2024 ஜூன் 20 அன்று, பீகார் அரசின் வேலை வாய்ப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் ஒதுக் கீட்டை 50 சதவீதத்திலிருந்து 65 சதவீதமாக உயர்த் திய சட்டத்தை பீகார் உயர் நீதிமன்றம் அரசியலமைப்புக்கு முரணானது எனக் கூறி ரத்து செய்தது.
1992இல் வழங்கப்பட்ட இந்திரா சகானி தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட 50% உச்சவரம்பை மீறியதால், நீதிமன்றம் அந்தச் சட்டத்தை செல்லாததாக அறிவித்தது. பீகார் அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாலும், உச்ச நீதிமன்றம் அந்தத் தீர்ப்பை நிறுத்த மறுத்ததால், 65% ஒதுக்கீடு தற்போதைக்கு நிறுத்தப்பட்டு, முந்தைய ஒதுக்கீட்டு நிலை மீண்டும் அமலுக்கு வந்துள்ளது.
பின்னர், உச்ச நீதிமன்றம் ஒன்றிய அரசு மற்றும் பீகார் அரசுக்கு அறிவிக்கை (நோட்டீஸ்) அனுப்பியிருந்தாலும், இதுவரை ஒன்றிய அரசின் பக்கம் எந்தத் தெளிவான பதிலும் வரவில்லை. வழக்கு நிலுவையில் உள்ளது.
இதே நேரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி பிரசாத் யாதவ், ஒதுக்கீட்டை 85% ஆக உயர்த்தும் புதிய சட்டத்தை நிறைவேற்றுவதற்காக பீகார் சட்டமன்றத்தின் ஒரு ‘சிறப்பு’க் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும், அந்தச் சட்டத்தை அரசியலமைப்பின் ஒன்பதாம் அட்டவணையில் சேர்த்தால் அது நீதித்துறை சோதனையிலிருந்து பாதுகாப்பாக இருக்கும் என்றும் வலியுறுத்தினார் — இதே பாதையை தமிழ்நாடு பல ஆண்டுகளுக்கு முன் தன் 69% ஒதுக்கீட்டை நிலைநிறுத்த பயன்படுத்தியது.
இந்நிலையில் பல கேள்விகள் எழுகின்றன:
- ஏன் நிதீஷ் குமார் அரசு அதே வழியில் சென்று, பீகாரின் சமூகநீதி அடித்தளத்தை பாதுகாக்க முயலவில்லை?
- உச்ச நீதிமன்றத்தின் அறிவிக்கைக்குப் (நோட்டீஸ்) பிறகும் ஏன் ஒன்றிய அரசு இதுவரை மவுனமாக உள்ளது? மேலும்,
- ஏன் எதிர்க்கட்சிகள் இந்த முக்கியமான ஒதுக் கீட்டு பிரச்சினையைத் தேர்தல் அரங்கில் முழங்கவில்லை?
— இது கோடிக்கணக்கான பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட சமூகங்களின் உரிமைகளுடன் நேரடியாகப் பிணைந்துள்ளதல்லவா?
இந்த மவுனம் சின்னச்சின்ன அரசியல் கணக்கீட்டின் வெளிப்பாடு அல்ல; இது பீகாரின் மண்டல் அரசியலும் சமூகநீதியும் சார்ந்த பாரம்பரியத்தின் மங்கலாகும். தேர்தல் சத்தத்தின் நடுவே, சமூகநீதி மீதான போராட்டத்தின் குரல் மவுனமாகி நிற்கிறது — இதுவே இன்று பீகாரின் அரசியல் வரலாற்றில் மிகக் கவலைக்குரிய தருணமாகும்.
