப்போதும் பொதுமக்கள் பேசும் மொழியாக இருந்ததில்லை. வழிபாடு, சடங்குகளில் மட்டுமே பயன்படுத்தப்படுகிற மொழியாக இருந்தது, இருக்கிறது. மக்களால் பேசப்படுகின்ற மொழி மட்டும்தான் வாழும். சமஸ்கிருதம் இந்தியாவில் வெகுமக்களால் பேசப்படுகின்ற மொழியாக இல்லை. பணத்தால், அதிகார பலத்தால் மட்டுமே ஒரு மொழியை வாழ வைக்க முடியாது.

மொழி மனிதர்களின் தொடர்புக்கானது மட்டுமல்ல, வாழ்விற்கானது. அந்த மக்களின் அடையாளத்திற்கானது. திராவிட மொழிக் குடும்பத்திலேயே மிகவும் பழை மையானது தமிழ். சில மொழிகள் வெறும் பேச்சு மொழிகளாக மட்டுமே இருக்கின்றன. அதனால், எளிதில் மறைந்து போகின்றன. சில மொழிகள் இன்றும் வீட்டிற்குள்ளேயே பேசப்படும் மொழிகளாக இருக்கின்றன.

நீலகிரி மலையில் வசித்துவரும் தோடா மக்களால் பேசப்படும் மொழி தோடா. இம்மொழியைப் பேசக்கூடியவர்கள் தற்போது அதிக எண்ணிக்கையில் இல்லை. அதனால் அம்மொழி அழிவின் விளிம்பிற்கு வந்துவிட்டது. அதே மாதிரி ‘கோட்டா’ என்ற மொழியும் படுகர் இன மக்களால் பேசப்படும் ‘படுகா’ என்ற மொழியும், இருளர் இன மக்கள் பேசும் ‘இருளா’ என்ற மொழியும் அழியும் நிலைக்கு வந்துவிட்டன. பழங்குடியின மக்களுடைய மொழி மட்டும்தான் அழிந்து வருகின்றன என்று சொல்லிவிட முடியாது. பழங்குடியின மக்கள் தமிழில் பேச அதிகம் விரும்புகின்றனர் என்பதும் மேற்சொன்ன பழங்குடியின மொழிகள் அழிவிற்குக் காரணமாக இருக்கின்றன. இன்றைய தலைமுறையினர் ஆங்கிலத்தில் பேசுவதையே அதிகம் விரும்புகின்றனர். கல்வி மற்றும் பொது வாழ்வில் பயன்படுத்தும் மொழியின் பரவலும், தாக்கமும் சிறுபான்மை மொழிகளை அழிவை நோக்கி நகர்த்துகின்றன. எழுத்து வடிவம் இல்லாத பல நாடோடி இன மக்களுடைய மொழிகள் அழிவதைத் தவிர்க்க முடியாது. அதே மாதிரிதான் நீலகிரி மலையில் பேசப்பட்டு வந்த ‘எரவல்லா’ என்ற பழங்குடியின மொழி கிட்டத்தட்ட அழிந்துவிட்டது என்றே சொல்லலாம்.

தமிழ்நாட்டில் வாழும் சவுராஷ்டிரா இன மக்களால் பேசப்பட்டு வந்த மொழி சரிவைக் கண்டுள்ளது. தஞ்சாவூர் பகுதியில் வாழ்ந்த மராத்தியர்கள் பேசிய மொழியும் இன்று இல்லை என்று சொல்லும் அளவிற்கு வந்துவிட்டது. ஓர் இனம் தனக்கான மொழியை இழக்கிறது என்றால், அந்த இனம் தனக்கான கலாச்சார அடையாளத்தை இழக்கிறது என்று அர்த்தம்.

பிற இதழிலிருந்து...

இந்த நூற்றாண்டிற்குள்
1,500 மொழிகள்
மறைந்துபோய்விடுமாம்!

மொழி வளர்ச்சியிலும், அழிவிலும் அரசியல் பொரு ளாதாரம் போன்ற காரணிகள் முக்கிய பங்காற்றுகின்றன. மொழி பயன்பாட்டிலும் ஆதிக்கம் செய்கிற மொழிகள் இருக்கின்றன. ஆதிக்கத்திற்குட்படுகிற, அழிந்துபோகிற சிறுபான்மை மொழிகளும் இருக்கின்றன. உலகில் பேசப்படுகின்ற மொழிகளில் இந்த நூற்றாண்டிற் குள்1,500 மொழிகள் மறைந்துபோய்விடும் என்று மொழியியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

அதிக நிதியை ஒதுக்கியதால் மட்டுமே
சமஸ்கிருதம் வளர்ந்துவிடாது

ஹிந்தி எதிர்ப்பு என்ற நெருப்பு தமிழ்நாட்டில் ஏன் இன்றுவரை கனன்று கொண்டிருக்கிறது என்பதை நாம் அறிவோம். ஹிந்தியை எந்த விதத்திலாவது தமிழ்நாட்டிற்குள் புகுத்திவிட வேண்டும் என்று விரும்புகிற ஒன்றிய அரசின் நோக்கத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். புதிய கல்விக் கொள்கையை (National Educational Policy) ஏன் ஒன்றிய அரசு கொண்டுவர முயல்கிறது? இது ஒரு வகையான மொழித் திணிப்புத்தான். சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு ஒன்றிய அரசு கடந்த ஆண்டு ஒதுக்கிய நிதி எவ்வளவு? தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஒதுக்கிய நிதி எவ்வளவு? இந்தப் பாரபட்சம் எதனால்? அதிக நிதியை ஒதுக்கியதால் மட்டுமே சமஸ்கிருதம் வளர்ந்துவிடாது.

Central Institute of Indian Languages நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் டி.ஜி.ராவ், “இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளில் மட்டும் 220 மொழிகள் அழிந்துள்ளன” என்று கூறியிருக்கிறார். “இந்தியாவில் இருக்கின்ற மொழிகளில் 197 மொழிகள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன” என்று UNESCO அறிவித்துள்ளது. இமய மலையிலும் அதனை ஒட்டியுள்ள பிரதேசங்களிலும் வாழும் பழங்குடியின மக்களுடைய மொழிகளான அகோம், ஆண்ட்ரோ, ரெங்காஸ், செங்மாயி, டோல்சா போன்ற மொழிகள் முற்றிலுமாக அழிந்துவிட்டன.

பழங்குடியின மாணவர்களை
உயர்கல்வி படிக்க வைக்கும் முதலமைச்சர்

பழங்குடியின மக்களுடைய மொழி, பண்பாடு, கதைகள், வாழ்வியல், நெறிமுறைகளைக் காப்பதற்காக மட்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போராடவில்லை. பழங்குடியின மாணவ – மாணவிகளைப் படிக்க வைக்கவும் அவர்களைச் சமூ கத்தில் மேம்பட்ட நிலைக்குக் கொண்டு வருவ தற்காகவும் போரா டுகிறார். அதற்கான திட்டங்களைக் கொண்டு வருகிறார்.

மலைப்பகுதி யில் வாழக்கூடிய பழங்குடியின மாணவ, மாணவிகள் குடும்பச் சூழல், நிலவியல் காரணிகள், போக்குவரத்துப் பிரச்சினை கள் என்று பல காரணங்களால் பள்ளிக்குச் செல்ல முடியாத சூழலும் இடைநிற்றலும் அதிகரித்து வருவதைத் தடுப்பதற்காக ‘தொல்குடி திட்ட’த்தைக் கொண்டுவந்தார். இந்தத் திட்டத்தின் அடிப்படையான நோக்கம் பழங்குடியின குடியிருப்புகளில் கல்வி மற்றும் சுகாதார சேவைகளுக்கான கட்டமைப்பை வலுப்படுத்து வதுதான். அதன் அடிப்படையில் உண்டு உறைவிடப் பள்ளி மாணவ, மாணவிகளுக்காக 26 வாகனங்கள் வாங்கப்பட்டன.

இடைநிற்றல் இல்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது!

திருச்சி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் செயல்பட்டுவரும் பள்ளிகளுக்கு வாகன வசதி செய்யப்பட்டது. இந்த ஆறு மாவட்டங்க ளில் மட்டும் 74 உண்டு உறைவிடப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 3,600 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலை ‘இன்னாடு’ என்ற கிராமத்தில் வாகன வசதியை ஏற்படுத்தித் தந்ததன் மூலம் பள்ளியில் சேரும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இடைநிற்றல் இல்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது.

தமிழ்நாட்டின் முதலமைச்சர் பழங்குடியின மாண வர்கள் கல்வி நலனில் காட்டும் அக்கறையைப் பற்றியும் பழங்குடியின செயலாளர் லட்சுமி பிரியா, இயக்குநர் அண்ணாதுரையின் செயல்பாடுகளைப் பாராட்டி, ‘ஆனந்தவிகடன்’ இதழும், ‘தி இந்து’ நாளேடும் விரிவான கட்டுரைகளை எழுதியிருக்கின்றன. பழங்குடியின மக்கள் மட்டுமல்ல, பொதுச் சமூகமும் ஊடகங்களும் பாராட்டுவது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உழைத்த உழைப்பிற்குக் கிடைத்த வெகுமதி.

பழங்குடியின மக்களுடைய சுகாதார சேவைகளுக்காக நடமாடும் 20 வேன்களும், அவசரகால சேவைகளுக்காக 25 ஆம்புலன்ஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. அக்டோபர் 5, 2025 முதல் இந்த வாகனங்கள் செயல்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டின் முதலமைச்சரும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையும் மேற்கொண்ட சீரிய முயற்சிகளால் இதுவரை இல்லாத அளவிற்குப் பழங்குடியின மாணவ, மாணவிகள் போட்டித் தேர்வு களில் 20 சதவிகிதம் கூடுதலாக வெற்றிப் பெற்றுள்ளனர். வரும் ஆண்டுகளில் இந்த சதவிகிதம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு அளவில் மட்டுமல்ல, இந்திய அளவில் தமிழ்நாட்டு பழங்குடியின மாணவ – மாணவிகள் உயர் கல்வியில் எந்தளவிற்கு முன்னேற்றம் பெற்றுள்ளனர் என்பதையும் அறிய வேண்டும்.

தமிழ்நாட்டில் உயர் கல்வி பெறும் பழங்குடியின மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை உயர்ந்துவருகிறது!

கடந்த ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பழங்குடியின மாணவ – மாணவிகள் தேசிய ஃபேஷன் தொழில்நுட்ப நிறுவனத்தில் 42 பேரும், காலணி வடிவமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தில் 39 பேரும், பிர்லா தொழில்நுட்ப நிறுவனத்தில் (ராஞ்சி) 16 பேரும் சேர்ந்துள்ளனர். இந்திய சுற்றுலா பயண மேலாண்மை நிறுவனத்தில் 10 மாணவர்களும் மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில் நிறுவனத்தில் 9 பேரும் சேர்ந்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 பேரும், பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் 8 பேரும் உயர் கல்வி பயில்வதற்காகச் சேர்ந்துள்ளனர். அதோடு இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம், பகல்பூர், நேஷனல் இன்ஸ்டிடியூட் அஃப் ஹேண்லூம், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் எலக்ட்ரானிக்ஸ் கோரக்பூர் நிறுவனங்களிலும் மாணவர் சேர்க்கை நடை பெற்றுள்ளது. இந்திய கடல்சார் நிறுவனத்தில் 6 பேரும், ராஜீவ் காந்தி பெட்ரோலிய நிறுவனத்தில் 4 பேரும் சேர்ந்துள்ளனர். இப்படிப் பட்டியலிட்டுகொண்டே போகலாம். அந்தளவிற்குத் தமிழ்நாட்டில் உயர் கல்வி பெறும் பழங்குடியின மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை உயர்ந்துவருகிறது.

பழங்குடியின மாணவ – மாணவிகள் ஆரம்பக் கல்வி மட்டுமல்ல, உயர் கல்வி பெறுவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், அமைச்சர் மதிவேந்தனும், துறை யின் செயலாளர் லட்சுமி பிரியாவும், இயக்குநர் அண்ணாதுரையும் பெரும் முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அனைவருக்கும் சம வாய்ப்புகளை உருவாக்கித் தருவதுதானே சமூக நீதி, சமநீதி என்பது. கல்வியில் சமூக நீதியை நிலைநாட்டிய விதத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சரும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையும் இந்தியாவிலுள்ள பிற மாநிலங்களுக்குத் திசைகாட்டிகளாக இருக்கின்றனர்.

நன்றி: ‘முரசொலி’, 12.11.2025

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *